மோசடி குறையும்; வருவாய் கூடும்!
நூறு ஆண்டுகளுக்கு மேலாக எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்திருந்த பத்திரப்பதிவு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவருவதற்காக, பத்திரப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது.


நூறு ஆண்டுகளுக்கு மேலாக எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்திருந்த பத்திரப்பதிவு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவருவதற்காக, பத்திரப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பைத் தடுப்பதற்கு இந்த சட்டத் திருத்தங்களில் அதிக கவனம் தரப்பட்டுள்ளது. வேறு மாநிலத்தில் பத்திரப்பதிவு செலவு குறைவு என்பதால் அங்குபோய் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறைகள் தற்போது இருப்பதனால், சொத்துகள் இருக்கும் மாநிலம் இத்தகைய பத்திரப்பதிவு வருவாயை இழக்கும் நிலை உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், சொத்துகள் எந்த மாநிலத்தில் உள்ளதோ அதே மாநிலத்தில்தான் பத்திரப்பதிவு செய்தாக வேண்டும்.
அதேபோன்று குத்தகை ஒப்பந்தங்கள், வீடு கட்டுவோர் மற்றும் வீட்டுஉரிமையாளருக்கு இடையிலான ஒப்பந்தம், அதிகாரப் பத்திரம் ஆகிய எல்லா ஒப்பந்தங்களையும் பத்திரப்பதிவு செய்தாக வேண்டும் என்று புதிய சட்டத்திருத்தம் சொல்கிறது.
தற்போதைய சட்டத்தின்படி, குத்தகை ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்குக் குறைவாக இருக்கும்போது பத்திரப்பதிவு செய்ய வேண்டியதில்லை. இதனால், குத்தகை ஒப்பந்தங்களை ஒரு ஆண்டுக்கு உள்ளாகவே செய்துகொள்வதும், ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக்கொள்வதுமான நடைமுறையால், குத்தகை எடுப்பவருக்கு நிலையற்ற தன்மையும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகின்றன. பத்திரப்பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் நீதிமன்ற வழக்கில் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆகவே பல தகராறுகள் நீதிமன்றத்தின் படியேற முடியாத நிலையும் இருக்கின்றன. இப்போது எல்லா ஒப்பந்தங்களும் பத்திரப்பதிவு செய்யப்பட்டாக வேண்டும் என்பதால் இத்தகைய மோசடிகள் குறையும்; அரசுக்கு வருவாயும் கிடைக்கும்.
அனைத்து பத்திரப் பதிவுகளையும் (புக்-4) மக்கள் அனைவரும் பார்வையிடலாம் என்கின்ற திருத்தமும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. போலி பத்திரப்பதிவுகள் குறையும். இந்தச் சட்டத் திருத்த மசோதாவில் போலிப் பத்திரங்களைக் குறைக்க இன்னொரு விதிமுறையையும் புகுத்தியிருக்கிறார்கள். தற்போதைய சட்டப்படி, சார்பதிவு அலுவலகங்கள் எந்த பத்திரப்பதிவையும் மறுக்க முடியாது. இனிமேல், அரசு மற்றும் அறக்கட்டளை நிறுவனங்கள் தொடர்பான சொத்துகள் குறித்த பத்திரப் பதிவுகளை சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது.
மகனை தத்தெடுத்தால் கட்டாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிற விதிமுறை, இனி மகளை தத்தெடுப்பதற்கும் பொருந்தும் என்று மாற்றியிருப்பதும் வரவேற்கத்தக்கதே.
இவ்வளவு சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்த போதிலும் இன்னும் இதில் நிறைவு பெறாத நிலைமை இருக்கவே செய்கிறது.
