இப்படி வேண்டாமே...
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று அண்மையில் நாளேடுகளில் வெளிவந்தது:


தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று அண்மையில் நாளேடுகளில் வெளிவந்தது: "தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் விருதுகளான திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கபிலர், உ.வே.சா., கம்பர், சொல்லின் செல்வர், உமறுப்புலவர், ஜி.யு. போப் போன்றோரின் பெயரிலான விருதுகளைப்பெறத் தகுதியுடைய அறிஞர்கள் சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் கிடைக்கும் தன்விவரக் குறிப்பு படிவத்தை நிறைவு செய்து நவம்பர் மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். விருதுகளுக்கென அமைக்கப்பட்டுள்ள குழு அந்தப் படிவங்களை ஆய்வு செய்து தகுதியானவர்களைத் தேர்வு செய்யும்'.
இன்னாரைப் பற்றி இன்னின்ன நூல்கள் எழுதியிருக்கிறேன் என்றோ, இன்னாரைப் பற்றி இன்னின்ன விதமாக ஆய்வு செய்திருக்கிறேன் என்றோ, இன்னாருடைய புகழ் பரவும்படி இன்னின்ன மேடைகளில் பேசியிருக்கிறேன் என்றோ, இன்னின்ன தமிழ் இலக்கிய நூல்களை இன்னின்ன வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கிறேன் என்றோ குறிப்பிட்டு, எனவே அந்த குறிப்பிட்ட விருதை தயவுசெய்து தனக்கு கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு அறிஞரும் கோரிக்கை மனு கொடுக்க வேண்டும் என்பதாக இருக்கிறது இந்த அறிவிப்பு.
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்போரில் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியவர்கள் யாவர் என்றும், தமிழ்மொழியில் சிறப்பான கவிஞர்கள் யாவர் என்றும், தமிழிலக்கியங்களை வெளிநாட்டு மொழிகளில் சிறப்பாக மொழிபெயர்த்திருப்போர் யாவர் என்றும் அறிந்து கொள்ளாமல், சம்பந்தப்பட்டவர்களிடமே தன்விவரக் குறிப்பு கேட்பது என்பது தமிழ்ச் சமூகத்துக்கே இழுக்கு. பிறகு, நாம் தமிழ், தமிழ் என்று பேசுவதும், தமிழன் என்று பெருமை பேசிக் கொள்வதும்கூட போலித்தனம் என்றாகிவிடும்.
ஒரு மாநிலத்திலுள்ள அனைத்து அறிஞர்களைப் பற்றிய விவரங்களையும் ஒரு அலுவலகத்தில் தயாராக வைத்திருப்பது சாத்தியமில்லாமலிருக்கலாம். ஆனாலும் அத்துறை முயன்றால் சில நாள்களிலேயே அவற்றைச் சேகரித்துவிட முடியாதா? பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கத் தகுதியானவர்களை பரிந்துரைக்கக் குழு அமைக்கப்படும்போது, தமிழறிஞர்களைத் தேர்வு செய்யக் குழு அமைத்தால் என்ன?
தற்காலத் தமிழறிஞர்கள் இதனை ஓர் அவமானமாகக் கருதாமல் இருக்கலாம். ஏனென்றால் "சீட்டுக்கவி', "ஆற்றுப்படுத்துதல்' எல்லாம் நம் மரபில் உள்ளவைதான்.
ஒருவர், வாழ்நாளில் பெறுகிற விருதுகளிலெல்லாம் முக்கியமானது, மதிப்புமிக்கது அரசாங்கத்திடமிருந்து பெறும் விருதுதான். மற்ற விருதுகளெல்லாம் நாள்குறிப்போடு நின்றுவிடும்; அரசு விருது மட்டுமே வாழ்க்கைக் குறிப்பு வரை வரும். அதனால் அறிஞர்கள் இந்த நடைமுறையைத் தவறு என்று எண்ணாமல் இருக்கலாம்.
மேலும் சில இடங்களில் "தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே' என்பதனால் தமிழறிஞர்கள் இவ் விருதுகளுக்கு மனு போடவும் கூடும்.
உண்மையான பல தமிழறிஞர்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதுகூட தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. தெரிந்தாலும் எல்லாரும் சென்னைக்கு வந்து அந்த அலுவலகம் சென்று அந்த மனுவைப் பெற முடியுமா? இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்வது வரை தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்நாளில்கூட அஞ்சலில் பெறுவது பற்றிகூட தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பில் தகவல் எதுவும் இல்லை.
தமிழ் வளர்ச்சித்துறை எந்தெந்த தமிழறிஞர்களின் பெயர்களில் விருதுகள் வழங்குகிறதோ அவ்வறிஞர்களில் ஒருவர்கூட தன்விவரக் குறிப்பு அளித்து விருது பெறும் இந்த நடைமுறையை விரும்ப மாட்டார்கள். "மன்னர்க்கு சிறப்பு தன் தேசம்தான்; கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம்' என்று முழங்கியவாறு தமிழ்ப் பணியாற்றியவர்கள் அவர்கள்.
விருதுக்குத் தகுதியானவர்கள் என்று கருதுவோரைத் தனது தன்விவரக் குறிப்புடன் பொதுமக்களைப் பரிந்துரைக்கச் சொல்லி, தகுதியுடைய சான்றோரால் பரிந்துரைக்கப்பட்ட அறிஞர்களைப் பட்டியலிட்டு, அவர்களிடமிருந்து விருதுக்குரியவர்களை, தமிழ் வளர்ச்சித் துறையால் நியமிக்கப்பட்ட குழு தேர்ந்தெடுப்பதுதான் முறையாக இருக்கும்.
சிறந்த அறிஞர்களின் பெயரால் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளைப்பெறத் தகுதியான சான்றோரை "பாஸ்போர்ட்' அலுவலகம்போல விண்ணப்பம் போடச் சொல்வது நியாயமல்ல. அறிஞர்களைத் தேடிப் பிடித்து கௌரவிப்பதுதான் சமூகத்தின் கடமை. தான் கண்டுபிடிக்கப்பட்டோம் என்பதுதான் ஒரு அறிஞனுக்கும் பெருமை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...