நான்கு ஆண்டுகள் தொடர்ந்து கட்சித் தலைமையையும் ஏற்றிருந்த பிரதமர் நேரு, அது பிற்காலத்தில் சர்வாதிகாரப் போக்குக்கு வழிகோலும் என்று உணர்ந்து 1955-இல் நடந்த ஆவடி மாநாட்டில் யு.என். தேபரைக் கட்சித் தலைவராக்கினார். தேபரைத் தொடர்ந்து இந்திரா காந்தி, சஞ்சீவ ரெட்டி, கே. காமராஜ் என்று கட்சித் தலைவர்கள் வேறாகவும் ஆட்சிப் பொறுப்பில் பிரதமர் நேருவும் தொடர்ந்தபோது, இப்போது திக்விஜய் சிங் குறிப்பிடுவதுபோல, இரட்டைத் தலைமையோ, இரட்டை அதிகார மையமோ ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. அதற்குக் காரணம், கட்சித் தலைமை ஆட்சித் தலைமையையோ, ஆட்சித் தலைமை கட்சித் தலைமையையோ தனது தலையாட்டி பொம்மையாக அமர்த்தி, பொம்மலாட்டம் நடத்த முற்படவில்லை.