நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முதலுக்கே மோசம்!

பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழு, சில்லறை வணிகத்துக்கான அன்னிய நேரடி முதலீட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:06 pm

ஆசிரியர்

பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழு, சில்லறை வணிகத்துக்கான அன்னிய நேரடி முதலீட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறது. இந்த முடிவின் பின்னணி அதிர்ச்சியளிக்கிறது என்பது மட்டுமல்ல, அது அரசு அன்னிய நேரடி முதலீட்டுக்கு முன்வைத்த காரணங்களுக்கு எதிராக இருப்பதுதான் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு செய்யும் நிறுவனங்கள் தங்கள் கொள்முதல் பொருள்களில் 30 சதவீதத்தை இந்திய சிறுதொழிற்கூடங்களில்தான் வாங்க வேண்டும் என்பதும், தாங்கள் இந்தியாவுக்குக் கொண்டு வரும் முதலீட்டில் பாதியை தொழில்சார் பின்புலக் கட்டமைப்புகளுக்குச் செலவிட வேண்டும் என்பதுதான் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கான மிக முக்கியமான நிபந்தனைகளாக இருந்தன.

தொழில்சார் பின்புலக் கட்டமைப்பு என்பது, உற்பத்தி, பதப்படுத்துதல், வடிவமைப்பை புதுமை செய்தல், பேக்கிங் பொருள்கள், குளிர்பதனக்கூடங்கள், வேளாண் விளைபொருள்கள் உற்பத்திக்கான ஒப்பந்தங்கள், பொருள்களை பல இடங்களுக்கு கொண்டுசெல்லும் வாகனவசதி போன்ற எல்லாமும் பின்புலக் கட்டமைப்புகள் (பேக்-என்டு இன்ப்ராஸ்டரக்சர்) என நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பிரிவுகள் அனைத்திலும் 50 விழுக்காடு முதலீட்டை அன்னிய நேரடி முதலீடு செய்யும் நிறுவனங்கள் செய்தாக வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து வியாபாரம் நடத்தி லாபம் சம்பாதிக்கும்போது, அவர்கள் இந்திய சிறுதொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்த ஆசைவார்த்தைகளை நம்பித்தான் பலரும் சில்லறை முதலீட்டில் அன்னிய முதலீட்டை ஆதரித்தனர். தற்போது இந்த இரு நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த முடிவுக்குக் காரணம் சென்றவாரம், வால்மார்ட் நிறுவனம் இந்த நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான். முதலில் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு உள்ளே நுழைந்த பிறகு, ஆட்சியாளர்களின் கையை முறுக்கி தங்களது சுயரூபத்தைக் காட்ட முற்பட்டிருக்கிறது வால்மார்ட்.

இந்திய சிறுதொழிற்கூடங்களில் 30 விழுக்காடு பொருள்களை வாங்குவது எங்களுக்கு சாத்தியமில்லை என்று வால்மார்ட் நிறுவனம் வெளிப்படையாகவே அறிவித்தபோது, அப்படியென்றால் நடையைக் கட்டுங்கள் என்று சொல்லும் துணிவு நமது ஆட்சியாளர்களுக்கு ஏன் இல்லை? வால்மார்ட் நிறுவனம் மனம் குளிரும் வகையில் இந்த நிபந்தனையைத் தளர்த்த வேண்டிய அவசியம்தான் என்ன?

20 லட்சம் டாலருக்கும் மிகாமல் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களும் சிறுதொழில்கூடமாகக் கருதப்பட்டு, இந்த 30 விழுக்காடு கொள்முதலுக்குத் தகுதியான நிறுவனமாகக் கருதப்படும். அதுமட்டுமல்ல. முதல் கொள்முதலின்போது இந்த நிறுவனம் 20 லட்சம் டாலருக்கு மிகாத முதலீடு கொண்ட நிறுவனமாக இருந்தால் போதும். அதன்பிறகு, இந்த நிறுவனத்தின் முதலீடு 20 லட்சம் டாலருக்கு அதிகமாக வளர்ந்தாலும், தகுதிப் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் பொருள்களை வாங்கலாம். இதையும் கடையைத் திறந்தபிறகு செய்தால் போதும்.

பெயருக்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதையே தங்கள் நிறுவனமாக மாற்றிக் கொண்டு விடுவார்கள். இதனால் இந்திய சிறுதொழில் வளர்ச்சிக்கு என்ன லாபம் என்று கேட்கக்கூட மத்திய அரசுக்குத் தெரியவில்லையா, இல்லை, தெரிந்தும் கேட்கவில்லையா?

பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கான தொழிற்கூடங்களை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளவும், இந்தியத் தொழிற்கூடங்களில் தங்களுக்குப் பினாமியாக செயல்படாத சிறுதொழில்கூடங்களை ஒழித்துக்கட்டவும்தான் இந்த நிபந்தனைத் தளர்வு உதவப்போகிறது.

மேலும், பின்புலக் கட்டமைப்புக்கு 50 விழுக்காடு செலவிட வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்பட்டுவிட்டது. அவர்கள் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பார்களே தவிர, அதனால் இந்தியாவுக்குப் பயன் ஒன்றும் இருக்கப் போவதில்லை என்று அர்த்தம்.

முந்தைய நிபந்தனைப்படி சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள்தொகை உள்ள நகரங்களில் மட்டுமே கடை திறக்க வேண்டும் என்று இருந்தது. தற்போது அந்த நிபந்தனையையும் நீக்கிவிட்டார்கள். மாநில அரசு அனுமதித்தால் எந்த நகரிலும் தொடங்கலாம்.

தனி இலச்சினை விற்பனைக் கடைகளுக்கான அன்னிய நேரடி முதலீட்டிலும்கூட விதிகள் தளர்த்தப்பட்டுவிட்டன. நிபந்தனைகளைத் தளர்த்துவதன் மூலம் அதிக முதலீட்டை இந்தியாவுக்குக் கொண்டு வரலாம் என்பது மட்டும்தான் மத்திய அரசின் நோக்கமா? அல்லது வெளிநாட்டில் தேங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தை அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கொண்டுவந்துவிடுங்கள் என்று கதவுகளைத் திறந்து விடுகிறார்களா?

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு அளவு 49 விழுக்காட்டுக்கு அதிகமாகும்போது அரசின் நேரடி கண்காணிப்பில்தான் கொண்டு வர முடியும் என்று சொன்னாலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல அன்னிய நேரடி முதலீட்டை கொண்டுவர, செயல்பட அனுமதித்துவிட்டார்கள்.

இந்திய சிறுதொழிற்கூடங்களுக்குப் பணியாணை கிடைக்கும், பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பது இனி உறுதியில்லை.

இந்தியாவில் வேளாண் பொருள்கள் பெரும்பகுதி அழுகி வீணாகின்றன; அத்தகைய நிலைமையை பின்புலக் கட்டமைப்புகள் மாற்றிவிடும்; இத்துறையில் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதும் உறுதியில்லை.

சிறுநகரங்களில் உள்ள சிறுவணிகர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதும் உண்மையில்லை.

இந்தியா விலைபேசப்படுகிறது - சில்லறை வர்த்தகமா, மொத்த விற்பனையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.