உலகிலுள்ள எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளும், தங்களது சரித்திரப் பின்னணியையும், கலாசார அடையாளங்களையும், புராதனச் சின்னங்களையும் பாதுகாத்து, வெளிநாட்டினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்களது வரலாற்றுச் சிறப்புகளை நிலைநிறுத்தத் தயங்குவதில்லை. பல ஐரோப்பிய நாடுகளின் புராதனச் சின்னங்கள் ஏழெட்டு நூற்றாண்டுகள் பழமையானவை, அவ்வளவே. சில கோட்டைகளும், மாதா கோவில்களும்தான் அவர்களால் காட்ட முடிகிற சரித்திரச் சான்றுகள். ஆனால், அந்த சரித்திரச் சான்றுகளை அவர்கள் பாதுகாத்துப் பராமரிக்கும் விதமும், அவைகளைப் பற்றிய விவரங்களைப் புத்தகங்களாகவும், சுற்றுலாப் பயணிகள் எடுத்து செல்லும் விதத்திலான நினைவுப் பொருள்களாகவும் விற்பனைச் செய்து பெருமை தட்டிக் கொள்வதும், எந்த அளவுக்கு அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பறைசாற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.