திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

சொல்லப் போனால்... மாண்புமிகு முதல்வர்களே... முதல்வர்களே…

ஏழை எளிய மக்களின் குடும்பங்களைக் காக்க மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி...

News image

தொலைநோக்கில்... - சித்திரிப்பு / விஜய்

Updated On :3 மே 2026, 8:15 am IST

பெட்டிகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பூதம் இன்னும் 24 மணி நேரத்தில் முடிவுகளைச் சொல்லத் தொடங்கிவிடும்; நாளை திங்கள்கிழமை மாலைக்குள் நிச்சயம் மக்கள் வழங்கியுள்ள அதிகாரம் யாருக்கு? என்பதும் உறுதி செய்யப்பட்டுவிடும்!

களத்தில் வெளியே தெரியும்படியாகத் தற்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி. ஜோசப் விஜய், நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் காத்திருக்கின்றனர்; வெளியே தெரியாமல் வேறு சிலரும்கூட காத்திருக்கலாம், எல்லாம் அரசியல்தானே!

இருவர் முதல்வராக இருந்தவர்கள், இருவர் முதல்வர் லட்சியத்தில்  இருப்பவர்கள். ஆட்சிக்கான போட்டியில் இருக்கிற பெரிய அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு அப்பால் வெகுதொலைவில் கனவிலும்கூட காண முடியாத இடத்தில் இருக்கும் கட்சிகளும்கூட பக்கம் பக்கமாகத் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் பணம், பணம், பணம்;  ஏதோவொரு பெயரில் எப்படியோ தருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்!

1967 வரை காங்கிரஸ் ஆட்சி. விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு, முதல்வர் அண்ணா தலைமையில் திமுக அரசு பதவியேற்றது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் திராவிட இயக்கத்தின் அடையாளமென சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமானதாக்கியும் மலிவு விலை படியரிசித் திட்டத்திலும் முதல் கையெழுத்துகளை இட்டார் முதல்வர் அண்ணா. அடுத்தடுத்து நிறைய மாற்றங்கள். மெட்ராஸ் ஸ்டேட் அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு என்றானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகமானது. சத்யமேவ ஜெயதே வாய்மையே வெல்லும் என்றானது. ஸ்ரீ – திரு என்று நிறைய.

ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தவர் மு. கருணாநிதி. அண்ணா மறைவுக்குப் பின் 1969-ல் பதவியேற்றதும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக சட்டநாதன் கமிஷன் அமைத்தார். 1989-ல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்தார். 1996-ல் மெட்ராஸை சென்னையாக்கினார். 2006-ல் நியாயவிலைக் கடைகளில் மாதந்தோறும் கிலோ 2 ரூபாய்க்கு 20 கிலோ அரிசி திட்டம், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, தொடர்ந்து, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் ரத்து...

1977, 1980, 1984-ல் மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்தவர் எம்.ஜி.ஆர். அனைத்துக் கோப்புகளிலும் தமிழில் கையொப்பம், கள்ளுக்கடை ஒழிப்பு, சத்துணவுத் திட்டம்... என.  

ஆறு முறை முதல்வர் பதவியேற்றவர் ஜெயலலிதா. 1991-ல் பெண் சிசுக்கொலைத் தடுப்புக்காகத் தொட்டில் குழந்தைத் திட்டம், 2001-ல் மழைநீர் சேகரிப்புத் திட்டம், 2011-ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள், இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், 2016-ல் விவசாயக் கடன் தள்ளுபடி, வீடுகளுக்கு 100 யூனிட்கள் மின்சாரம் இலவசம், தாலிக்குத் தங்கம், 500 டாஸ்மாக் கடைகள் மூடல், மதுக்கடைகள் திறப்பு நேரத்தை காலை 10 மணியிலிருந்து 12 மணியாக மாற்றம் என.

தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2021-ல் பொறுப்பேற்றதும், கோவிட் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 ஆயிரம் நிதியுதவி, மாநகர்ப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லா பயணம், காப்பீட்டுத் திட்டம் என.

தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், வரும் வாரத்தில் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்கப் போகிற முதல்வரும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அடியொற்றிப் புதிய ஆணைகளைப் பிறப்பித்துக் கையொப்பங்களை இடுவார்; அவை எல்லாமும் வரலாற்றின் பக்கங்களிலும் இடம் பெறும். ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் அல்லாடிக்கொண்டிருக்கும் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் எளிய மக்களின் – குடும்பங்களின் வாழ்விலும் மனதிலும் நீக்கமற நிரந்தர இடம் பெற? உண்மையிலேயே இந்த மக்களின் வாழ்வு வளம் பெற?

