முதலிடத்தில் தமிழகம்...
பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள நகரங்களில் "மகளிர் மட்டும்' பேருந்துகளை இயக்குவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.


பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள நகரங்களில் "மகளிர் மட்டும்' பேருந்துகளை இயக்குவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அமைச்சகம் அமல்படுத்தும், ஜவாஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.) வகைப்படுத்தும் பல்வேறு அம்சங்களில், புதிய பேருந்துகளை அறிமுகம் செய்வதும் ஒன்று. இத்திட்டத்தின்கீழ் பேருந்துகளை வாங்கினால், அதற்கு நகரத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப, 50% முதல் 80% வரை மானியம் கிடைக்கிறது.
இதுவரை, நகர் மேம்பாட்டுக்காக பேருந்துகள் என்பதாக மட்டுமே இருந்த நிலைமை மாறி, புதுதில்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப் பிறகு, "மகளிர் மட்டும்' பேருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
கடந்த ஐந்தாண்டு திட்டக் காலத்தில், அதிக அளவு பேருந்துகளை வாங்கிய பெருமை மகாராஷ்டிரத்துக்கும், தமிழகத்துக்கும் உண்டு. அண்மையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட, பிப்ரவரி 2013 வரையிலான புள்ளிவிவரத்தின்படி, மகாராஷ்டிர மாநிலத்தை (2,580 பேருந்துகள்) அடுத்து தமிழ்நாடுதான் 1,600 பேருந்துகள் வாங்கியுள்ளது. இந்தப் பேருந்துகளின் மதிப்பு சுமார் ரூ.400 கோடி. இதில் மத்திய அரசு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்கும் உதவித்தொகை ரூ.192.35 கோடி. இதில் 130 கோடியை இதுவரை வழங்கியுள்ளனர்.
2013-14 மத்திய நிதிநிலை அறிக்கையில், ஜே.என்.என்.யு.ஆர்.எம். திட்டத்திற்காக ரூ.14,873 கோடி ஒதுக்கி, இதில் 10,000 பேருந்துகள் வாங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக குறிப்பிடும்போது, மலைப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தபோதிலும், தற்போது மகளிர் மட்டும் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசு உணர்ந்து, முன்னுரிமை அளித்துள்ளது.
தமிழக அரசின் 2013-14 நிதிநிலை அறிக்கையில், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,026 கோடி செலவில் 6,000 புதிய பேருந்துகள் வாங்கத் திட்டமிட்டு, 2,855 பேருந்துகள் பயன்பாட்டில் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இவை பழையதாகிப்போன வாகனங்களுக்கு மாற்றாகவே முடிந்திருக்கக்கூடும். குறிப்பாக, இதில் மகளிருக்கான பேருந்துகள் எத்தனை அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படவில்லை.
சென்னையில் மட்டுமே, அதுவும்கூட மிக அரிதாக கண்ணில்படுவதாக "மகளிர் மட்டும்' பேருந்து சேவை நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 10 லட்சம் மக்கள்தொகை உள்ள திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் மகளிர் மட்டும் பேருந்துகளே இல்லை. இருப்பதாகக் கூறினாலும் அவை இல்லை என்று சொல்லிவிடும் அளவுக்கு மிகச் சிலவாகவே இருக்கின்றன.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நகரங்கள் அனைத்திலுமே மகளிர் மட்டும் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவது அவசியம்.
அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்களை மட்டுமே கருத்தில்கொண்டு காலை மாலை இருவேளைகளிலும் - அலுவலகம் 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும் என்ற எண்ணத்தில் - அதற்கேற்ப மகளிர் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுவதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது.
ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழல் அதையெல்லாம் கடந்து நெடுந்தொலைவு வந்துவிட்டது. இப்போது சாதாரண கடைகளில்கூட இரண்டு ஷிப்ட்-களாக மாற்றப்பட்டு, பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆகவே, அரசு ஊழியர்கள், தனியார் பெருநிறுவன ஊழியர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் தனியார் வணிகநிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் இரவு 8.30 மணிக்கு மேல் பணி முடித்து, வீடு திரும்பும் நிலையில் இருக்கிறார்கள்.
அரசு மற்றும் அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள் சொந்த வாகனத்தில் செல்லவும், அல்லது தங்களுக்கென குழுவாக தனிவாகனங்களை அமர்த்திக்கொள்ளும் வசதியும் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மாதம் சில ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் இந்தத் தனியார் வணிக நிறுவனங்கள், கடைகளின் பெண் ஊழியர்கள் அரசுப் பேருந்துகளைத்தான் நம்பியுள்ளனர். இவர்களும் உழைக்கும் மகளிர்தான். இவர்களுக்குத்தான் மற்றவர்களைக்காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் மகளிர் மட்டும் பேருந்துகள் தேவை.
பொதுவாக, போக்குவரத்துக் கழகங்களின் புலம்பல், "மகளிர் மட்டும்' பேருந்துகளை அதிகமான வழித்தடங்களில் இயக்க போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை என்பதும், சில வழித்தடங்களில் வசூல் இல்லை என்பதும்தான்.
இதற்கான தீர்வு- டபுள் டெக்கர் பேருந்துகளை அதிகரித்து, மேல்அடுக்கு முழுவதும் பெண்களுக்கு என்று ஒதுக்கலாம். அல்லது தொடர் பேருந்துகளை அதிகரித்து பின்இணைப்பு பகுதி முழுவதும் பெண்களுக்காக ஒதுக்கி, இரு பகுதிகளுக்கும் நடுவே தடுப்பு ஏற்படுத்தலாம். இதனால் ஒரே நேரத்தில் பெண்கள், ஆண்கள், ஒரே குடும்பத்தின் தம்பதிகள், குழந்தைகள் பயணம் செய்ய ஏதுவாகும்.
தற்போது மகளிர் மட்டும் பேருந்துகள் குறித்து மத்திய நகர் மேம்பாட்டு அமைச்சகம் தானே முன்வந்து ஆய்வறிக்கை கோருவதால், இந்த வாய்ப்பை முழுமையாகவும், இந்தியாவிலேயே முதலிடம் பெறும் வகையிலும் தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜே.என்.என்.யு.ஆர்.எம். திட்டத்தில் இந்த முறை இந்தியாவிலேயே அதிக பேருந்துகளை வாங்கிய மாநிலமாகத் தமிழகம் திகழ வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...