பல ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை என்ற நிலைமை இருந்த நேரத்தில், அப்துல் கரீம் தெல்கி போன்றவர்கள் போலிப் பத்திரங்களை அச்சடித்து விற்று, பல ஆயிரம் கோடி ரூபாயை முறைகேடாகப் பெற்றனர். இதற்கு மாநில அரசியல்வாதிகளும் காவல்துறையும் உடந்தையாக இருந்தனர். தற்போது எல்லா ஒப்பந்தங்களையுமே பத்திரப்பதிவு செய்தாக வேண்டும் என்று சட்டத் திருத்த மசோதா கட்டாயமாக்கும்போது, இத்தகைய மோசடிகளைத் தடுக்க, இன்றைய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விதிமுறைகள் இந்த புதிய சட்டத்திருத்தத்தில் இல்லை.
போலிப் பத்திர மோசடி தொடர்பான விசாரணை நடத்தியவர்கள் "இத்தகைய மோசடிகளைத் தடுக்க வேண்டுமானால், ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்படுவதைப் போல தொடர்ச்சியான எண்கள் பத்திரங்களிலும் அச்சிடப்பட வேண்டும்' என்று யோசனை தெரிவித்தார்கள். சட்டத் திருத்தத்தோடு போலிப் பத்திரங்களுக்கு முடிவு கட்டும் நிலைமையை தகவல்தொழில்நுட்ப உதவியுடன் நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். பத்திரப் பதிவு கட்டணங்களைச் செலுத்தவதைக் கூட, சார்பதிவாளர் அலுவலகத்திலேயே ஏடிஎம் கார்டு மூலம் செலுத்தும் மிக எளிய நடைமுறைகள் தேவை.
இந்தியாவில் நடைபெறும் சொத்து மோசடிகள், சொத்துத் தகராறுகள் பலவும் அதிகாரப் பத்திரத்தால் வருபவை. தமிழ்நாட்டில் மட்டும் 2010-11ஆம் ஆண்டில் 3.75 லட்சம் அதிகாரப் பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி முதலாக, அதிகார பத்திரம் பெறுபவர் பதிவு செய்வதோடு, அதிகாரம் கொடுத்த முதன்மை நபர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழையும் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் உண்மையாகவே உயிருடன் இருக்கிறாரா என்பதை சார்பதிவாளர் சரிபார்க்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை. அதிகாரம் கொடுத்த உரிமையாளர் உயிருடன் இருப்பதாக சான்று அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாளைக்குள் பதிவு செய்யப்படுகிறதா என்பதைக் கவனிப்பதோடு சார்பதிவாளர் வேலை முடிந்து போகிறது. இந்தக் குறைபாடு களையப்பட வேண்டும்.
இதேபோன்று, ஒரு சொத்துக்கு வாரிசுகள் } குறிப்பாக மகன்கள் மகள்கள் } உயிருடன்இருக்க, முதன்மை உரிமையாளர் அந்த சொத்துகளுக்கான அதிகாரப் பத்திரத்தை வாரிசுகளுக்குத் தெரியாமலேயே இன்னொருவருக்குக் கொடுத்திருந்து, அந்த சொத்து விற்கப்பட்டிருந்தால், பிரச்னை நீதிமன்ற வழக்காக மாறி, பல தலைமுறைகளுக்கு தொடர்கிறது. அதிகாரப் பத்திரம் அளிக்கும்போது அந்த சொத்துக்கான உரிமையாளர் உயிருடன் இருக்கும் சான்றுடன், வாரிசுகள் இருப்பின் அவர்தம் ஒப்புதலும் இருந்தாக வேண்டும் என கட்டாயமாக்கப்படுதல் அவசியம்.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்படும்போது இத்தகைய சிக்கல்களையும் உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும்.
சட்டம் இயற்றுவது பெரிதல்ல. ஓட்டைகள் இல்லாத, எல்லா பரிமாணங்களையும் உள்ளடக்கிய சட்டமாக அது இருக்க வேண்டும் என்பது முக்கியம். நமது தமிழக எம்.பி.க்களில் யாராவது ஒருவர் மேலே குறிப்பிட்ட குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள் என்று எதிர்பார்ப்போமாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...