நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாவம், காவல்துறை!

நள்ளிரவில், புதுதில்லியின் முதன்மைச் சாலையில், மோட்டார் சைக்கிளில் சாகஸம் செய்த இளைஞர்களைக் கலைந்துபோகச் செய்வதற்காக...

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:03 pm

ஆசிரியர்

நள்ளிரவில், புதுதில்லியின் முதன்மைச் சாலையில், மோட்டார் சைக்கிளில் சாகஸம் செய்த இளைஞர்களைக் கலைந்துபோகச் செய்வதற்காக, வண்டிச் சக்கரத்தின் மீது சுட்ட போலீஸார் குண்டு, வாகனத்தின் ஓட்டுநருக்குப் பின்னால் அமர்ந்திருந்தவரின் முதுகில் பாய்ந்து அந்த இளைஞர் இறந்திருப்பது இப்போது தில்லியில் பேசப்படும் விவகாரமாக இருக்கிறது.

கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட தில்லி காவல்துறை மீது கடுமையாகவும், நியாயமாகவும் குற்றம் சாட்டுகின்ற சமூக ஆர்வலர்களின் கவலை புரிந்துகொள்ளக் கூடியது. அதேவேளையில், சட்டத்துக்குப் புறம்பாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியும், முன் சக்கரம், பின் சக்கரத்தில் மட்டும் வாகனத்தை ஓட்டியும் நண்பர்கள் கூட்டத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய இந்த இளைஞர்களில் ஒருவரைக்கூட கைது செய்யவில்லையே ஏன் என்ற கேள்வியை இந்த சமூக ஆர்வலர்கள் கேட்கவில்லையே?

அங்கே நூறு இளைஞர்கள் சுமார் 35 முதல் 40 மோட்டார் சைக்கிள்களில் வேக சாகஸங்களில் ஈடுபடுவது குறித்து காவல்துறைக்கு இரவு 2.07 மணிக்கு தகவல் வருகிறது. இரவுநேர ரோந்துப் பிரிவு அங்கே செல்கிறது. அவர்கள் விரட்டியும் போகாத இளைஞர்கள் போலீஸார் மீது கல்லெறிகிறார்கள். இதை சமூக ஆர்வலர்களோ அல்லது, இந்தச் சம்பவத்தில் இறந்துபோன கரண் பாண்டேயின் தாயாரோ மறுக்கவில்லை. ""தடியடி செய்திருக்கலாமே, எதற்காகத் துப்பாக்கிப் பிரயோகம்? இவ்வாறு துப்பாக்கியால் சுட்டது காவல்துறையின் அத்துமீறல், கொலைக்குற்றம்'' என்பதுதான் அவர்களது வாதம்.

இதே தில்லியில், 2011 மார்ச்-ஏப்ரல் மாதங்களில், மோட்டார் சைக்கிளில் பறந்து செல்லும் இளைஞர்களை காவல்துறை கட்டுப்படுத்தவில்லை என்று இதே சமூக ஆர்வலர்கள் குறை கூறினார்கள். அந்த இளைஞர்கள் பலரும் பள்ளி, கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, ஷாப்பிங் மால்களிலும் சினிமாத் தியேட்டர்களிலும் குவிந்து கொண்டாட்டமாக இருந்தவர்கள். கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தில்லி காவல்துறை ஈடுபட்டது. அதிவேகமாக வாகனம் ஓட்டிய குற்றத்துக்காகவும், 18 வயது நிரம்பாமல், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காகவும் அவர்களது வீட்டுக்குத் தகவல் தெரிவித்தனர். அப்போது, பெற்றோர் சொன்ன வார்த்தைகள் இதுதான்: ""நாங்க சொன்னா எங்க பேச்சை கேக்கிறதே இல்ல சார். படிக்கிற புள்ள சார், ப்ளீஸ், கேஸ் போட்டுடாதீங்க. நல்லா உதைச்சு அனுப்புங்க. புத்தி வரட்டும்''.

போலீஸ் நேராக முதுகிலோ அல்லது உண்மையிலேயே சக்கரத்தின் காற்றை வெளிப்படுத்தவோ சுட்டதால் இறந்திருக்காமல், அந்த இளைஞர்களில் ஒருவர் வேக சாகஸ விளையாட்டில் விழுந்து இறந்திருப்பார் என்றால், அப்போது இந்த பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் என்ன சொல்லியிருப்பார்கள்?

