தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

"எல் நினோ'வை எதிர்கொள்வோம்!

பொதுவாகவே இந்தியாவில் நமக்கு அரசியலைக் கடந்து, உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொருளாதாரத்தையும், ஏனைய நடைமுறை நிகழ்வுகளையும் எதிர்கொள்ளும் பக்குவம் இன்னும் வந்தபாடில்லை.

Updated On :3 ஏப்ரல் 2014, 7:54 pm

பொதுவாகவே இந்தியாவில் நமக்கு அரசியலைக் கடந்து, உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொருளாதாரத்தையும், ஏனைய நடைமுறை நிகழ்வுகளையும் எதிர்கொள்ளும் பக்குவம் இன்னும் வந்தபாடில்லை. நமது நிர்வாக இயந்திரமும் சரி, அரசியல் நிகழ்வுகளின்போது, ஏனைய பிரச்னைகளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இயங்குவது வழக்கமாகிவிட்டது. நாடாளுமன்றமோ, சட்டப்பேரவையோ கூடும் நேரங்களில் தலைமைச் செயலகங்களில் அன்றாட அலுவல்கள் பாதிக்கப்படுவது இதற்கு எடுத்துக்காட்டு.

ஆசிய நாடுகள், அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை எழுப்பப் பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளும், வானிலை ஆய்வாளர்களும், பசிபிக் மகாசமுத்திரத்தின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு "எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஸ்பானிய மொழியில் "எல் நினோ' என்றால் சிறுவன் என்று பொருள். ஆழ்கடலில் ஏற்படும் காற்றழுத்தத்தால் உருவாகும் நிகழ்வுக்கு ஏன் இப்படியொரு பெயர் சூட்டப்பட்டது என்று தெரியவில்லை. இந்தக் காற்றழுத்தம் ஏற்படும்போது பசிபிக் மகாசமுத்திரத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து, அதன் விளைவுகள் தென் ஆசிய நாடுகளின் விவசாயத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. அது அடை மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கமாகவும் புயலாகவும் இருக்கலாம்; அல்லது மழையின்மையால் ஏற்படும் வறட்சியாகவும் மாறலாம். சொல்ல முடியாது.

தேர்தல் நேரம் என்பதாலோ என்னவோ இந்திய வானிலை ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை சட்டை செய்வதாகத் தெரியவில்லை. தேர்தல் மும்முரத்தில் செயலிழந்திருக்கும் வேளாண் அமைச்சகம் இப்படியொரு எச்சரிக்கை எழுந்திருப்பது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறது. உள்துறை அமைச்சகமோ, தேர்தல் நேரத்தில் அனாவசியமான பீதியைக் கிளப்பக் கூடாது என்று கருதுகிறது. நிதியமைச்சகமோ, இதனால் பங்குச் சந்தை பாதிக்கப்படுவதோ, விலைவாசி அதிகரிப்பதோ ஆளும்கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதித்துவிடுமே என்று மட்டுமே அச்சப்படுகிறது. அதற்காக எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் போனால் எப்படி?

இதே போன்ற "எல் நினோ' எச்சரிக்கைகள் 2002 மற்றும் 2004இலும்கூட தரப்பட்டு, அதன் கடுமையான விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டி வந்தது. 2009இல் மழை பொய்த்து அத்தியாவசியப் பொருள்களின் விலை ஜுர வேகத்தில் அதிகரித்ததற்கும் "எல் நினோ'தான் காரணம். இப்படிப்பட்ட முன் அனுபவங்கள் நமக்கு இருப்பதால், இப்போது நாம் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தவரை, நமது விவசாயம் எப்போதுமே மழையை நம்பிய விவசாயமாகத்தான் இருந்து வருகிறது. மழை பொய்த்தால், விளைச்சல் இல்லை என்கிற நிலையில்தான் பெருவாரியான விவசாயிகள் இருந்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் "எல் நினோ' எச்சரிக்கையை இந்தியா அரசியல் நிகழ்வுகளுக்காகப் புறக்கணித்துவிட முடியாது.

புத்திசாலித்தனமாக "எல் நினோ' பிரச்னையைக் கையாள்வது ஒன்றும் சிரமமல்ல. இப்போதே அதை எதிர்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டால், விவசாயிகள் பாதிக்கப்படாமலும், விவசாயம் பொய்த்து விலைவாசி கட்டுக்கடங்காமல் போகாமலும் பாதுகாக்க முடியும். அரிசி, கோதுமை போன்ற மேலதிகமான நீர்ப் பாசனம் தேவைப்படாத, குறைந்த அளவு தண்ணீர்த் தேவையுள்ள பயிர்களைப் பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான விதைகளை அரசே அவசரகால நடவடிக்கையாக வழங்க முன்வர வேண்டும். விவசாயிகளை முன்கூட்டியே எச்சரிப்பதன் மூலம் அவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

பதுக்கல்காரர்கள் இதுபோன்ற எச்சரிக்கைகளைக் கூர்ந்து கவனித்து, உணவு தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதில் கொள்ளை லாபம் அடைய முன்கூட்டியே தயாராகி விடுவார்கள். கொள்ளை லாபத்திற்காக பதுக்கலில் வியாபாரிகள் ஈடுபடுவதை முன்னெச்சரிக்கையுடன் அரசு தடுக்க வேண்டும். வெள்ளப்பெருக்கோ, வறட்சியோ ஏற்படும் நிலைமை ஏற்பட்டால் அதை சந்திக்க, பொது விநியோக அமைப்புகளை இப்போதே தயார்நிலையில் வைத்துக் கொள்வதும் அவசியம்.

தேர்தல் வரும் போகும். அதை முன்னிலைப்படுத்தி நாம் அன்றாட வாழ்க்கையையும், நிர்வாக இயந்திரத்தையும் செயலிழந்துவிடச் செய்யலாகாது. இந்தியா "எல் நினோ' பற்றிக் கவலைப்பட்டாக வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதை எதிர்கொள்ளத் தயாராக இருந்தாக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.