குற்ற வழக்குகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்க வகைசெய்யும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது என்றும், கிழித்தெறியப்பட வேண்டும் என்றும் காங்கிரஸின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்பதிலும், தன்னை ஏதோ தூய்மையாளராகக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், அவர் கூறிய கருத்து ஏற்புடையதா என்று கேட்டால், அதை மறுதலிப்பவர்கள் ஊழலுக்கு உறுதுணையாக இருப்பவர்களாகத்தான் இருக்க முடியும் என்பதும் தெளிவு.
மக்கள் நலன் கருதி அரசியல் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதையும், அவசரச் சட்டம் பிறப்பிப்பதையும் இந்திய அரசியலமைப்பு தடுக்கவில்லை. அதேநேரத்தில், எந்தவித வரைமுறையும் இல்லாமல், அரசியலைத் தூய்மைப்படுத்தும், நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தும் நோக்கத்துக்கு மாறாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதும், அரசியல் சட்டம் திருத்தப்படுவதும் தேச நலனில் அக்கறையுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(4), "தண்டனை விதிக்கப்பட்டவர் எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருந்து, 90 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்து, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் தொடர்ந்து பதவி வகிக்கலாம்' என்று கூறுகிறது. சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தண்டனைபெற்ற நாள் முதலே அவர் தகுதி இழந்து விடுவதால் பதவியில் தொடர முடியாது என்று கூறியதால், அந்தத் தீர்ப்பைச் செல்லாததாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க முற்பட்டிருக்கிறது மத்திய அரசு. இப்படியே அவசரச் சட்டங்களின் மூலம் அரசு நடத்தப்படுமானால், பிறகு நாடாளுமன்றம் எதற்கு, விவாதம் எதற்கு என்கிற கேள்விகளும் எழுகின்றன.
கடந்த ஓராண்டில் மட்டுமே, மத்திய அரசு இதுபோல எட்டு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தால் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று கருதப்பட்ட ஒன்றை அவசரச் சட்டத்தின் மூலம் தடுக்க முற்படுவது, மீண்டும் நீதித்துறையால் தள்ளி வைக்கப்பட்டால்? குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் போனால்?
அரசியலமைப்பு சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் ஒருசேர திருத்தம் கொண்டுவந்தாக வேண்டிய மத்திய அரசு, தற்போது மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தத்துக்கு மட்டுமே அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது.
இந்த அவசரச் சட்டம் சொல்வது என்ன? ""மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பகுதி 2, பிரிவு 3ன் கீழ் சொல்லப்படும் விதிகளின்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டாலொழிய'' ஒரு எம்பி, எம்எல்ஏ பதவியில் நீடிக்கலாம் என்று அவசரச் சட்டத்தில் உள்ளது. அப்படியானால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விதி 8(4)-ல் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த சட்டத்துக்குப் பொருந்தாது என்பதுதான் இந்த அவசரச் சட்டத்தின் அடிப்படைக் கருத்து.
ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இரண்டாவது திருத்தம், வாக்குரிமை தொடர்பானது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 62 உட்பிரிவு 5-ல், தடுப்புக்காவலில் சிறை வைக்கப்பட்டவர் தவிர மற்றபடி சிறையில் உள்ளவர் வாக்களிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த உட்பிரிவுக்கு ஒரு துணைவிதியை இந்த சட்டத்திருத்தம் சேர்க்கிறது. "வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்கும் எந்த நபரும் வாக்காளர் இல்லை என்று ஆகிவிடமாட்டார்'. இதன் நோக்கம், தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் வாக்குரிமையை காப்பாற்றுவதுதான்.
இப்போதைய மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களில் 162 பேர் மீது (30%) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 76 பேர் மீது (14%) கொலை, கற்பழிப்பு போன்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் தொடர்கின்றன. இன்னொரு புள்ளிவிவரப்படி, நமது அரசியல் கட்சிகளால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களில் 74% பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்.
இப்படிப் பட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால்தானோ என்னவோ, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் சட்டத்தைத் திருத்தவோ, அவசரச் சட்டம் பிறப்பிக்கவோ தயங்குவதில்லை. திருடனின் கையில் சாவியைக் கொடுத்துவிட்டது போன்ற நிலையில் தேசம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
இது குற்றவாளிகளால், குற்றவாளிகளுக்காகச் செயல்படும் அரசு என்பதால், குற்றப் பின்னணி உடைய உறுப்பினர்களைக் காப்பாற்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கிறது என்பது புரிகிறது. ஆனால், குற்றவாளிகளின் கையில் சிக்கித் தவிப்பது தெரியாமல் இந்திய மக்கள் இதை சகித்துக் கொண்டிருக்கிறார்களே அதுதான் ஏன் என்று புரியவில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