என்னதான் தகவல் தொழில்நுட்பப் புரட்சி செய்தாலும், என்னதான் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களாகக் கொண்டுவந்து இறக்கிவைத்தாலும், எவ்வளவுதான் இலவசங்களை இறைத்தாலும், வீடுவீடாகச் சென்று, இல்லத்தரசிகள், இளைஞர்கள், யுவதிகள், மாணவ, மாணவிகள் எனப் புதுப் புதுத் திட்டங்களின் கீழ் பணம் கொடுத்தாலும், இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்திக் கொண்டிருக்கும் யுகத்தின் பெருவடிகாலை – மதுக்கடைகளை - அடைக்காத வரையில் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக வெளியேறி வீணாகிவிடும்; பணம் கொடுக்கிற அரசுக்கு ஒரு பங்கும் பெருந்தொழில் நிறுவனங்களுக்குப் பெரும்பங்குமாக எங்கோ சென்றடைந்துவிடும்!

உலகில் வேறெந்தவொரு நாட்டையோ, இந்த நாட்டிலேயேகூட வேறு எந்தவொரு மாநிலத்தையோ எளிதில் ஓர் எடுத்துக்காட்டாகக் கூறிவிட முடியாது – வீதியெங்கும் மதுக் கடைகள், குடிபோதை, வயது வித்தியாசமின்றி வீதிகளில் விழுந்துகிடக்கும் மனிதர்கள்!

குடிக்கிறார்கள், குடிக்கிறார்கள், குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். எங்கிருந்தோ பணத்தைத் திரட்டிக் கடைக்குக் கொண்டுவந்துவிடுகிறார்கள். எதற்காகக் குடிக்கிறார்கள்? இந்தப் பழக்கம் எவ்வாறு தோன்றியது? எப்படி நீடிக்கிறது?  வீதிதோறும் கடை திறந்து வெள்ளமென பாட்டில்களில் வெளியேறி இந்த சமூகத்தின் கணிசமான பகுதியை நரகத்திற்குள் செலுத்திக் கொண்டிருக்கிறது இந்த மது.

மதுக் கடைகளாலும் குடிபோதைப் பழக்கத்தாலும் நேரிடும் பாதிப்புகள் எதுவும் இதே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுக்கோ, முதல்வராகப் பொறுப்பேற்கிறவர்களுக்கோ தெரியாமலிருக்க வாய்ப்பேயில்லை.

தமிழ்நாட்டில் 1971 ஆகஸ்ட் 30 ஆம் தேதி மக்களுக்காக மதுக் கடைகள் திறந்துவிடப்பட்டன. 55 ஆண்டுகள் முடியப் போகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரையில் குடித்தும், குடிப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டும் செத்தவர்கள் எவ்வளவு பேர்?

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இவ்வாறு அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் குடிப் பழக்கத்தால் வந்த பாதிப்புகள் மற்றும்  நோய்களுக்காக  அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை பற்றி ஏதேனும் கணக்குவழக்குகள் இருக்கின்றனவா?  இவர்களில் எத்தனை பேர் நலம் பெற்றுத் திரும்பினர்?  எத்தனை பேர் திரும்பவில்லை?

குடிப்பழக்கத்தால் தந்தையை, சகோதரனை, கணவனை, மகனை, பேரனை இழந்த -  இழந்ததால் ஆதரவற்றுப் போன பெண்களின் எண்ணிக்கைக்கும் வீதிக்கு வந்த குடும்பங்களின் எண்ணிக்கைக்கும் ஏதேனும் கணக்குவழக்கு இருக்கிறதா?

இவற்றைத் தாண்டி இந்தக் குடியால் பொறுப்பற்றுப் போதையில் அழியும் ஆண்களால், சீரழிந்துபோன -  சீரழிந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் பற்றி ஏதேனும் கணக்குவழக்குகள்? குடிபோதை காரணமாக நடைபெறும் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளை, களவு, பாலியல் வன்கொடுமைகள் – அத்துமீறல்கள் பற்றி?

55 ஆண்டுகளுக்கு அல்ல, கடந்த ஓராண்டுக்கு, ஐந்தாண்டுகளுக்கு அல்லது பத்தாண்டுகளுக்கு? இந்த மதுக்கடை வியாபாரத்தைப் பொருத்தவரை திமுக அரசு, அதிமுக அரசு என்றெல்லாம் எவ்வித வேறுபாடும் இல்லை.

