நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அரசின் கனிவான கவனத்துக்கு...

ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் குடிநீர்த் தொட்டிகள் உள்ளன. இதில் உள்ளாட்சியால் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் நிரப்பப்படுகின்றது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:19 pm

ஆசிரியர்

ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் குடிநீர்த் தொட்டிகள் உள்ளன. இதில் உள்ளாட்சியால் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் நிரப்பப்படுகின்றது. ஆனால், இதனை முற்றிலுமாக பயன்படுத்துவோர், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள், உணவுக்கூடங்கள், தேநீர் நிலையங்கள் நடத்துபவர்கள்தானே தவிர, பயணிகள் அல்ல.

அதேபோல, பயணிகளின் பயன்பாட்டைக் கருதி இந்தக் குடிநீர் தொட்டிகளில் அல்லது குழாய்களில் குடிநீர் வழங்கப்பப்பட்டாலும், பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட 200 மிலி தண்ணீர் விற்பனையை உறுதி செய்வதற்காக இந்தக் குடிநீர் கிடைக்காமல் செய்யப்படுவதும் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க, கண்காணிக்க, பேருந்து நிலையப் பொறுப்பாளர்கள் எந்த முயற்சியும் செய்வதில்லை.

இந்நிலையில், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதல், வெளியூர் பேருந்து நிலையங்களில் ரூ.10-க்கு "அம்மா பாட்டில் குடிநீர்' வழங்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்குப் பரவலாக வரவேற்பு உள்ளது. அம்மா உணவகங்களைப் போலவே இந்த குடிநீர் விநியோகமும் சிறப்பாகவே செயல்படும் என்று நம்பலாம்.

நீரைச் சுத்திகரித்து, பாட்டிலில் அடைத்துக் கொடுக்கும் பணியை போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த சாலைப் போக்குவரத்து பயிற்று நிறுவனம் மேற்கொள்ளும் என்றும், தமிழ்நாட்டில் 10 இடங்களில் குடிநீர் தயாரிப்பு ஆலைகள் நிறுவப்படும், இப்பணியில் போக்குவரத்துப் பணியாளர்களில் சிலருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய புறநகர்ப் பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 40 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் நான்கில் ஒரு பங்கு பயணிகள், தரச்சான்று பெறாத நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தரமற்ற பாக்கெட் குடிநீரை 200 மில்லி லிட்டர் ரூ.3 கொடுத்து வாங்குகின்றனர். மிகச் சிலரால் மட்டுமே வணிக இலச்சினை பொறிக்கப்பட்ட பாட்டில் குடிநீரை ரூ.20 கொடுத்து வாங்க முடிகின்றது. இந்நிலையில் ரூ.10-க்கு தமிழக அரசே அம்மா பாட்டில் குடிநீர் வழங்கும் என்றால், அது நிச்சயமாக வரவேற்புக்குரிய நடவடிக்கை என்பதில் ஐயம் இல்லை.

இருப்பினும், தேவை அதிகம் என்பதால் அனைத்து புறநகர்ப் பேருந்து நிலையங்களிலும் அம்மா பாட்டில் குடிநீர் கிடைக்கச் செய்வது என்பது இயலாது. 10 இடங்களில் அலகுகள் நிறுவப்பட்டு தயாரிக்கப்பட்டாலும்கூட, தேவைக்கும் தயாரிப்புக்கும் மிகப்பெரும் இடைவெளி இருக்கவே செய்யும்.

தவிர, எப்போதுமே அரசு ஊழியத்தில் தொழிலாளர்களிடையே ஆளும்கட்சி சார்பானவர்கள், எதிர்க்கட்சி சார்பானவர்கள் என்று பிரிந்து கிடக்கின்றனர். ஆகவே, "அம்மா பாட்டில் குடிநீர் தீர்ந்துவிட்டது, வரவேயில்லை' என்று சொல்லி, மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் செயல்படும் நபர்களும் பேருந்து நிலையத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கவே செய்வார்கள். இந்த நந்திகளையும் தாண்டித்தான் மக்களுக்கான ரூ.10-க்கு அம்மா பாட்டில் குடிநீர் கிடைக்கும். முதல்வரின் திட்டம் என்பதால் இந்தத் திட்டத்தை ஏனைய திட்டங்களைப் போல அவ்வளவு எளிதாக நீர்த்துப் போகச் செய்ய முடியாது என்பது சற்று ஆறுதல்.