காவல்துறை செய்தது சரியல்ல என்பது ஒருபுறம் இருப்பினும், இன்றைய இளைஞர்கள் சாதாரண வேளையிலும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதும், அவர்கள் விபத்தில் சிக்குவதோடு மற்றவர்களையும் விபத்துக்கு ஆளாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துவதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதே உண்மை. இந்தப் பிரச்னை தில்லியில் மட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் இருக்கவே செய்கிறது.

உலகிலேயே அதிக விபத்துகளும், விபத்தில் அதிகமானோர் இறப்பதும் இந்தியாவில்தான். 13 லட்சம் பேர் உலக அளவில் விபத்தில் இறக்கின்றார்கள். இவர்களில் இந்தியாவில் 1 லட்சம் பேர். இதில் 27 விழுக்காடு மோட்டார் சைக்கிள் விபத்துகள். இதில் இறப்பவர்கள் பெரும்பாலோர் 15 முதல் 29 வயது இளைஞர்கள். இத்தகைய விபத்துகளின்போது சாலையில் நடந்துசெல்வோர் இறப்பது 13 விழுக்காடு.

இந்திய சாலைகளில் அதிக விபத்துகளுக்குக் காரணம் சாலை சரியாக இல்லை, போக்குவரத்து விதிகளை ஓட்டுநர்கள் மதிப்பதில்லை, குடிபோதையில் வாகனத்தை ஓட்டுகிறார்கள் - இந்தக் காரணங்களைத்தான் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தற்போது தில்லி சம்பவத்தில் காயமடைந்த புனித் சர்மா, துப்பாக்கியால் சுட்டதில் இறந்த கரண் பாண்டே இருவரும் 19 வயது இளைஞர்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனீத் சர்மா குடித்திருந்ததாக ரத்தப் பரிசோதனை சொல்கிறது. கரண் பாண்டே மட்டும் மது அருந்தாமலா இருந்திருப்பார்?

இளைஞர்களைக் கட்டுப்படுத்தத் தெரியாமல், கல்லெறிந்தவர்கள் மீது குண்டு எறியும் காவல்துறையின் செய்கை குற்றம்தான். ஏற்றுக் கொள்வோம். அதேபோன்று, ரூ.75,000 விலையுள்ள 200 சிசி மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்து, இரவு 2 மணிக்கும் வீடு திரும்பாமல் சுற்றித் திரிய அனுமதித்து, கொடுக்கும் கைச்செலவுப் பணத்தை எப்படி செலவழிக்கிறார்கள் என்பது பற்றியும் கவலையே இல்லாத பெற்றோரின் செயல் குற்றம் ஆகாதா?

÷காவல்துறையின் அத்துமீறல்கள், காவல்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள், தனது உடற்கட்டைக்கூடச் சீராகவும் வலுவாகவும் வைத்துக் கொள்ளாமல் மாமூல் வாங்குவதிலும், அப்பாவிகளைக் குறிவைத்துப் பணம் பிடுங்குவதிலும் மட்டுமே முனைப்புக் காட்டும் போக்கு இவையெல்லாம் காவல்துறையினர் என்றாலே முகம் சுளிக்க வைப்பது என்னவோ உண்மை. ஆனால், தாங்கள் காக்கிச் சட்டை போடுவதே அடாவடி அரசியல்வாதிகளுக்கும், ஊழல் ஆட்சியாளர்களுக்கும் சலாம் போடுவதற்கும், பாதுகாப்புத் தருவதற்கும் என்கிற அவலநிலையில் தவிக்கும் காவல்துறையைப் பார்த்தால் பரிதாபமாகவும் இருக்கிறது.

÷"மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி' என்பது போல, காவல்துறை செயல்பட்டாலும் தவறு, செயல்படாமல் இருந்தாலும் தவறு, என்கிற ஊடகங்களின் போக்கும், அவர்களை செயல்படாமல் இருக்கத் தூண்டும் ஆட்சியாளர்களின் போக்கும் எந்தவிதத்தில் சரி? கண்டித்து வளர்க்காத குழந்தை, காவல்துறை குண்டுக்கு இரையான கதை இது, அவ்வளவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.