தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேர்தலும் கட்டுப்பாடுகளும்!

வீட்டு உரிமையாளரின் அனுமதியில்லாமல் சுவரில் வேட்பாளர் விளம்பரம் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டபோது, பல வீடுகளின் சுற்றுச்சுவர்கள் களங்கமற்று சிரித்தன.

Updated On :6 ஏப்ரல் 2014, 8:05 pm

வீட்டு உரிமையாளரின் அனுமதியில்லாமல் சுவரில் வேட்பாளர் விளம்பரம் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டபோது, பல வீடுகளின் சுற்றுச்சுவர்கள் களங்கமற்று சிரித்தன. வேட்பாளரின் பெயர் தாங்கி, வாக்களிப்பீர் வாசகங்களுடன் ஒட்டப்படும் சுவரொட்டிகள் வேட்பாளரின் கணக்கில் சேரும் என்ற அறிவிப்பு வந்தபோது, தேர்தல் சுவரொட்டிகள் காணாமல் போயின. முன்பெல்லாம் ஊர் முழுக்க இறைந்து கிடந்த துண்டு பிரசுரங்கள் இப்போது அரிதாகவே காணப்படுகின்றன. கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனால், அவையே பின்பற்ற முடியாதவையாக இருந்தால் அதனால் பயனிருக்காது.

நள்ளிரவிலும் வீடுதோறும் சென்று வாக்கு கேட்கலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் அண்மையில் அறிவித்திருப்பது, நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை. நள்ளிரவுக்குப் பிறகு ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் தேர்தல் ஆணையம் கூறுகிறதே தவிர, வீடுவீடாக பிரசாரம் செய்யத் தடையில்லை என்று அவர் கூறியிருக்கிறார். அதேசமயம் வீட்டுக்காரர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறுகிறார். இது எப்படி நடைமுறை சாத்தியமாக இருக்கும்?

வேட்பாளர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ள தெருவில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே ஒரு இளைஞர் கூட்டம் சரவெடிகளை வைத்து அனைவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. இவர்கள் எந்தக் கட்சிக்கொடிகளையும் வைத்திருப்பதில்லை. இந்த வேட்பாளருக்காகத்தான் வெடிவெடித்தார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு வெடி வெடித்து உறக்கத்தைக் கெடுக்கிறார்கள்.

அதன் பிறகு வேட்பாளர் அல்லது அவருடைய ஆட்கள் வரும்போது வீட்டுக் கதவுகளை ஒரு சிலர் பலமாகத் தட்டுகிறார்கள். திறக்காமல் இருக்க முடியாது. கதவைத் திறந்தால் நமது கைகளில் எதைத் திணிக்கிறார்கள் என்பதை ஊகிக்கும் முன்பாகவே கூட்டம் அடுத்த வீட்டுக்கு போய்விடுகிறது.

இரவு நேர வாக்கு சேகரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைத் தேர்தல் ஆணையம் புரிந்துகொண்டிருந்தால், பால்காரர், பேப்பர் போடுபவர் பலசரக்குக் கடைக்காரப் பையன் என்று எல்லோரையுமே தேர்தல் ஆணையம் கண்காணித்து, இரவு 10 மணிக்கு மேல் யார் வீட்டுக் கதவையும் தட்டி, தூங்குபவரை எழுப்பி வாக்கு சேகரிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கும்.

அடுத்ததாக, அரசியல் தலைவர் பேசும் பொதுக்கூட்ட மேடையில், வேட்பாளரின் பெயரை உச்சரிக்கக்கூடாது, அவர் மேடையில் இருக்கக்கூடாது, புகைப்படம்கூட இருக்கலாகாது, அப்படி இருந்தால் அந்தப் பொதுக்கூட்ட செலவு முழுவதும் வேட்பாளரின் கணக்கில் சேரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது என்ன அறியாமை?

தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், அந்தந்தத் தொகுதி வேட்பாளரின் பெயரைச் சொல்லாமல், அவர் முகத்தைக் காட்டாமல், வெறும் சின்னத்தை குறிப்பிட்டு வாக்களிப்பீர் என்று சொன்னாலும், பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட தொகுதிக்கான அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதாகத்தானே அர்த்தம்?

பொதுக்கூட்ட மேடை மட்டுமின்றி, வீதிதோறும் வாகனங்களில் சென்று சினிமா கலைஞர்களும், தலைவர்களும் வேட்பாளர்களை உடன்நிறுத்தி பிரசாரம் செய்கிறார்கள். இந்த பிரசாரமும்கூட அனைத்து வேட்பாளருக்குமான சமவாய்ப்பை குலைக்கிறது. இந்தச் செலவு யார் கணக்கில் சேரும்?

தற்போது வேட்பாளராக இருக்கும் ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் தனது சாதனைகளை, தேர்தல் விதிமுறை அமலுக்கு வரும் முன்பாகவே புத்தகமாக அச்சிட்டுவிட்டார். ஆனால் புத்தகத்தின் அட்டையில் வாக்களிப்பீர் என்று சின்னம், வேட்பாளர் பெயர் இருக்கிறது. இந்தப் புத்தகச் செலவு யார் கணக்கில் சேரும்?

ஒவ்வொரு கட்சியிலும் எந்தெந்தத் தலைமை நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரிக்கலாம்? ஒரு தொகுதியில் எத்தனை கூட்டம் நடத்தலாம்? தொலைக்காட்சி வாயிலாக, வாக்கு சேகரிப்பை எத்தனை மணி நேரம் அனுமதிக்கலாம்? தொகுதி வாரியாக வேட்பாளர்களை தொலைக்காட்சி மூலமாகவே அறிமுகம் செய்து எத்தனை மணித்துளி பேசலாம் என்பதையெல்லாம் வரையறுத்தால், பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும். செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையில் தகவல் தொழில்நுட்பத்தை தேர்தல் பிரசாரத்திற்கு முழுமையாக பயன்படுத்த அனுமதிக்கலாம்.

நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் மீறப்படும் என்பதைத் தேர்தல் ஆணையம் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.