கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என்பது தமிழக முதல்வருக்கும் நன்றாகத் தெரியும். ஆகவேதான், கர்நாடகம் சட்டப்படி வழங்க வேண்டிய 52.8 டிஎம்சியை வலியுறுத்தாமல், அதில் பாதியளவாக 30 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கேட்டார். இதை நன்றாகவே புரிந்துகொண்ட கர்நாடக முதல்வர், "எங்களுக்கும் பற்றாக்குறை. உங்களுக்கும் தட்டுப்பாடு. அதனால் நீங்கள் கேட்பதில் பாதியைத் தருகிறேன். இருவரும் இருக்கும் தண்ணீரைப் பங்கு போட்டுக் கொள்வோம்' என்று சொல்லி இருந்தால், இருதரப்பு விவசாயிகளும் அவரைப் பாராட்டி இருப்பார்கள். ஆனால், அவர் சொன்ன பதில், ஒரு துளித் தண்ணீர்கூடக் கிடையாது என்பதுதான்.