தமிழக அரசு மேலும் சில எளிய, கடுமையான நடவடிக்கைகளைப் பேருந்து வளாகங்களில் மேற்கொள்ளுமேயானால், பேருந்து பயணிகளுக்குக் குடிநீர் மட்டுமல்ல, எல்லா பொருள்களும் தரமாகவும் உரிய விலையிலும் கிடைக்க வழியேற்படும்.

ரயில் நிலையங்களில் எந்த பாட்டில் குடிநீர் விற்பனை செய்தாலும் ரூ.15க்குதான் தரப்பட வேண்டும் என்கின்ற விதிமுறை இருக்கிறது. அதேபோல, பேருந்து வளாகங்களிலும் அம்மா பாட்டில் குடிநீரைப் போலவே, மற்ற வணிக இலச்சினை கொண்ட குடிநீர் பாட்டில்களும் ரூ.10-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்கிற விதிமுறை கொண்டு வரப்பட வேண்டும். இல்லையெனில் அந்த வணிக இலச்சினை கொண்ட குடிநீர் பாட்டில்கள் பேருந்து நிலையத்திற்குள் விற்பனை செய்ய அனுமதி இல்லை என்கிற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட வேண்டும்.

இப்படி ஒரு நிபந்தனை விதிக்கப்படும்போது குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கம்போல, கட்டுப்படியாகாது என்று குரல் எழுப்பக்கூடும். ஒரு லிட்டர் பாட்டில் குடிநீர் தயாரிப்பு செலவு சுமார் ரூ.6.50தான் ஆகிறது. விற்பனை வரி, போக்குவரத்துச் செலவு, முகவர் கமிஷன், கடைகளுக்கான கமிஷன், விளம்பரச் செலவு, முதலீட்டாளர் லாபம் எல்லாமும் சேர்ந்துதான் பாட்டில் குடிநீரின் விலையை உயர்த்துகின்றன. ஆகவே, தமிழ்நாட்டில் குடிநீர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியில் 10 சதவீதத்தை அடக்கவிலைக்கே தமிழக அரசுக்காக பேருந்து நிலையங்களில் மட்டும், கட்டாயமாக வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தாலும் தவறில்லை.

பேருந்து நிலையங்களில் குடிநீர் மட்டுமின்றி, சிப்ஸ், குளிர்பானங்கள் போன்றவை வெளியில் விற்கும் விலையை விட அதிக விலையில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. கேட்டால் மிகப்பெரிய தொகைக்கு கடைகளை ஏலம் எடுத்திருப்பதாக கூறி அங்கிருக்கும் கடைக்காரர்கள் அடாவடி நியாயம் பேசுவார்கள். பேருந்து நிலைய வளாகத்தில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் - அது எந்தக் கடையில் விற்பனை செய்யப்பட்டாலும் - ஒரே விதமான நியாய விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். மீறுவோரின் கடை உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

மதுக்கூடத்தை சுற்றி 100 மீட்டர் தூரத்துக்கு யாரும் தண்ணீர் பாக்கெட், சோடா விற்கக்கூடாது என்று ஏலம் எடுத்தவர் அராஜகம் செய்ய முடியும் என்றால், ஒரு பேருந்து நிலையத்தில் இன்னின்ன பொருளுக்கு இதுதான் விலை என்று மக்கள் நலனுக்காகக் கட்டாயப்படுத்த அரசினால் நிச்சயம் முடியும்.

ஏறத்தாழ 50 லட்சம் பேர் தினமும் தமிழகத்தில் பயணிக்கிறார்கள். பேருந்து நிலையங்களில் நியாயமான விலையில் குடிநீரும் பொருள்களும் தூய்மையான சுற்றுப்புறமும் வசதிகள் நிறைந்த முறையான பராமரிப்பு உடைய கழிப்பறைகளும் உறுதிப்படுத்தப்படுமேயானால் அரசுக்கான ஆதரவு மக்கள் மன்றத்தில் மலையளவு பெருகும் என்பது மட்டுமல்ல, இந்த விஷயத்தில் தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் என்பதிலும் ஐயப்பாடு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.