திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சூடு தணியாது!

சென்னையில் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய ஆட்டோ கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:22 pm

ஆசிரியர்

சென்னையில் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய ஆட்டோ கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கட்டணம்- ஒரு 1.8 கிமீ தொலைவுக்கு ரூ.25. (முன்பு ரூ.14.) அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12. (முன்பு ரூ.6) இரவு நேரம் (11 மணி முதல் அதிகாலை 5 வரை) 50% அதிகம். இதுவே தமிழகம் முழுவதற்கும் ஆட்டோ ஓட்டுநர்களால் அடிப்படையாகக் கொள்ளப்படும்.

தற்போது இதே 1.8 கிமீ தொலைவுக்கும்கூட, சிறு நகரங்களில் ரூ.40ம் சென்னையில் ரூ.50ம் தந்தாக வேண்டும். இல்லையென்றால் ஆட்டோ வராது என்ற நிலைமைதான் உள்ளது. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கட்டணம் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு தந்துள்ளதே தவிர, இந்த ஆட்டோக் கட்டணத்தைத்தான் வசூலிப்பார்களா என்ற ஐயத்தின் காரணமாக, அரசின் பாராட்டத்தக்க முயற்சிக்கு உடனடியாகப் பாராட்டுத் தெரிவிக்க முடியவில்லை.

தில்லி மற்றும் பெங்களூரில் ஆட்டோ கட்டணம் குறைந்தபட்ச தொலைவு 2 கிமீ என்றால், அதற்கடுத்த ஒவ்வொரு 100 மீட்டருக்கும் எவ்வளவு கட்டணம் என்றும் நிர்ணயித்து பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.8 கூடுதல் கட்டணம் என்றால், 2 கிமீ-ரூ.25, 2.1 கிமீ ரூ.25.80, 2.2 கிமீ 26.60..... என்று கட்டணம் ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் அளவிடப்படுகிறது. அத்தகைய முறையைத் தமிழ்நாட்டிலும் அமலுக்கு கொண்டுவர வேண்டும். அப்படி நிர்ணயிப்பதும், வசூலிப்பதும்தான் முறை. நியாயம். ஆனால், ஆட்டோ உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே!

பாலக்காடு சென்று வரும் கோவை மக்களிடத்திலும், பெங்களூர் சென்று வரும் தமிழர்களிடத்திலும், ஊர்வந்து இறங்கியதும் ஏற்படும் மிகப்பெரும் சலிப்பு - ஆட்டோக்களின் கட்டணக்கொள்ளை! "அரசாங்கத்தால் எப்போதோ நிர்ணயித்த கட்டணம், இப்போது கட்டுப்படியாகுமா?' என்று சொல்லும் ஆட்டோக்காரருக்கு, அந்தப் பயணிகள் சொல்லும் பதில், "அந்த ஊரில் பெட்ரோல் இலவசமாகவா தருகிறார்கள், அதே விலைதானே இங்கேயும். உங்களுக்கு மட்டும் ஏன் கட்டுப்படியாகவில்லை?' என்பது.

இந்த ஒரு கேள்விக்கு எந்த ஆட்டோக்காரரும் அல்லது அவர் சார்ந்துள்ள தொழிற்சங்கமும் பதில் சொல்வதே இல்லை. சொல்லவும் முடியாது.

தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்து ஆணையம் தரும் புள்ளிவிவரத்தின்படி, தமிழ்நாட்டில் 2.14 லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இதில் சென்னையில் மட்டும் 71,470 ஆட்டோக்கள். இந்தப் புள்ளிவிவரம் அரசிடம் "உரிமம்' பெற்ற ஆட்டோக்களின் எண்ணிக்கை மட்டுமே. ஆனால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரிலும், உரிமம் பெறாத ஆட்டோக்கள் சில நூறு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை. இவை போலீசுக்கும், போக்குவரத்து அலுவலர்களுக்கும் தெரிந்தே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், ஆட்டோ உரிமையாளர்கள் பலர் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்தவர்களாக இருப்பதுதான். அல்லது, அவர்களுக்கு இருக்கும் அரசியல் பின்னணி!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தெருவிலும் ஓர் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. அதற்கு ஒரு கட்சி சார்ந்த தொழிற்சங்க அமைப்பின் பலகை நாட்டப்பட்டுள்ளது. ஒரே ஆட்டோவில் 5 பேர் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். போய் நின்றால், ஆட்டோ ஓட்டாத நபர் (ஸ்டாண்டு டைம் கீப்பர்), "எங்கே போக வேண்டும்' என்பார். கட்டணத்தை அறிவித்துவிட்டு, அவர் கூப்பிடும் நபர், ஓட்டையான ஆட்டோவை உருட்டி வருவார். ஆட்டோவைத் தேர்வு செய்யும் உரிமைகூட தமிழ்நாட்டு நுகர்வோருக்கு இல்லை.

