யாருக்கென்ன கவலை...
இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த, பைன் மரக்கட்டைகளை ஏற்றி வந்த வணிகக் கப்பலில், அக்கட்டைகளை இறக்குவதைச் சரிபார்க்கும் ஊழியர்கள்...


இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த, பைன் மரக்கட்டைகளை ஏற்றி வந்த வணிகக் கப்பலில், அக்கட்டைகளை இறக்குவதைச் சரிபார்க்கும் ஊழியர்கள் இரண்டு பேர், கட்டைகள் மீது அடிக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி நெடியால் இறந்துபோனார்கள்.
இத்தகைய நேர்வுகளில், மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கப்பலின் அடித்தள அறைக்குச் செல்லும் ஊழியர்கள் மூச்சுக் கருவிகள் அணிந்துதான் செல்ல வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் அத்தகைய பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் சென்றதால்தான் மரணம் நேரிட்டது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தை மிகவும் சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு விபத்து, இரு ஊழியர்களின் அலட்சியம் எனலாம். இதையே வேறு கோணத்தில் மிக நுட்பமாகப் பார்த்தால் இந்திய அரசின் அலட்சியம். கப்பல் மற்றும் துறைமுகக் கழகத்தின் விதிமுறைகள் இறுக்கமாக இல்லை எனலாம்.
இறந்து போன ஊழியர்கள் விக்டர் மோகன், ஜோபாய் இருவருமே தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பல்களில் வந்து இறங்கும் சரக்குகளைக் கையாளும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமே. இவர்களுக்கு இத்தகைய மரக்கட்டைகளை கொண்டு வரும் கப்பல்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதா அல்லது விழிப்புணர்வு இருந்ததா என்று தெரியவில்லை. அவ்வாறு அவர்களுக்கு எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தால் அவர்களும் எச்சரிக்கையாகவே இருந்திருப்பார்கள்.
இவ்வளவு கொடிய விஷத்தன்மை கொண்ட பூச்சிமருந்து தெளிக்கப்பட்டிருப்பதால், இந்த மரத்தைத் தொடாதீர், நெருங்காதீர் என்ற எச்சரிக்கைப் பலகைகள் அந்தச் சரக்குகளின் மீது இருந்ததா, இல்லையா? என்பதும் தெரியவில்லை.
கப்பல் சரக்குக் கையாளுகை முகவர்களாகச் செயல்படும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு எத்தகைய பொருள்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த பயிற்சி தொழிலாளர் நலத் துறையின் கட்டுப்பாட்டுக்குள்தான் வருகிறதா? என்பதிலும் தெளிவில்லை.
அடுத்ததாக, இந்தியாவுக்குள் வந்து இறங்கும் வெளிநாட்டு மரங்கள் மீது, வெறும் மருந்தின் நெடியே மரணம் விளைவிக்கும் அளவுக்கு நச்சான பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை இந்திய அரசு அனுமதிக்கலாமா? அது சரியாக இருக்குமா?
இந்த மரத்தின் பயன்பாடுகள் எதற்காக என்பது வேறு விஷயம். இவ்வளவு மோசமான பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்ட மரக்கட்டைகளை, இந்த விபத்து நிகழாமலேயே வெளியே கொண்டு வந்து ஓரிடத்தில் அடுக்கி வைக்கிறார்கள் என்றால், அதைத் தொட்டு விளையாடும் சிறார்கள் நிலை என்ன?, அல்லது மரம் இழைப்பகத்தின் ஊழியர்கள் இந்த விஷத்தால் இறந்தால் அந்த மரணத்தை எதனோடு சேர்ப்பார்கள்? இதற்கு யார் பொறுப்பு? இந்த மரணங்களுக்குக் காரணம் மரத்தின் மீது அடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துதான் என்பதையாவது அவர்கள் புரிந்திருப்பார்களா?
