டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஏன் இந்த முரண்?

"இயற்கை வளங்கள் அனைத்தையும் ஏல முறையில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை; அதன் பயன்பாட்டுக்குத் தக்கவாறு ஒதுக்கீடு முறைகளை மத்திய அரசு தீர்மானித்துக்கொள்ளலாம்'

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:04 pm

ஆசிரியர்

"இயற்கை வளங்கள் அனைத்தையும் ஏல முறையில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை; அதன் பயன்பாட்டுக்குத் தக்கவாறு ஒதுக்கீடு முறைகளை மத்திய அரசு தீர்மானித்துக்கொள்ளலாம்' என்று தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவித்திருக்கிறது.

"அரசின் பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது' என்று சொல்லும் அதேவேளையில், ஒதுக்கீடுகளில் "நியாயமில்லை', "தன்னிச்சையான முடிவு' என்றால், அரசியல் சட்டம் பிரிவு 14-க்கு எதிரானதாக அமைகின்ற நிலையில் நீதிமன்றம் தலையிடும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலமுறையில் விடவேண்டும் என்று கூறியிருப்பதால் அதே நடைமுறை அனைத்து இயற்கை வளங்களுக்கும் பொருந்தாது' என்று சொல்லும் அரசியல் சாசன அமர்வு, மற்ற நடைமுறைகள் என்னென்ன, அதற்கான வரைமுறைகள் என்ன என்பதை விளக்காமல், "நாங்கள் வல்லுநர்கள் அல்ல' என்று முடித்துக்கொள்கிறது.

அரசின் வருமானம் பெரிதா, மக்களுக்குக் கிடைக்கும் நன்மை பெரிதா என்றால், மக்களுக்கான நன்மைதான் முதன்மையானது என்கின்றது நீதிமன்றத் தீர்ப்பு. இந்த அளவுகோலின்படி பார்த்தால், நிலக்கரிச் சுரங்க வயல்களை குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்ததை எப்படி நியாயப்படுத்துவது? அரசியல் சாசன அமர்வு தன்னிடம் தரப்பட்ட பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லையோ என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "ஏல முறைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற நாளாகும். ஆனால், மின்சாரம் மக்களுக்கு இன்றியமையாத உடனடித் தேவை. அதிகத் தொகைக்கு நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்தால், நிலக்கரி விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டும். அது உற்பத்திச் செலவை அதிகரிக்கும். மின்கட்டணம் உயரும். இதனால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான். ஆகவேதான் குறைந்தவிலைக்கு நிலக்கரிச் சுரங்கத்தை, உடனடியாகக் கமிட்டி மூலம் ஒதுக்கீடு செய்தோம்' என்று அரசின் கொள்கை முடிவைக் குறிப்பிட்டார்.

இதே நியாயத்தைத்தான் முன்னாள் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா கூறினார். இந்தியாவிலுள்ள மிகச் சாமானிய மனிதனுக்கும் செல்போன் என்ற நிலையை உருவாக்கிட நான் மேற்கொண்ட முடிவுகள் தவறா? என்று அவர் எழுப்பிய கேள்வி மட்டும் ஏற்புடையதல்ல என்று சொன்னால், எங்கேயோ இடறுகிறதே?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு எல்லாமும் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டிருந்தாலும், தலைமை தணிக்கைத் துறை சரியான விலையை அனுமானித்து, இத்தனை லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சொன்னாலும், அரசுக்குக் கிடைக்கும் வருமானம் முக்கியமல்ல, மக்களுக்குக் கிடைத்த நன்மைதான் முக்கியம்.

அதாவது, அரசுக்கு இழப்பு, மக்களுக்குப் பயன் என்பதைச் சார்ந்தே அரசியல் முடிவுகள் இருத்தல் வேண்டும் என்பது பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கும், ரயில்வே பொதுப்போக்குவரத்து சமையல் எரிவாயு போன்ற சேவைகளுக்கும் ஏற்புடையதே தவிர, நாட்டின் இயற்கை வளங்களை விலை பேசுவதற்கும் எப்படி நியாயமாகக் கருத முடியும்?

இந்த வாதங்களை இன்னும் வேறுவிதமாக ஒரு பாமரனது நிலையில் புரிந்துகொள்வதாக இருந்தால் - நாலு பேருக்கு நல்லது நடக்குமென்றால் எதுவுமே தவறில்லை. அந்த நான்கு பேர் ஒருசில தனியார் நிறுவனங்களாக இருந்தால், அது எப்படிச் சரியாகும்?

இந்தத் தீர்ப்பை வரவேற்று, பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவுக்கு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் மத்திய அமைச்சர்கள். அற்புதமான தீர்ப்பு என்று வரவேற்கின்றனர். "தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை போட்ட இழப்பீடு வெறும் கற்பனைக் கணக்கு என்பது இப்போது புரிகிறதா?' என்று திருப்பிக் கேட்கின்றனர்.

சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை எப்படி புரிந்துகொண்டாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொருத்தவரை இந்தத் தீர்ப்பின் சாராம்சம் இதுதான்: எப்படி ஒதுக்கீடு என்பது அரசின் முடிவு. பொதுநன்மைக்காகக் குறைந்த விலையில் கனிம வளங்களை ஒதுக்கீடு செய்தால் அதை ஊழல் என்று சொல்ல முடியாது.

ஒரு மழைக்காலக் கூட்டத்தொடரே நடைபெற முடியாத அளவுக்கு அல்லோலகல்லோலப்பட்ட நிலக்கரி ஒதுக்கீடு பிரச்னையை, இந்தத் தீர்ப்பு ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. நிலக்கரிச் சுரங்கத்தை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யாததால் ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு எனும் எதிர்க்கட்சிகளின் வாதம் இனி அர்த்தமற்றது.

அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது காலாகாலத்திற்கும் நிரந்தரமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விஞ்ஞானம் தந்த கொடை. அதை ஒதுக்கீடு செய்து கிடைக்கும் வருவாயை, ஒரு சில வருடங்கள் தவறான முடிவுகளால் இழந்தாலும், அடுத்து வரும் காலங்களில் தொடர்ந்து ஏலத் தொகையை அவ்வப்போது அதிகரித்துப் பெற்றுக்கொண்டிருக்கலாம்.

ஆனால், கனிம வளங்கள் அப்படியா? பூமிக்குள் புதைந்து கிடக்கும் நிலக்கரியோ, கிரானைட்டோ, துத்தநாகமோ, இரும்புத் தாதோ எதுவானாலும் குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அப்படிப் பயன்படுத்திவிட்டால், வருங்காலச் சந்ததியினருக்கு அது கிடைக்காமலும் போகும். அலைக்கற்றைக்கு ஏல முறை நியாயம், கனிம வளத்துக்கு அரசின் கொள்கை முடிவு நியாயம் என்கிறது தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு. ஏன் இந்த முரண்?

நேற்றுடன் ஓய்வுபெற்று விட்டார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா. பல சரித்திர முக்கியத்துவமான தீர்ப்புகளுக்கும், பல்வேறு ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருந்த தலைமை நீதிபதி கபாடியாவின் கடைசித் தீர்ப்பு, அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. கனிம வளங்கள் கொள்ளைபோக தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு காரணமாகிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது அவரது கடைசித் தீர்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.