அந்த ஆட்டோ ஓட்டுநர் மதுபோதையில் இருக்கிறார் என்று மறுத்தால், ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வழியில் போகும் ஆட்டோவை நிறுத்தி ஏறினால் பெரும் பிரச்னை செய்வார்கள். ரயில் நிலையங்களிலும் பஸ் நிலையங்களிலும் இந்த ஆட்டோ டைம்கீப்பர்களின் அராஜகம் சொல்லி மாளாது. பொதுமக்களுக்குத் தெரிந்திருக்கும் இந்த அராஜகம் காவல் துறையினருக்குத் தெரியாமலா நடக்கிறது? அதை நம்பவா முடிகிறது?

சில மாதங்களுக்கு முன்பு திருச்சி நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் சில ஆட்டோக்கள் வாங்கி, குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டன. இந்த ஆட்டோக்களில் கட்டணம், வழக்கமான ஸ்டாண்டு ஆட்டோக்கள் வசூல் செய்வதில் பாதியாக இருந்தது. பத்திரிகைகளும் பாராட்டி, செய்திகள் வெளியிட்டன. ஆனால், இந்த ஆட்டோக்களை இயக்கிய ஓட்டுநர்களை அமைப்பு சார்ந்த "ஆட்டோ டைம்கீப்பர்கள்' மிரட்டி, வேலையைவிட்டு விலகும்படிச் செய்தார்கள். இந்த ஆட்டோக்களை இயக்குவதற்கே ஆள் இல்லாமல் போனது. இதற்குப் பெயர் தொழிலாளர் ஒற்றுமை அல்ல, அடாவடிகளின் அராஜகம்.

ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகத்திலும் தரப்படும் அடையாள எண்ணை ஆட்டோவின் நான்கு பக்கங்களிலும் பெரிய வட்டத்துக்குள் எழுதவும் ஆட்டோ ஓட்டுநருக்கு கல்வித் தகுதியை நிர்ணயம் செய்வதும் மிகமிக அவசியம். தமிழ்நாட்டில் உள்ள 2.14 லட்சம் ஆட்டோக்களின் உண்மையான உரிமையாளர்கள் யார், ஓட்டுநர் யார் என்பதை புகைப்படத்துடன் ஆட்டோ ஓட்டுநர் இருக்கையின் பின்புறம், நுகர்வோர் பார்வையில் படும்படி ஒட்டி வைப்பார்களா?

ரூ. 80 கோடியில் இவர்களுக்கு மின்மீட்டர் மற்றும் ஜீபிஎஸ் கருவிபொருத்தி, ரசீது கொடுக்கும் இயந்திரத்தையும் சென்னையில் இலவசமாகக் கொடுக்கும் அரசு, இவற்றையும் வலியுறுத்தினால் என்ன தவறு?

ஆட்டோ - போலீஸ் - ஆர்டிஒ அலுவலகக் கூட்டணி உடைக்கப்படாமல் தமிழ்நாட்டின் ஆட்டோக்களை ஒழுங்குக்கு கொண்டுவர முடியாது. இந்த நிலைமையில் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைத்தான் ஆட்டோக்காரர்கள் வாங்குவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்படவில்லை.

கட்டணச் சீரமைப்பு மட்டுமே ஆட்டோக்களின் கட்டுப்பாடான மக்கள் சேவையை உறுதிப்படுத்தாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.