மூன்றாவது முயற்சி!
மக்களவைத் தேர்தல் பிரசாரப் பரபரப்பில், ஆப்கானிஸ்தானில் நாளை நடக்க இருக்கும் மூன்றாவது அதிபர் தேர்தல் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறாமல் இருக்கின்றன.


மக்களவைத் தேர்தல் பிரசாரப் பரபரப்பில், ஆப்கானிஸ்தானில் நாளை நடக்க இருக்கும் மூன்றாவது அதிபர் தேர்தல் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறாமல் இருக்கின்றன. மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் கருதப்பட்டாலும், அந்த நாட்டின் அரசியல் நிகழ்வுகளால் தென் ஆசியாவும், அதிலும் குறிப்பாக இந்தியாவும் பெருமளவு பாதிப்புக்கு ஆளாவதால், ஆப்கானிஸ்தானிய அதிபர் தேர்தல் முடிவுகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏறத்தாழ மூன்று கோடி மக்கள்தொகையுள்ள ஆப்கானிஸ்தான், உலகின் 41ஆவது பெரிய நாடு. மக்கள்தொகையில் அதற்கு 42ஆவது இடம். தெற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தான், மேற்கில் ஈரான், வடக்கில் துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு எல்லை சீனாவையும் தொடுகிறது. ஏறத்தாழ இந்தியாவைப் போலவே நீண்ட சரித்திரத்தை உடைய ஆப்கானிஸ்தான் சமீப காலமாகத்தான், பெயருக்காவது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கி இருக்கிறது. அதனால்தான் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கின்ற ஆப்கானிஸ்தானிய அதிபர் தேர்தல் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
நடைபெற இருக்கும் தேர்தல் ஒரு வகையில் திருப்புமுனைத் தேர்தலாக இருக்கக் கூடும். தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு நடந்த இரண்டு தேர்தல்களுமே வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டு, கள்ள வாக்குகள் போடப்பட்டு, தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டு முறையாக நடத்தப்படாததால், அந்தத் தேர்தல்களை ஜன
நாயக முறைப்படி நடந்த தேர்தல்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. 2009இல் நடந்த அதிபர் தேர்தலை, ஒரு தேர்தலாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதே சந்தேகம்தான்.
2009இல் அதிபர் ஹமீத் கர்சாய் முறைகேடுகளின் மூலம்தான் மீண்டும் வெற்றி பெற முடிந்தது என்பதால்தான், அவர் ஆப்கானிய மக்களின் நன்மதிப்பை இழந்ததுடன், அவரது ஆட்சியும் மரியாதை அற்றதாகிப் போனது. ஆனாலும்கூட, பல நூற்றாண்டுகளாக மக்களாட்சி என்பதையே அறியாத ஆப்கானிஸ்தான், பெயருக்காவது ஒரு குடியரசாக இயங்கி வருகிறதே என்பது வரை திருப்தி அடையலாம்.
நடக்க இருக்கும் தேர்தல், இந்த நிலைமைக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. அதற்குக் காரணம், அதிபர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கி இருக்கும் மூன்று வேட்பாளர்களும் சம அளவில் ஆதரவும் செல்வாக்கும் பெற்ற தலைவர்கள். ஹமீத் கர்சாயின் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர்
களாக இருந்த அப்துல்லா அப்துல்லா, சல்மே ரஸýல் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அஷ்ரப் கனி ஆகிய மூவரும்தான் போட்டியிலிருக்கும் வேட்பாளர்களில் முன்னணியில் இருப்பவர்கள். மூவருமே சம பலமுடையவர்கள் என்பதால், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன் யாருமே வெற்றி பெற்றுவிட முடியாது என்பதுதான் நிஜநிலைமை.
தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தலிபான்கள் மிகப்பெரிய பங்கு வகிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்திருக்கும் தலிபான்கள் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் ஆப்கானியர்கள் பெருமளவில் பங்கு கொள்வதைத் தடுக்க நிச்சயம் முயற்சிப்பார்கள். தேர்தலில் பெருமளவிலான மக்கள் வாக்களிக்க முற்பட்டால்தான் அது தலிபான்களின் ஜனநாயக விரோதக் கண்ணோட்டத்திற்கு எதிரான தீர்ப்பாகவும் இருக்கும்.
கடந்த தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவும், கள்ள வாக்கு பதிவாகாமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியிலும் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், 2009 தேர்தலைப்போல திட்டமிட்ட தேர்தல் முறைகேடுகளுக்கான சாத்தியம் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான ஆப்கானிய மற்றும் சர்வதேசப் பார்வையாளர்களின் கழுகுக் கண்கள் தேர்தலைக் கண்காணித்தும் வருகின்றன.
இந்த ஆண்டு இறுதியில், 2002 முதல் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படைகள் விலக்கிக் கொள்ளப்படும். அந்தச் சூழ்நிலையில், மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, தார்மிக உரிமையுள்ள அதிபர் ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருந்தால் மட்டுமே, ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கத்துக்குச் சென்றுவிடாமல் ஒரு குடியரசாகத் தொடர்வதை உறுதி செய்ய முடியும்.
ஆப்கானிஸ்தானில் மக்களாட்சி மலர்ந்து, அமைதி நிலவினால்தான் இந்தியாவில் நாம் நிம்மதியாக வாழ முடியும். முறையான அதிபர் தேர்தலும், நிலையான மக்களாட்சியும்தான் ஆப்கானிஸ்தானில் நிலைபெற்றிருக்கும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு அழிக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...