பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எண்ணம் நிறைவேறுமா?

நகரங்களில் சாக்கடை மற்றும் கழிவறைத்தொட்டி சுத்திகரிப்புப் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதும், சில தருணங்களில் சிலர் மரணமடைவதும் தொடர்ந்து நடந்ததால் இத்தகைய இழிதொழிலில் மனிதரை ஈடுபடுத்துவதற்கு எல்லாத் தரப்பினர் மத்தியிலும் எதிர்ப்பு இருந்து வந்தது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:35 pm

ஆசிரியர்

நகரங்களில் சாக்கடை மற்றும் கழிவறைத்தொட்டி சுத்திகரிப்புப் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதும், சில தருணங்களில் சிலர் மரணமடைவதும் தொடர்ந்து நடந்ததால் இத்தகைய இழிதொழிலில் மனிதரை ஈடுபடுத்துவதற்கு எல்லாத் தரப்பினர் மத்தியிலும் எதிர்ப்பு இருந்து வந்தது.

இத்தகைய இழிநிலையை மாற்றும் நோக்கில் 1993-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டம், எடுப்புக்கழிவறைகளை (டிரை லெட்ரின்) மட்டுமே கருத்தில் கொண்டிருந்ததால் பயனளிக்கவில்லை. ஆகவே, மேலும் வலுவான ஒரு சட்டம் தேவை என்பதற்காக தற்போது, கழிவு அகற்ற ஆட்களை நியமிக்க தடை மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்ட மசோதா தற்போதைய நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறது.

எடுப்புக் கழிவறைகள் மட்டுமின்றி, மனிதரால் நேரடியாகவும் மறைமுகமாகவும் மனிதக்கழிவுகளை அகற்றும் சூழலை உருவாக்கும் சுகாதாரமற்ற கழிவறைகளும் நடைமுறைகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இன்னமும் இத்தகைய சுகாதாரமற்ற கழிவறைகள் 21 லட்சம் உள்ளன. இத்தகைய சுகாதாரமற்ற கழிவறைகள் அனைத்தும் அதற்கு சொந்தமான நபர்களால் இடிக்கப்பட வேண்டும், அல்லது உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை இடித்துவிட்டு, அதற்கான செலவை வசூலிக்கலாம் என்று சட்டம் சொல்கிறது.

இந்தச் சட்டத்தை மீறி நடக்கும் தனி நபருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டு வரை சிறை தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட முடியும். மேலும் இந்தச் சட்டத்தின்படி வழக்குப் பதிந்து நீதிமன்றம் விசாரித்துதான் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதில்லை. மாவட்ட ஆட்சியர், டிஆர்ஓ போன்ற நிர்வாகத்துறை அதிகாரிகளும்கூட நேரடியாக அபராதம் விதிக்கலாம்.

இந்தச் சட்டம், மனிதரை இழிவுபடுத்தும் தொழிலுக்கு ஆட்களை நியமிக்கும் நபர் அல்லது நிறுவனத்திற்கு தண்டனையைக் கடுமையாகவும், பிணையில் வெளிவர முடியாத குற்றமாகவும் ஆக்கியிருக்கிறது என்பது உண்மையே. ஆனாலும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவும்கூட தெளிவு இல்லாததாகவே இருக்கிறது. இதனை எல்லா நிலைகளிலும் எல்லாராலும் பயன்படுத்த முடியுமா என்பது இப்போதே சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

