/

தீர்ப்பு சரியில்லை!

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை பட்டவகுப்புகளைத் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.)அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:33 am

ஆசிரியர்

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை பட்டவகுப்புகளைத் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.)அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் மட்டுமே ஏ.ஐ.சி.டி.இ.க்கு உள்ளது; எம்.பி.ஏ, எம்.சி.ஏ. முதுநிலை கல்வித்திட்டங்களைத் தொடங்க ஏ.ஐ.சி.டி.இ.}யின் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால், ஏ.ஐ.சி.டி.இ.-யின் அதிகாரம் என்ன? அதன் தேவை என்ன என்கிற அடிப்படையே ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

தனியார் கல்லூரி நிர்வாகங்களின் கூட்டமைப்பும் சில தனியார் கல்லூரிகளும் இந்த வழக்கைத் தொடுத்துள்ள காரணத்தால், அனைத்துக் கல்லூரிகளுமே இனிமேல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. கல்வித்திட்டங்களைத் தொடங்கிவிடும். ஆனால், அதன் தரத்தை, கற்பிக்கப்படும் விதத்தை யார் சோதிப்பது? யார் முடிவு செய்வது?

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அனுமதி இல்லாமல் தொடங்க முடியாது. ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்றால், உள்கட்டமைப்பு வசதி எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் எடுத்துக்கொள்ளும் கல்வித் திட்டத்துக்கேற்ப எத்தனை பேராசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தவும், அதன்படி அனுமதி வழங்கவும் இந்தக் கல்விக் குழுமத்துக்கு அதிகாரம் இருக்கிறது.

1945-இல் ஏ.ஐ.சி.டி.இ. வெறும் ஆலோசனை தரும் அமைப்பாகத் தொடங்கப்பட்டாலும், பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலக அளவிலான உயர்கல்வியின் தேவையில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, ஏ.ஐ.சி.டி.இ. சட்டம் 1987-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அது ஓர் அதிகாரம்கொண்ட அமைப்பாக இயங்கி வருகிறது.

புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கான தரத்தையும் பாடத்திட்டத்தையும் அனுமதிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு, வெறும் ஆலோசனை சொல்லும் அமைப்பாக மாறும்போது, உயர் கல்வியில் குழப்பமும், தரக்குறைவும்தான் மிச்சமாகும். இதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்விளைவுகளாக இருக்கப் போகின்றன.

தற்போதைய நடைமுறைப்படி புதிதாகத் தொடங்கப்படும் பொறியியல் கல்லூரியில் 5 இளநிலை கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டால், அந்த 5 கல்வித்திட்டமும் கல்லூரியின் விருப்பமாக இருப்பதில்லை. அவ்வாறு அனுமதி அளித்தால், அனைவரும் அந்த நேரத்தில் வியாபாரம் ஆகின்ற கல்வித் திட்டங்களையே, அதாவது கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த கல்வித்திட்டங்கள் அல்லது மெக்கானிக்கல் என்ஜினியரிங், சிவில் என்ஜினியரிங் போன்ற கல்வித் திட்டங்களையே தேர்வு செய்துகொள்வர். அதற்கு இடம் ஏற்படாத வகையில், ஏ.ஐ.சி.டி.இ. பட்டியலிடும் 10 கல்வித் திட்டங்களில் கட்டாயமாக மூன்றினை இந்தப் புதிய கல்லூரிகள் தேர்வு செய்தாக வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது.

நிலைமை இதுவாக இருக்க, ஏ.ஐ.சி.டி.இ.}யின் அனுமதி பெற்றுச் செயல்படும் ஒரு கல்லூரி, எம்சிஏ அல்லது எம்பிஏ போன்ற கல்வித் திட்டங்களை யாருடைய அனுமதியும் தேவையில்லாமல் தாங்களே தொடங்கி நடத்தலாம் என்றால், இது வெறும் எம்பிஏ, எம்சிஏ என்பதோடு நிற்காது. மற்ற கல்வித் திட்டங்களிலும் நடைபெறும். இத்தகைய நிலைமை தனியார் கல்வி நிறுவனங்களின் வியாபாரத்துக்கு மட்டுமே உதவியாக அமையும். தரம் பலிகடாவாக்கப்படும். விளம்பரங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம், பாடத்திட்டத்திற்கும், பயிற்றுவிப்புக்கும் தரப்பட மாட்டாது.

அனுமதிக்கப்பட்ட முதுநிலை, இளநிலை பட்டயம், பட்டங்களுக்கான கல்வித் திட்டங்கள் குறித்து ஏ.ஐ.சி.டி.இ.-யின் விளக்கக் குறிப்பில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முதுநிலைப் பட்ட வகுப்புக்கான கல்வித் திட்டங்கள் 520 உள்ளன. இவை பல்வேறு தொழில்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை. இந்தப் பட்டியலில் உள்ள எந்த கல்வித் திட்டத்தையும் எந்தவொரு கல்லூரியும் தன்னிச்சையாகத் தொடங்கிவிட முடியும் என்றால், இதன் தரத்தைத் தீர்மானிப்பது யார்?

பல்கலைக்கழகங்களுடன் இணைவு பெற்ற கல்லூரி என்பதற்காக, பல்கலைக்கழகம் இந்தக் கல்லூரிகளில் தொடங்கப்படும் புதிய கல்வித் திட்டத்தின் தரம், போதிய பேராசிரியர் எண்ணிக்கை ஆகியவற்றைத் தீர்மானிக்கலாம் என்று சொல்லலாம். இன்றைய சூழ்நிலையில், பல்கலைக்கழகம் அல்லாத வேறொரு அமைப்பு அதன் தரத்தைத் தீர்மானிப்பதுதான் முறையானதாக, சமரசங்களும் பாகுபாடுகளும் ஊழலும் இல்லாததாக இருக்கும்.

இத்தகைய தீர்ப்பு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காக ஏ.ஐ.சி.டி.இ. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுவதைப்போல, தற்போதைய சட்டத்தில் ஓட்டை இருக்குமானால், மத்திய அரசு அதை சரி செய்வதும் அவசியம்.

புற்றீசல்போல இத்தனை பொறியியல் கல்லூரிகள் தேவைதானா என்று ஒரு வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேலும் கடுமையாக உறுதிப்படுத்த வேண்டிய அமைப்பாக ஏ.ஐ.சி.டி.இ. மாற்றப்பட வேண்டுமே தவிர, அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பை வெறும் ஆலோசனை அமைப்பாக மாற்றிவிட்டால், உயர்கல்வி பாழாகும். தீர்ப்பு சரியில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.