தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேவையற்ற தலையீடு!

நடைமுறைக்கு ஒவ்வாத சட்டதிட்டங்கள் நாணயமானவர்களையும் தவறிழைக்கத் தூண்டும் என்பார் மூதறிஞர் ராஜாஜி.

Updated On :11 ஏப்ரல் 2014, 7:45 pm

நடைமுறைக்கு ஒவ்வாத சட்டதிட்டங்கள் நாணயமானவர்களையும் தவறிழைக்கத் தூண்டும் என்பார் மூதறிஞர் ராஜாஜி. தேர்தல் ஆணையம் நல்லெண்ணத்துடன் செயல்படுத்த நினைக்கும் சில விதிமுறைகள், வேட்பாளர்களைப் பொய்யான தகவல்களைத் தாக்கல் செய்யவும், பிரசாரத்தின்போதே தவறிழைக்கவும் தூண்டுவனவாக இருப்பது வேதனைக்குரியது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதையும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த இயலாது என்று மறுத்துரைத்ததையும், கடைசியில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளுக்குத் தலைவணங்கியதையும் ஊடகங்கள் பரபரப்புச் செய்தியாக வெளியிட்டன. தேர்தல் ஆணையத்திடம் முதல்வர் மம்தா பானர்ஜி முரண்டு பிடித்தது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால், அவர் எழுப்பிய கேள்வியும், தேர்தல் ஆணையத்தின் செயல் வரம்பு மீறியது என்கிற குற்றச்சாட்டும் நியாயமானது என்றுதான் கூறவேண்டும்.

தேர்தல் ஆணையத்துடனான முதல்வர் மம்தா பானர்ஜியின் முரண்பாடு, ஒரு சில அதிகாரிகளை ஆணையம் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தது தொடர்பானது. மேற்கு வங்கத்தில் மட்டும்தான் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதில்லை. உத்தரப்பிரதேசத்தில் 44 அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ஒடிஸா மாநிலங்களிலும் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த மாநில அரசுகளும் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்திருக்கின்றன.

பஞ்சாப் மாநிலத்தில் காவல் துறைத் தலைவரே மாற்றப்பட்டிருக்கிறார். சென்னையில் மாநகரக் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றப்பட்டு திரிபாதி நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்படி தேர்தல் ஆணையத்தால் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது எல்லாமே காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் என்பது தற்செயலாக அமைந்திருக்கிறதே தவிர, மத்திய அரசின் தலையீட்டால் அல்ல என்பதிலும் சந்தேகம் இல்லை.

தேர்தல் ஆணையம் சட்டப்படி தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைத்தான் பயன்படுத்துகிறது. தேர்தல் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், தனது கட்டுப்பாட்டின்கீழ் முறையாகவும் முறைகேடுகள் இல்லாமலும் நடத்தவும் அரசியல் சட்டம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 28(அ) பிரிவு, காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவும், முறைகேடுகள் இல்லாமல் தேர்தல் நடப்பதற்கு ஏதுவாக எந்தவொரு அதிகாரியை மாற்றவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது.

மூன்று ஆண்டுக்கு மேலாக ஒரு இடத்தில் இருக்கும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களையும், தங்களது சொந்த ஊரில் பணிபுரிபவர்களையும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னால் மாநில அரசுகள் ஆய்வு செய்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய வழிகாட்டுதல் தெளிவாகவே வலியுறுத்துகிறது. இதை ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் பின்பற்றுவதில்லை என்பதுடன் அரசு இயந்திரத்தைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிகளையும் மேற்கொள்வதை வழக்கமாகி விட்டிருப்பதும் உண்மை.

தேர்தல் நடைமுறைகள் வெகுவாக மாறிவிட்டிருக்கின்றன. மின்னணு வாக்குப்பதிவும், கழுகுப் பார்வையுடன் முறைகேடுகளை உடனுக்குடன் வெளிச்சம் போடும் ஊடகங்களும் தேர்தலில் தவறுகள் நடப்பதைப் பெரிய அளவில் தடுத்துவிடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், நிர்வாகத்தின் துணையுடன் தேர்தல் முடிவுகளைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளவோ, கள்ள வாக்குப் பதிவின் மூலம் தங்களது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளவோ ஆளும் கட்சிகளால் இயலாத நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்த சூழலில், அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடம் மாற்றி பந்தாட வேண்டிய அவசியமே இல்லை. மேலும், அப்படி மாற்றப்படும் அதிகாரிகள் நேர்மையானவர்களாக இருந்தால், அவர்களுக்கு அநாவசியமாக ஆளும் கட்சி ஆதரவாளர் என்கிற முத்திரை விழுந்து விடுகிறது. அதிகாரிகளில் பலர் கரை வேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், தேர்தல் ஆணையத்தின் இடமாற்றம் செய்யும் போக்கு, தனது அதிகாரத்தை வெளிச்சம் போட பயன்படுமே தவிர, பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடாது.

மம்தா பானர்ஜியின் எதிர்ப்புக் குரலில் நியாயமும் இருக்கத்தான் செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.