/

பிளவும்... தெளிவும்...

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் எந்தவித வியப்பையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. எதிர்பார்த்தது போலவே...

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:41 am

ஆசிரியர்

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் எந்தவித வியப்பையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. எதிர்பார்த்தது போலவே, காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.

எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த மறுகணமே, பாஜக அவரைக் கட்சியிலிருந்து அகற்றி இருந்தால், ஆட்சியை வேண்டுமானால் பாஜக இழந்திருக்கக் கூடும். ஆனால், ஊழலை ஏற்றுக்கொள்ளாத கட்சி என்று அகில இந்திய அளவில் பாஜகவின் மரியாதையும் செல்வாக்கும் உயர்ந்திருக்கும். இப்போது ஆட்சியையும் இழந்து, தேசிய அளவில் மரியாதையையும் இழந்து நிற்கிறது பாஜக.

எடியூரப்பாதான் பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்குக் காரணம் என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாகவே எடுத்துரைக்கின்றன. ஏறத்தாழ 40 இடங்களில், காங்கிரஸூக்கோ, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கோ அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி. இன்னும், 19 தொகுதிகளில் இரண்டாவது இடத்தில் பாஜகவும், மூன்றாவது இடத்தில் கர்நாடக ஜனதா கட்சியும் வந்திருக்கின்றன. இந்த 59 தொகுதிகள் மட்டுமல்லாமல், பாஜக வெற்றி பெற்ற 40 தொகுதிகளையும், கர்நாடக ஜனதா கட்சி வெற்றி பெற்ற 6 தொகுதிகளையும் கூட்டிப் பார்த்தால், ஏறத்தாழ 105 தொகுதிகளில் கட்சி பிளவுபடாமல் இருந்திருந்தால் பாஜக வெற்றி பெற்று, சுயேச்சைகளின் உதவியுடன் ஆட்சியே அமைத்திருக்கக் கூடும். இப்போது காங்கிரஸூக்குக் கிடைத்திருக்கும் அறுதிப் பெரும்பான்மை பாஜகவுக்குக் கிடைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தி இருக்கின்றன. கட்சிகளைவிடத் தனிமனிதர்கள் பெரியவர்களல்ல என்பதுதான் அது. ஹெங்கல் ஹனுமந்தய்யா, எஸ். பங்காரப்பா, ராமகிருஷ்ண ஹெக்டே வரிசையில் இப்போது எடியூரப்பாவும் தனிக்கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கன்னடம் அரசு மொழியாக இருந்தாலும், கர்நாடகத்தில் பரவலாக ஆறு முற்றிலும் மாறுபட்ட மொழிகள் மக்களால் பேசப்படுகின்றன. 1956 நவம்பர் முதல் தேதி மொழிவாரி மாநில சீரமைப்புக்குப் பிறகு பிறந்த கர்நாடக மாநிலத்தை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். மராட்டி பெருவாரியாகப் பேசப்படும் பம்பாய் கர்நாடகா, தெலுங்கு பேசும் நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஹைதராபாத் கர்நாடகா, துளு, கொங்கணி, கூர்கி மொழிகள் பேசப்படும் கடலோர கர்நாடகா, கன்னடம் பேசும் மத்திய கர்நாடகா மற்றும் மைசூர் சமஸ்தானத்தின் பகுதிகளாக இருந்த மைசூர் கர்நாடகா என்பவைதான் அவை.

லிங்காயத் வகுப்பினர் அதிகமாக வாழும் பம்பாய் கர்நாடகா, மத்திய கர்நாடகா பகுதிகளில் பாஜகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிர்ணாயகமாக உள்ள ஹைதராபாத் கர்நாடகாவில் காங்கிரஸூம், மைசூர் கர்நாடகா பகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், கடற்கரை கர்நாடகப் பகுதியில் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே சம பலத்துடனும் காணப்படுவதுதான் இந்த மாநிலத்தின் அரசியல் நிலைமை. மைசூர் கர்நாடகப் பகுதியை மதச்சார்பற்ற ஜனதா தளமும், ஹைதராபாத் கர்நாடகப் பகுதியைக் காங்கிரஸூம் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கட்சிப் பிளவால், பாஜக தனது கோட்டையாக வைத்திருந்த பகுதிகளைக் காங்கிரஸூக்கு இழந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் இதைத்தான் தெளிவுபடுத்துகின்றன.

கர்நாடகத்தைப் பொருத்தவரை "ஊழல்' என்பது எப்போதுமே ஒரு பெரிய பிரச்னையாக இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. இங்கே தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது "ஜாதி'யாக மட்டுமேதான் இருந்திருக்கிறது. இருக்கப் போகிறது. காங்கிரஸ் இந்த ஜாதி அரசியலை எப்படிக் கையாளப் போகிறது என்பதில்தான், அமைய இருக்கும் ஆட்சி நிலையாக இருக்குமா, இல்லையா என்பதைப்பற்றிச் சொல்ல முடியும்.

பாஜகவில் இருப்பது போலவே, காங்கிரஸிலும் பல கோஷ்டிகள் செயல்படுவதால், எந்த அளவுக்கு சட்டப் பேரவைப் பெரும்பான்மை, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகளை ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று விவரிப்பதோ, நரேந்திர மோடியின் பின்னடைவு என்று விமர்சிப்பதோ அனாவசியம். அவர்கள் இருவரும் பிரசாரத்திற்கு வராமல் இருந்திருந்தாலும் இதுதான் முடிவாக இருந்திருக்கும். அதேபோல, ஊழல், நிர்வாகக் குறைபாடுகள் போன்றவையும் காரணமாக இருக்கவில்லை. பாஜகவில் ஏற்பட்ட பிளவுதான் அடிப்படைக் காரணம் என்பதும், காங்கிரஸூக்கு ஆதரவான அலையாக மக்கள் தீர்ப்பு இருக்கவில்லை என்பதும் தெளிவு.

கர்நாடகத்திற்கு எண்பதுகளிலிருந்தே ஒரு ராசி உண்டு. இந்த மாநிலத்தில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்காது என்பதுதான் அது. 1983-இல் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் ஜனதா கட்சி அமைத்தபோது, மத்தியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 1989-இல் வீரேந்திர பாட்டீல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, மத்தியில் ராஜீவ் அரசு தோல்வியைத் தழுவி வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைத்தது. 1999-இல் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் வெற்றிபெற்ற போதும், 2007-இல் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தபோதும்கூட இந்த ராசி தொடர்ந்தது. இந்த முறை எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காட்சி மாற்றம் ஏற்படுமா என்பது யார் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைப் பொறுத்து அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.