எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பிரச்னை தீராது!

நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் உரிமை அறியும் சட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து நிலம் ஆக்கிரமிப்பு வரன்முறைச் சட்டமும் காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்காக...

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:26 pm

ஆசிரியர்

நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் உரிமை அறியும் சட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து நிலம் ஆக்கிரமிப்பு வரன்முறைச் சட்டமும் காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்காக கொண்டு வரப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குறை கூறியபோதிலும், இந்தச் சட்டம் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தம் பெறுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

2007-ஆம் ஆண்டிலும், 2011-ஆம் ஆண்டிலும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேறாத இந்த மசோதா, தற்போது புதிய திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தற்போது மக்களவையில் ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிமுகம் செய்த இந்த மசோதாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் - பொது நோக்குக்காக (பப்ளிக் பர்பஸ்) கையகப்படுத்தும்போது அதற்கான சந்தை மதிப்பில் நான்கு மடங்குத் தொகையை ஊரகப் பகுதியிலும், இரண்டு மடங்குத் தொகையை நகர்ப் பகுதியிலும் வழங்க வேண்டும் என்பதுதான். அத்துடன் அரசும் தனியார் நிறுவனமும் இணைந்த திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களில் 80% பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும். தனியார் மட்டுமே செயல்படுத்தும் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் நில உரிமையாளர்கள் 70% பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டையும் தவிர மிகப்பெரிய மாறுதல்கள் இந்த மசோதாவில் இல்லை.

அரசு, தனது திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது முன்பு போலவே நில உரிமையாளர்களின் சம்மதம் தேவையே இல்லை.

இந்த மசோதாவின் பெயரையும் மாற்றியுள்ளார்கள். நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத்தன்மை மசோதா-2012 என்று மாற்றியுள்ளார்கள்.

பல திருத்தங்களுக்குப் பிறகும்கூட, இந்த மசோதாவுக்கு பாஜக, சமாஜ்வாதி கட்சி ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்தன. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்- அரசு மிகப்பெரும் அளவில் நிலம் கையகப்படுத்தும்போது விவசாய நிலங்களை மட்டுமே நாம் இழக்கிறோம். ஆனால், நிலத்தை இழக்கும் விவசாயிகள் வாழ்க்கையை இழக்கிறார்கள். இந்த நிலம் கையகப்படுத்துவது தனியாருக்கு உதவி செய்வதாகவே இருக்கிறது. இந்த இரண்டிலும்தான் எதிர்க்கட்சிகள் கருத்து மாறுபட்டு நின்றன.

மேலும், அவசரகால நடவடிக்கையாக சில கையகப்படுத்துதலை விரைந்து, சில நடைமுறைகளை மீறிச் செயல்படுத்தலாம் என்று மசோதா குறிப்பிடுகிறது. இந்தச் சொல்லாடல் பொருள் மயக்கம் தருவதால் சரியான விளக்கம் தேவை என்றன எதிர்க்கட்சிகள்.

இதுவரையிலும் இந்தியாவில் பல்வேறு அணைகள் கட்டுதல், அனல்மின் நிலையம் அமைத்தல், அணுசக்தி நிலையம் அமைத்தல், புலிகள் காப்பகம் உருவாக்குதல் போன்ற பொது நோக்குப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, இடம்பெயர நேர்ந்த மக்கள் தொகை, இந்திய மக்கள் தொகையில் 10% என்று புள்ளிவிவரம் தரப்படும்போது மிகவும் ஆச்சரியமாகவும் நம்பமுடியாமலும் இருந்தாலும், அதுதான் உண்மை. இவ்வாறு இடம்பெயர்ந்த குடும்பங்களில் புது இடத்தில் தங்கள் வாழ்வை மீட்டெடுத்தவை 10%க்கும் குறைவு என்பது மற்றொரு சுடுகின்ற உண்மை.

வெளியேறும் விவசாயிகளுக்கு இதுநாள் வரை மிகக் குறைந்த இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டது. அந்தப் பணம் எளிதில் கரைந்தது அல்லது அதிக வட்டி தருவதாக தனியார் நிறுவனங்கள் வாங்கிக்கொண்டு மறைந்தன. விவசாயக் குடும்பத்தில் பெண்களுக்கு எந்தவிதப் பங்கும் கிடைக்கவில்லை. ஆண்களே இந்தப் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவழித்துக் கரைத்தனர். விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட மாற்று இடங்கள் பயிர் செய்ய ஏற்றவையாக இல்லை. நஷ்டமடைந்து விரக்தியுடன் வெளியேறி, கூலித்தொழிலாளியாக மாறிய விவசாயிகளே அதிகம்.

இந்த இழப்பீட்டுத் தொகையையும் மாற்று இடத்தையும் பெறுவதில், அதிகாரிகளுக்கு குறைந்தது 10% லஞ்சமாக போய்ச் சேர்ந்தது. நிலப் பட்டா யார் பெயரில் இருந்ததோ அவருக்கு மட்டுமே இழப்பீடும் மாற்று இடமும் வழங்கப்பட்டது. ஆகவே, பணத்தைப் பங்கு போடுவதில் ரத்த உறவுகள் தங்களுக்குள் சண்டையிட்டு வருந்தின. வழக்குரைஞர்கள்தான் அதனால் லாபமடைந்தனர். புதிய இடத்தில் குடியமர்த்தப்பட்டபோது, அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இவர்களை வேண்டாத வரவாகப் பார்த்தார்கள். தண்ணீர் பகிர்ந்துகொள்வதிலும்கூட சங்கடங்கள். இந்த இடம்பெயர்ந்த மக்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்ட செடிபோல ஆனதால், சில நாள்களில் கருகிப் போனார்கள்.

இப்போது ஊரகத்தில் 4 மடங்கு, நகரத்தில் 2 மடங்கு இழப்பீடு தரப்பட வேண்டும் என்கிறது புதிய மசோதா. அப்படியே தரப்பட்டாலும், மேலே குறிப்பிட்ட குறைபாடுகள் அகன்றுவிடவா போகின்றன?

"பொது நோக்குக்காக' "பொது நன்மைக்காக' சிலர் தங்கள் வாழ்வையே தியாகம் செய்தாக வேண்டும்; வேறு வழியில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக இது தேவை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், எது பொது நன்மை என்கிற கேள்விக்கான பதிலை அரசு மட்டுமே தீர்மானிக்கிறது.

"நியாயமான இழப்பீடு' கிடைப்பதைக் காட்டிலும் நியாயமானது எது என்றால், "எது பொது நன்மை?' என்ற கேள்விக்கான நியாயமான பதில்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.