இவ்வளவு மோசமான பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட கட்டைகளை இந்தியாவுக்குள் அனுமதிப்பது சரியான நடவடிக்கைதானா? இத்தகைய மரக்கட்டைகளில் எத்தகைய வீரியம் உள்ள பூச்சி மருந்து தடவலாம், அந்த மரக்கட்டைகளை வாங்கும் இந்திய வணிகர்கள் இந்தப் பூச்சிமருந்தின் வீரியத்தைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்கிற எந்த அறிவுறுத்தலும் இல்லாமல் நாம் இவ்வாறு விஷம் தடவிய மரக்கட்டைகளை இந்திய மண்ணில் அனுமதிப்பது எந்த வகையில் சரி?
விமானம் மூலம் இந்தியாவுக்கு வரும்போது, வெளிநாட்டிலிருந்து செடிகள், மரங்கள், விலங்கினங்களை அனுமதி இல்லாமல் கொண்டு வர முடியாது என்கிறபோது, கப்பல் வழியாக மட்டும் எந்தத் தீங்கும் வந்து இறங்கலாமா?
தற்போது இறந்தவர் குடும்பத்துக்கு யார் இழப்பீடு தருவார்கள்? நியூஸிலாந்து கப்பல் நிறுவனமா அல்லது சரக்குகளைக் கையாளும் ஒப்பந்தம் பெற்ற தூத்துக்குடி நிறுவனமா?
சென்ற ஆண்டு பனாமா சரக்குக் கப்பல் சென்னை துறைமுகத்தில் நின்றபோது, சரக்கு ஏற்றும் பணியில் இருந்தவர் விழுந்து கப்பலிலேயே இறந்தார். என்ன இழப்பீடு வழங்கப்பட்டது? அண்மையில் "நிலம்' புயல் வீசியபோது சென்னை பெசன்ட் நகர் அருகே ஒதுங்கிய கப்பலில் இருந்து பணியாளர்கள் குதித்து இறந்தனர். இதில் எந்த இழப்பீடும் கிடைக்காத நிலையில், அரக்கோணத்தைச் சேர்ந்த இளைஞரின் தாயும், தந்தையும் வாழ்க்கைக்கு வேறு வழியின்றித் தற்கொலை செய்து கொண்டனர். அந்த கப்பல் நிறுவனத்தை இனிமேல் தண்டித்து என்ன பயன்?
சிங்கப்பூரைச் சேர்ந்த ஓஷன் சென்டினல் ஷிப் என்ற நிறுவனத்தின் கப்பல் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி, சீனா செல்லும் வழியில் கடலில் மூழ்கியது. பணியாளர்கள் மியான்மர் நாட்டினர். ஒருவர் இறந்தார். 14 பேர் காணாமல்போயினர். 9 பேர் பிழைத்தனர். இறந்தவர் குடும்பத்துக்கும், பிழைத்தவர்களுக்கு 6 மாத ஊதியத்துடன் உடைமை இழப்புக்கும் 10 லட்சம் டாலர் இழப்பீட்டை இந்த மாதம் வழங்கியது அந் நிறுவனம். இந்த இழப்பீடு தருவதற்கு முன்பாக அந்தக் குடும்பங்களுக்கு பிழைப்பு ஊதியம் மாதம் 3000 டாலர் வழங்கியிருக்கிறது.
இந்தியக் கப்பல்களில், கப்பலால் இறந்துபோக நேர்ந்தால், இந்தியருக்கு இத்தகைய இழப்பீடுகளும் குடும்பத்துக்கு பிழைப்பூதியமும் கிடைக்குமா? என்பது ஒரு பக்கம் இருக்க, இத்தகைய மிகக்கொடிய பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட மரக்கட்டைகளை எந்தவிதப் பரிசோதனையும் இல்லாமல் அவர்கள் மண்ணில் இறக்க, மனிதர் இறக்க அனுமதிப்பார்களா என்பது அடுத்த கேள்வி.
இனியாவது விழித்துக் கொண்டு இதற்கொரு தீர்வு காணுமா மத்திய அரசு? சரிந்து கொண்டிருப்பது ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, அரசின் மீதான நம்பிக்கையும்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...