உணவு பதப்படுத்தல் தொழில் வளர்ச்சி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 8.6% வளர்ச்சி அடைந்துள்ள இத்தொழிலுக்கு 12ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் மேலதிகமான கவனம் செலுத்தவிருக்கிறது மத்திய அரசு. ஏனெனில், உணவு பதப்படுத்தல் தொழில் என்பது அரசுக்கு அதிக வருவாய் தரும் அட்சய பாத்திரம்.
2012-13ஆம் ஆண்டுகளில் உணவு பதப்படுத்தல் தொழிலை மேம்படுத்துவது குறித்து விரிவாகத் தயாரிக்கப்பட்ட, "உணவு பதப்படுத்தல் திட்டங்களுக்கான தேசிய குறிக்கோள்' வேகமாக நிறைவேறுவதற்காக ரூ.1600 கோடி செலவிட (மத்திய அரசு 75%, மாநில அரசு 25%) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செயல்படுத்தும் வழிமுறைகளை விவாதிக்க அனைத்து மாநில அமைச்சர்களுக்கான கூட்டம் நாளை (செப்டம்பர் 20) புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தின் மையமாக இருக்கப்போவது, உணவு பதப்படுத்தலை உலகத் தரத்துக்கு உயர்த்த வலியுறுத்துவதும் மானியம் அளிக்கும் வழிமுறைகளை ஆராய்வதும்தான்.
இந்த திட்டத்தின் கீழ், புதிதாகத் தொடங்கப்படுகிற அல்லது தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிற நிறுவனங்களுக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கச் செய்வதும், முதலீட்டில் 25 விழுக்காட்டை மானியமாக அளிப்பதும்தான்.
இந்த மானியம் தொடக்க நிலையில் தரப்படாது என்பதும், வங்கிக் கணக்கில் போடப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே, படிப்படியாக மானியம் விடுவிக்கப்படும் என்கிற விதிமுறையும் இருந்தாலும்கூட, அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் கொடுக்கப்படும் என்பதால், இத்திட்டம் முழுக்க முழுக்க பெருநிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்பது தெளிவு.
ஆகவே, இந்த மானியத்தைப் பெறப்போகும் பெரும்பாலான நிறுவனங்கள், ஒன்று சந்தையில் தனக்கான வாடிக்கையாளரைக் கொண்டிருக்கும் நிறுவனங்களாக இருக்கும்; அல்லது ஏற்கெனவே சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயல்பணி ஒப்பந்தமுறையில் உணவுப்பொருளை பதப்படுத்திக் கொடுக்கும் முகமைகளாக இருக்கும்; அல்லது தானே ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவனங்களாக இருக்கும்.
இந்த வகைப்பாட்டில் மிக அரிதாக சில மகளிர் குழுக்களும் வந்துவிட முடியும். மிகச் சில சிறிய நிறுவனங்களும் மானியம் பெறும். இருப்பினும் இவர்களும்கூட ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற நிறுவனங்களாக மாறியாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பாதுகாப்பான, சுகாதாரமான உணவு மிக அவசியமானது. சுகாதாரமற்ற உணவுதான் நோய்த் தோன்றலுக்கு காரணம் என்பதால், சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சந்தைக்கு கிடைக்கச் செய்தல் அரசின் கடமை. ஆனால், இந்திய அரசுக்கு ஏற்புடைய நடைமுறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்று சொல்லாமல், "உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையில்' உணவைப் பதப்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப உணவுப் பொருள்களை பதப்படுத்துதல் என்பதாக அது மாறிவிடுகிறது.
மத்திய அரசின் திட்டமும் மானியமும் அமைப்பு சார்ந்த தொழில் துறையை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அமைப்பு சார்ந்த தொழில்துறை மட்டுமே தங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மூலமும், ஏற்றுமதி மூலமும் அரசுக்கு வரி வருவாய் தரக்கூடியவை.
வரி வருவாயை மட்டுமே கருதி ஊக்குவிப்பதால், அரசுக்கு வருவாய் கிடைப்பது எந்த அளவுக்கு உறுதியோ அதே அளவுக்கு மக்களுக்குச் செலவு உயர்வதும் உறுதி. அதுமட்டுல்ல, ஏழைத் தொழிலாளிக்கு இது நட்டத்தையும் ஏற்படுத்தக் கூடும்.
இந்தியாவில் உணவுப் பொருள் பதப்படுத்தல் மற்றும் தயாரித்தல் தொழிலில் 17 லட்சம் பேர் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் இருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் மூலம் வரியாக பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும்.
அதேசமயம், இத்தொழிலில் 48 லட்சம் பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்கிறார்கள். "உலகம் முழுவதும் ஏற்புடைய தயாரிப்பு நடைமுறை' இவர்கள் அறியாதது. இந்த 48 லட்சம் பேரும் உள்ளூர் மக்களை மட்டுமே நம்பியிருப்பவர்கள். இவர்களால் அரசுக்கு வருவாய் கிடையாது. பெருநிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக இயந்திரத்தால் தயாரித்து விற்கும்போது இவர்கள் வேலை இழப்பார்கள்.
இவர்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. தேசிய குறிக்கோள், அடித்தட்டு மக்களை உயர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர, வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிப்பதாக இருக்கக் கூடாது. அனைத்து மாநில அமைச்சர்கள் கூட்டம் இதையும் சிந்தித்து முடிவெடுப்பது அவசியம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

