/

முன்னுதாரண முயற்சி!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர், உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இது ஒரு தொடக்கம் மட்டுமே.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:07 pm

ஆசிரியர்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர், உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இது ஒரு தொடக்கம் மட்டுமே.

இந்த ஆண்டு மே மாதம், "தெரு வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்காற்று) சட்ட மசோதா 2012'-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய சட்டம். ஆனால், அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டதால்,முடங்கியது.

இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பல லட்சம் இந்தியத் தெரு வியாபாரிகள் நிஜமாகவே நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் என்கின்றது இந்தியத் தெரு வியாபாரிகளின் தேசிய சம்மேளனம். அந்த அளவுக்கு அவர்கள் புண்பட்டுள்ளனர். நகரங்களில் உள்ள தெரு வியாபாரிகள் குறைந்தபட்சம் ரூ.50 முதல் ரூ.100 வரை தினமும் காவல்துறையினருக்கும், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களுக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. இதெல்லாம் போதாதென்று அரசியல் பிரமுகர்களுக்கு, குறிப்பாக, மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும்கட்சி மாவட்டச் செயலாளர்களுக்கும் "கப்பம்' கட்ட வேண்டிய அவல நிலைமை.

பெருநகரம், நகரம் எதுவென்றாலும் இத்தகைய தெரு வியாபாரிகளின் எண்ணிக்கை அந்தப் பெருநகரம் அல்லது நகரத்தின் மக்கள் தொகையில் தோராயமாக 3 சதவீதமாக இருக்கிறது என்று கணக்கிடுகிறார்கள். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இவர்கள் அனைவரும் தங்களுக்கு அடையாள அட்டை பெறுவதுடன் தொழில்உரிமம் பெறவும் முடியும்.

இவ்வாறு தொழில்உரிமம் வழங்கப்படும்போது மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்கின்றது சட்ட மசோதா: தடைகள் இல்லாத பகுதி, கட்டுப்பாடுகள் உள்ள பகுதி, முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதி என நகரத்தின் நெரிசலை முன்னிறுத்தி பாகுபடுத்த வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பகுதியையும் வேறுபடுத்தவும், ஒரு பகுதியில் எத்தனை தெரு வியாபாரிகளை அனுமதிக்கலாம் என்று தீர்மானிக்கவும், அவர்களுக்கான கடைகளுக்கு இடத்தை வரையறை செய்யவும் வேண்டிய பொறுப்பு அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இருக்கிறது.

இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால், சென்னையில் குறைந்தபட்சம் சுமார் 2.25 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கி, அவர்கள் கடை வைத்துக்கொள்ள வேண்டிய இடத்தை வரையறை செய்ய வேண்டிய பொறுப்பு சென்னை மாநகராட்சிக்கு உள்ளது. மேலும், இந்த வியாபாரிகள் தங்கள் பொருள்களை இரவு நேரத்தில் பாதுகாப்பாக வைப்பதற்கான இடத்தை அளிக்கும் கடமையும் உள்ளது.

சென்னை கடற்கரை, ரங்கநாதன் தெரு, பாண்டி பஜாரில் உள்ள தெரு வியாபாரிகள் அங்குள்ள சில நிரந்தரக் கடைகள், சில மாடிப்படிகளை தங்கள் பொருள் வைப்புக் கூடமாக மாற்றி அதற்கு வாடகையும் தந்துகொண்டிருக்கின்றனர். சில பகுதிகளில் அப்படியே கடையை மூடிவிட்டு, மொத்தக் கடைகளையும் பார்த்துக்கொள்ள கூர்க்காவை நியமிக்கின்றனர்.

உரிமம் கொடுத்தாகிவிட்டது, பகுதியை வரையறுத்தாகிவிட்டது என்று அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் ஒதுங்கிக்கொள்ளும் என்றால், தெரு வியாபாரம் என்பதை இப்போது இருப்பதுபோல, நடைபாதையில் பொதுமக்கள் நடக்கவே முடியாதபடி செய்துவிடுவார்கள் என்றால் இந்தப் புதியச் சட்டம் மக்களுக்கு எதிரானதாக மாறிவிடும். அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து இஷ்டம்போல கட்சிக்காரர்களுக்கும், லஞ்சம் கொடுத்தவருக்கும் உரிமத்தை அள்ளித் தந்தால், தெருவில் யாரும் நடமாடவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

தெருவோர வியாபாரத்தை முழுமையாகத் தடை செய்வது என்பது இந்தியா போன்ற வேலையில்லாத் திண்டாட்டம் நாளும் அதிகரிக்கும், அதிக அளவிலான நகர்ப்புற நகர்களை உடைய மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் இயலாத ஒன்று. பெருவாரியான தெருவோரக் கடைகள் வியாபாரமல்ல, அன்றாட வருமானத்துக்கான வாழ்வாதாரம். இதை நாம் மறந்துவிடலாகாது.

தெருவியாபாரம் செய்வோரின் கடை மிகச் சிறியதாக, மக்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்க வேண்டும்; ஒரு இடத்தில் மூன்று நான்கு கடைகளுக்கு மேல் இல்லாமலும் அடுத்த கடைக்கொத்து நூறு மீட்டருக்கு அப்பால் அமையும்படியும் செய்ய வேண்டும்; சில இடங்களில் தள்ளுவண்டியிலும், இன்னும் சில இடங்களில் நின்றும், நடந்தும் விற்பனை செய்யவும், மக்கள் நெரிசலுக்கு ஏற்ப பகுதிகளையும் வியாபாரிகளின் எண்ணிக்கையையும் மிகக் கறாராக வரையறுக்க வேண்டும்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் தெருவியாபாரிகள் இருக்கிறார்கள். அங்கே எவ்வாறு மக்களுக்கு இடையூறு இல்லாமலும் சுகாதாரம் கெடாமலும் நடைபெறுகிறதோ அதேபோன்று நடக்குமானால், இது வரவேற்புக்குரியது.

இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு, நமது சாலைகள் பாதசாரிகளுக்கு சாதகமாக இல்லாமல் வாகனங்களும், நடைபாதை வியாபாரிகளும் பயன்படும் விதத்தில் மட்டுமே அமைந்திருப்பது. சில இடங்களில் இரண்டடிக்கும் குறுகலான நடைமேடைகள். ஐந்தடி அகலம் உள்ள நடைமேடைகள் இருந்தால், நடக்கவே இடமில்லாமல் பாதையைக் கடக்க எங்கேயும் இடமளிக்கப்படாமல் இருப்பதால், ஒழுங்குமுறையே இல்லாமல் மக்கள் சாலையைக் கடக்கும் அவலம். இதைப் பற்றிய கவலையே இல்லாத உள்ளாட்சி அமைப்புகள்.

இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தியே தீர வேண்டும். அதன் முதற்கட்டம்தான், தெருவோர வியாபாரங்களை ஒழுங்குபடுத்துவது. மெரினாவில் தொடங்கும் முயற்சி, இந்தியா முழுமைக்குமே முன்னுதாரணமாக வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.