தற்போதைய சட்டத்தில், "ஆட்களைக் கொண்டு கழிவுஅகற்றுதல்' (மேனுவல் ஸ்கேவேஞ்சர்) என்பதற்குத் தரப்பட்டிருக்கும் விளக்கம் இதுதான்: "எடுப்புக் கழிவறை அல்லது மனிதக்கழிவைச் சேகரித்து மொத்தமாக அகற்றுவதான கழிவறைகள், திறந்தவெளி கழிவறைகள், ரயில்வே தண்டவாளம் போன்றவற்றில் உள்ள மனிதக்கழிவை அகற்றுதல், சுமந்துசெல்லுதல், கழுவித்தள்ளுதல் மற்றும் மனிதக்கழிவுகள் கலந்துவரும் சாக்கடைகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் தனிநபர், குழுவினர் ஈடுபடுத்தப்பட்டாலோ அல்லது வேலைக்கு அமர்த்தப்பட்டாலோ அச்செயல், ஆட்களைக் கொண்டு கழிவுஅகற்றுதல் என்ற வரையறைக்குள் வரும்' என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், ரயில்பெட்டிகளில் உள்ள கழிவறைகளில், நீரடித்து வெளித்தள்ளும் வசதி இருக்கும் காரணத்தால் அவற்றை சுகாதாரக் கழிவறைகளாக அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ரயில்நிலைய தண்டவாளத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை எவ்வாறு செய்யப்போகிறது ரயில்வே நிர்வாகம்? தண்டவாளத்தில் உள்ள மனிதக்கழிவை அள்ளி அகற்றாமல், குழாய்நீரை வேகமாகப் பீய்ச்சியடித்து சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடுத்துவதும்கூட இந்தச் சட்டத்தின்படி குற்றமே!

ஒன்று, ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும் ரயிலின் கழிவறைகளைப் பயன்படுத்துவோரை, தற்போது சிகரெட் பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதைப்போல, அபராதம் விதித்து கட்டுப்படுத்தலாம். அல்லது அனைத்து பெட்டிகளிலும் பயோ-டாய்லெட் வசதியை ஏற்படுத்தலாம். ரயில்வே நிர்வாகம் இதைச் செய்தாக வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

மனிதக் கழிவுகள் கலக்கும் சாக்கடையில் இறங்கினால், அத்தகைய செயலில் ஈடுபடவைத்த தனியார் நிர்வாகம் அல்லது உள்ளாட்சி அதிகாரிகளே அதற்குப் பொறுப்பு என்று சட்டம் சொல்கிறது. அப்படியானால், சாக்கடைகள் அடைத்துக்கொண்டால், பழுதடைந்தால் அந்தப் பணிகளை உள்ளாட்சி எவ்வாறு நிர்வகிக்கும்?

மனிதக்கழிவுகள் கலக்காத நகர்ப்புற சாக்கடைகள், அல்லது புதை சாக்கடைகள் உண்டா? அப்படியானால் சாக்கடையை எப்படி சரி செய்வார்கள்? இயந்திரங்கள் உதவியுடன் இதைச் செய்ய முடியும். ஆனால், அத்தகைய இயந்திரம் மாநகராட்சிகளில் மட்டுமே இருக்கின்றன. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இத்தகைய நவீன வசதிகள் பெற்றிராத நிலையில், அவை இந்தச் சட்டத்தை கண்டுகொள்ளாது. உள்ளாட்சி அதிகாரிகள் தொடர்ந்து மனிதர்களை, கால்வாய்க்குள் இறங்கி பணியாற்றச் சொல்வார்கள். அதாவது, தெரிந்தே சட்டத்தை மீறுவார்கள்.

வீடுகளிலும் சமுதாயக்கூடங்களிலும் சுகாதாரமற்ற கழிவறைகளை இடிப்பதும், அங்கே மனிதக் கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்தினால் தண்டிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமானது. அதுவரை வேண்டுமானால், அரசின் நோக்கம் நிறைவேறும்.

அதேசமயம், நகரச் சுகாதாரப் பணியில், இயந்திரங்கள் இல்லாத ஊர்களில் அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்தமுடியாத சூழலில் சாக்கடைகளின் அடைப்பை எப்படி நீக்குவதென்றும், சரிசெய்யும்போது இவர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளையும் சட்டமே சொல்ல வேண்டும். சட்டம் இதைச் சொல்லாவிட்டால், அரசு அதிகாரிகளே இந்தச் சட்டத்தை மதிக்காமல், மனிதக்கழிவு கலக்கும் சாக்கடை சுத்திகரிப்பில் மனிதர்களை எந்தப் பாதுகாப்பும், எந்த கவசஉடையும் இல்லாமல் இறங்கச் செய்வது தொடரும்.

குடிநீரில் சாக்கடை கலந்தாற்போல, சட்டத்தில் ஓட்டைகள் அதிகம். நடைமுறைச் சாத்தியமானதாகத் தெரியவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.