நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விஷமப் பேச்சு!

கடலோர ஆந்திரம், ராயலசீமா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகச் செயலிழந்து கிடக்கிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:14 pm

ஆசிரியர்

கடலோர ஆந்திரம், ராயலசீமா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகச் செயலிழந்து கிடக்கிறது. அரசு அலுவலர்கள் 4.5 லட்சம் பேர் இந்தப் போராட்டத்தில் குதித்திருப்பது இந்தப் போராட்டத்துக்கு மிகப்பெரும் வலு சேர்த்திருக்கிறது. அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. சுமார் 12,000 அரசுப் பேருந்துகள் பணிமனையைவிட்டு வெளியே வரவில்லை. கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்துசெல்லும் திருப்பதி-திருமலை கோவில்களில், கடந்த 40 ஆண்டுகளில் கண்டிராத அளவில் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. திருமலைக்குச் செல்லும் பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக இயக்கப்படவில்லை. தனியார் வாகனங்களோ வேலை நிறுத்தம் காரணமாக சாலைக்கே வரவில்லை.

ஏன் திடீரென இப்படியொரு எதிர்வினை? இதுவரை காங்கிரஸ் கட்சி எம்பி, எம்எல்ஏ-க்கள் மட்டுமே அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கையில், இந்த அளவுக்கு ஒன்றுபட்ட ஆந்திரம் கோரி போராட்டம் நடைபெறக் காரணம், தெலங்கானா ராஷ்டிர சமிதியின் நிறுவனர் கே. சந்திரசேகர ராவ் உமிழ்ந்திருக்கும் நெருப்புச் சொற்கள்தான். ஆந்திர மாநிலத்தையே செயலிழக்கச் செய்திருக்கிறது அவரது விஷ(ம)ப் பேச்சு.

தன்னை சந்திக்க வந்த தெலங்கானா என்ஜிஓ அலுவலர் சங்கத்தினரிடம் அவர் பேசும்போது, ""ஆந்திரத்திலிருந்து வந்த அரசு அலுவலர்கள் அனைவரும் ஆந்திரத்துக்கே திரும்பிச் செல்ல வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா மக்கள்தான் அரசு அலுவலகங்களில் அலுவலர்களாக, அதிகாரிகளாக இருப்பார்கள்'' என்று கூறிய வார்த்தைகள்தான் சீமாந்திரத்தில் காணப்படும் மிகப்பெரும் எதிர்ப்புக்குக் காரணம்.

தெலங்கானா பகுதியில் அதிகாரிகளாகவும் அரசு ஊழியர்களாகவும் கல்லூரி, பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களிலும் இருப்போர் பலரும் கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது என்னவோ நிஜம். ஆனால் இவர்கள் வேற்று மொழியினர் அல்லர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஒரு மொழி மக்கள்!

ஆந்திர மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்ற இவர்கள், தங்களின் வளமான ஆந்திரப் பகுதிகளை விட்டு இங்கே வந்திருக்கக் காரணம் அரசு வேலை. இதேபோன்று இங்கே வங்கிப் பணியாளர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் பலரும் பிற மாவட்டத்தினர்தான். தெலங்கானா பகுதியில் உள்ள வணிகர்கள்கூட ஆந்திரத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்த தெலுங்கர்கள்தான். அப்படியிருக்கும்போது, "தெலங்கானா மாநிலம் அமைந்தவுடன் வெளியேறி விடுங்கள்' என்று சொல்ல இது என்ன இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போன்றதா? சந்திரசேகர ராவ் விருப்பத்தை மீறி அங்கே பணியாற்றினால் அரசு ஊழியர்கள் தாக்கப்படுவார்கள் என்று பொருளா? வணிகர்களின் உடைமைகள் சூறையாடப்படும் என்று அச்சுறுத்துகிறாரா சந்திரசேகர ராவ்.

தெலங்கானா இன்றுவரை பின்தங்கிய பகுதி. அங்கே உயர்கல்வி முடித்தோர் எண்ணிக்கை குறைவு என்பதால்தான் ஆந்திரத்தின் பிற மாவட்ட மக்கள் அங்கே அரசு அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நாளை தெலங்கானா மாநிலம் அமைந்து, தெலங்கானா மாநில பணியாளர் தேர்வாணையம் மூலமாக புதிய ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்படும்போது, நிச்சயமாக நிலைமை மாறும். தற்போது உள்ளவர்கள் ஓய்வுபெற்று செல்வதும் புதியவர்கள் தெலங்கானா மக்களாக மாறுவதும் இயல்பாக நடைபெறும். ஆனால் சந்திரசேகர ராவ் சொல்வதைப்போல அது ஒரே நாளில் நடந்துவிடாது.

அரசு அலுவலர்களுக்கு இப்படிச் சொல்லும் சந்திரசேகர ராவ், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை எப்படி நியமிக்க வேண்டும் என்று சொல்வார்? மத்திய அரசு அலுவலகத்திலும்கூட தெலங்கானா மக்கள்தான் இடம்பெற வேண்டும் என்பாரா? இதற்கே இப்படி என்றால், கிருஷ்ணா, கோதாவரி நதிநீரை விவசாயத்துக்காகவும் குடிநீருக்காவும் ஆந்திரத்துக்கு அவர் கொடுப்பார் என்பது என்ன நிச்சயம்?

மாநிலம் பிரிக்கப்பட்டு தன் பகுதி தனி மாநிலமாக அமைந்தால் மட்டுமே, தான் முதலமைச்சர் ஆக முடியும் என்பதற்காக தனிமாநிலம் கோரி போராட்டம் நடத்தி, வெற்றியும் பெறும் அரசியல்வாதிகளால் அமையும் எந்தத் தனி மாநிலமும் வளர்ச்சி காணாது.

தெலங்கானா மாநிலம் அமைந்தாலும் அங்குள்ள மக்கள் முன்னேற்றம் காண்பார்கள் என்பது நிச்சயமில்லை. தெலங்கானாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஜமீன் முறை வேறு வடிவத்தில் மீண்டும் தலையெடுக்கும் என்பதற்கான அறிகுறிதான் சந்திரசேகர ராவ் பேச்சில் தொக்கி நிற்கிறது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான உடனே சந்திரசேகர ராவ் தன்னை தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக நினைத்துக்கொண்டதால் ஏற்பட்ட விஷமப்பேச்சு இது. சந்திரசேகர ராவின் வெறுப்பூட்டும் பேச்சு ஒன்றுபட்ட ஆந்திரமே வேண்டும் என்ற கோரிக்கைக்கு மீண்டும் பெரும்வலு சேர்த்துள்ளது.

இத்தகைய பேச்சுக்காக சந்திரசேகர ராவை கைது செய்திருக்க வேண்டும். காங்கிரஸ் அரசுக்கு அவரது கூட்டணி தேவை அதனால் மௌனம் காக்கிறது. இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்த தேசிய கட்சியான காங்கிரஸ், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் சில இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற முட்டாள்தனங்களைச் சகித்துக்கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. சுதந்திரம் வாங்கித் தந்தவர்களே பிரிவினைக்கு வித்திடுகிறார்களே.. சே..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.