இது தொடரட்டும்...
காவிரிநீர்ப் பகிர்வில் பிரச்னை ஏற்படும்போதெல்லாம் கர்நாடகம், தமிழகம் இரு மாநிலங்களுக்கும் இடையேபோக்குவரத்துக்குப்பிரச்னையாகிவிடுகிறது.


காவிரிநீர்ப் பகிர்வில் பிரச்னை ஏற்படும்போதெல்லாம் கர்நாடகம், தமிழகம் இரு மாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்துக்குப் பிரச்னையாகிவிடுகிறது. தொழில் ரீதியாகப் பயணம் செய்வோரும், பெங்களூருக்கு தினசரி அலுவல் நிமித்தம் ஒசூர், கிருஷ்ணகிரி போன்ற இடங்களிலிருந்து சென்று வருவோரும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதைவிட மோசமானது பெங்களூர் வாழ் தமிழர் தம் நிலைமை. அவர்கள் எப்போது என்ன நடக்குமோ என்கிற பீதியில் உறைந்து கிடக்கிறார்கள்.
காவிரி நதிநீர் ஆணையத்தின் கட்டளையை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தி, கடந்த சில நாள்களாகக் கர்நாடகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் ஒன்றை உறுதிபடச் சொல்லிவிட முடியும். இந்தப் போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டிருப்பவர்கள் அரசியல் கட்சிகள் மட்டுமே. இவர்களில் உண்மையான விவசாயிகள் மிகச் சிலர்தான்.
மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், கன்னட அமைப்புகள் இவைதான் இந்தப் போராட்டங்களில் முன்னிலை வகிக்கின்றன. அரசியல் சாயம் இல்லாத உண்மையான விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கக் காரணம், அவர்கள் இன்னொரு விவசாயியின் துன்பத்தையும், பயிர்கள் வாடுவதையும் உணர்ந்தவர்கள். ஆனால், அரசியல்வாதிகள் அப்படியல்ல. அவர்களுக்கு காவிரி வெறும் நீர்ப்படுகை அல்ல. ஆட்சி பீடத்துக்கு அரசியல் களம்.
காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் செயல், வெறும் அரசியல். வெளிநடப்பு செய்துவிட்டால், கர்நாடக மக்களிடம் நல்லபெயர் கிடைத்துவிடும் என்கின்ற எண்ணம்தான் இதற்குக் காரணம்.
பிரதமரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுக் கொடுக்க வேண்டும் என்று அரசு நடவடிக்கை மேற்கொண்டபோது, பிரதமரின் ஆணையை நிறைவேற்றாமல் மனு தாக்கல் செய்தால், மனு நிராகரிக்கப்படலாம் என்று அரசு வழக்குரைஞர்கள் கூறிய அறிவுரைதான் கர்நாடக அரசைக் கொஞ்சம் நடைமுறை உலகுக்குக் கொண்டுவந்தது.
"நீங்கள் கட்டளை இடுங்கள். ஆனால், நாங்கள் நிறைவேற்ற மாட்டோம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை போய்விட்டதா? தண்ணீரைத் திறந்துவிடாவிட்டால், நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டிவரும்' என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கூறியதால்தான் கர்நாடகம் வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீரைத் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது.
இதையும்கூட, இரண்டு மூன்று நாள்களுக்கு மட்டுமே விடுவோம் என்று சொல்வதும், கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடத்திவரும் அரசியல் எதிர்க்கட்சிகள், கன்னட அமைப்புகளுக்காகத்தான்! பிரதமர் கூறியபடி வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு இவர்கள் நீதிமன்றத்தின் படிகளை ஏறவே முடியாது. இது கர்நாடகத்துக்கு நன்றாகத் தெரியும்.
காவிரி நதிநீர் ஆணையத்துக்கு இத்தனை மதிப்பு இருக்கும் என்றால், பிரதமரின் கட்டளையை நிறைவேற்றிவிட்டு நீதிமன்றத்துக்கு வாருங்கள் என்று உச்ச நீதிமன்றம் விரட்டியடிக்கும் என்றால், இத்தகைய சக்திவாய்ந்த ஆணையத்தை பிரதமர் ஏன் சில வாரங்கள் முன்னதாகவே கூட்டவில்லை என்ற ஆதங்கம் இயல்பாகவே ஏற்படுகிறது. இக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக ஏன் பிரதமரிடம் வலியுறுத்தவில்லை என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதிமன்றம் சொன்ன பிறகு நாள் குறித்து... இடைப்பட்ட நாள்களில் இழந்த நீர் அளவற்றது. பல விவசாயிகள் நீர் கிடைக்குமா கிடைக்காதா என்ற நிச்சயமின்மையால் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவில்லை.
பிரதமரின் கட்டளைப்படி தண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்துள்ள கர்நாடக பாசனத் துறை அமைச்சர் பசவராஜ், ஒரு நிபுணர் குழுவை அனுப்பி ஆராய்ந்து பிறகு இந்த முடிவை பிரதமர் எடுத்திருக்க வேண்டும் என்கிறார். அவர் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது. உண்மையறியும் குழு வந்திருந்தால், அணைகளில் தேங்கியுள்ள நீரை மட்டுமல்ல, கர்நாடகம் ஏற்கெனவே ஏரி, குளங்களில் தேக்கி வைத்துள்ள நீரையும் சேர்த்தே கணக்கிடும் என்பது தெரியாமல் பேசி இருக்கிறார்.
காவிரி ஆணையத்துக்கு இத்தகைய சக்தி இருப்பது தெரிந்ததால்தான் பிரம்மபுத்திரா வாரியத்தைக் கலைத்துவிட்டு பிரம்மபுத்திரா நதிப் பள்ளத்தாக்கு ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் கருத்துருவுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார் அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய். இந்த ஆணையம் மாநில அரசுக்கு மேலாண்மை செய்வதாக அமையுமே என்று கேட்ட நிருபர்களுக்குப் பதில் கூறும்போதும், "இதனால் பயன்கள் நிறைய இருக்கிறது. வெள்ளத்தடுப்பு, நிவாரணம், நீர்பகிர்வு எல்லாவற்றுக்கும் இந்த ஆணையம் தேவை' என்று கூறியுள்ளார்.
இவ்வளவு சக்தி வாய்ந்த காவிரி நதிநீர் ஆணையத்தை எப்போதோ ஒருமுறை கூட்டுவதாக இல்லாமல், பிரச்னை பெரிதான பிறகே கூடுவதாக இல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்கு முன்னதாகக் கூட்டம் நடத்தி, கர்நாடகம் தமிழகம் இரு மாநிலங்களிலும் உள்ள நீர் இருப்பு, பயிரிடப்படும் பரப்பு, அதற்கேற்ப கர்நாடகம் தரவேண்டிய நீர் அளவு ஆகியவற்றைத் தீர்மானிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
பற்றாக்குறை நாள்களில், ஆளும் மாநில கட்சிகளுக்குச் சங்கடம் ஏற்படாத வகையில், அரசியலுக்காக நாடகம் ஆடத்தேவையில்லாத வகையில், காவிரி நதிநீர் ஆணையமே நீர்பகிர்ந்தளிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்வதும்கூட சிறந்த முடிவாகத்தான் இருக்கும்.
முதல்முறையாக "மன்னவன் சொல்லுக்கு' மதிப்பிருக்கக் கண்டோம். இது தொடரட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...