ஆனால், இந்த மது விற்பனைதான் மாநில அரசையே நடத்திச் செல்வதற்கான பெரிய நிதி ஆதாரமென்பதாக இருக்கிறது என்றொரு பெருமையும் பறை சாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையாகவா? எந்த அளவுக்கு உண்மை? அப்படியென்றால் இதற்காக வெட்கப்படுவதா? துக்கப்படுவதா?   

என்ன செய்ய?  ஆண்டு தவறாமல் சட்டப்பேரவையில் மது விற்பனையின் மூலம் மட்டும் அரசுக்கு எவ்வளவு வருவாய் வந்துகொண்டிருக்கிறது என்பதை மட்டும் பெருமை பொங்க சாதனையென அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ. 48,344 கோடி. முந்தைய ஆண்டைவிட ரூ. 2,488 கோடி அதிகம். 2023-24-ல் ரூ. 45,855 கோடி, 2022-23-ல் ரூ. 44,121 கோடி, 2021-22 நிதியாண்டில் ரூ. 36,051 கோடி. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 12,000 கோடி அதிகரித்திருக்கிறது – படிப்படியாக, ஆனால் கொஞ்சமும் தள்ளாடாமல். குடிக்கக் குடிக்க கோடிகளில் வருவாய்.

 38 மாவட்டங்களில் டாஸ்மாக் அலுவலகங்கள், 43 இடங்களில் மது இருப்பு வைக்கக் கிடங்குகள், 4,787 சில்லறை விற்பனைக் கடைகள், இந்தக் கடைகளுடன் இணைந்த 2,362 மதுக்கூடங்கள், சுமார் 250 பிராண்ட் சரக்குகள் - 185 பிராண்ட் பிராந்தி, விஸ்கி போன்றவை, 43 பிராண்ட் பீர்கள்; வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 பிராண்ட் பீர், 223 பிராண்ட் வொய்ன் உள்பட 551 பிராண்ட் மது வகைகள் – மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு செய்யும் ஏற்பாடுகள்தான்.

2014, 2015 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் மதுவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தபோது, பெண்களும் பெருமளவில் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் போராட்டங்கள். இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினும்கூட  பங்கேற்றார்.

கருணாநிதி – ஜெயலலிதா காலத்தில், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் எவ்விதப் பொருளாதாரப் பதற்றமுமின்றி, சமூக நலனைக் கருதி, ஆட்சி அமைந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று துணிந்து திராவிட முன்னேற்றக் கழகம் வாக்குறுதி அளித்தது.

திமுக தேர்தல் அறிக்கையின் எட்டாவது இடத்தில் இருந்தது மதுவிலக்கு. அறிக்கை கூறுகிறது:

13. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறையை மேற்கொள்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

14. தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் (TASMAC) கலைக்கப்பட்டு, இந்த விற்பனைக் கழகத்தின் மூலம் தற்போது செய்யப்பட்டுவரும் மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் (TAMILNADU INTEGRATED REGULATED MARKETING CORPORATION) புதிதாக உருவாக்கப்படும். ஏற்கனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்கள் புதிய நிறுவனத்தில் தங்கள் பதவி மூப்பினை இழக்காமல், பணியாற்ற வழிவகை செய்யப்படும்.

மதுபான விற்பனை செய்வதிலிருந்து அரசு முற்றிலும் விலகி, புதிதாக அமைக்கப்படும் வாரியத்தின் மூலம், மாவட்டங்கள்தோறும் ஏற்கெனவே, திமுக ஆட்சிக் காலங்களில் உருவாக்கப்பட்ட, காய்கறிகளை மட்டும் விற்பதற்கான உழவர் சந்தையைப் போல், புதிய விரிவுபடுத்தப்பட்ட சந்தைகள் உருவாக்கப்பட்டு, நெல், வாழை, மஞ்சள், கடலை, மிளகாய், பயறு வகைகள், வேளாண் விளைபொருள்கள், கைத்தறித் துணிகள், கைவினைப் பொருள்கள் முதலிய கிராம உற்பத்திப் பொருள்களை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

15. மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு; அதன் மூலம் மாவட்டங்கள்தோறும் மறுவாழ்வு மையங்கள் (De Addiction Centres) அமைத்து; மது பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு உரிய மனநலப் பயிற்சியும் சிகிச்சைகளும் வழங்கப்படும்.

ஆனால், தேர்தலில் திமுக தோற்றுவிட்டதால் இவையெல்லாமும்  நடைபெறாமலேயே போய்விட்டன.  ஆட்சிப் பொறுப்பேற்கும் வாய்ப்பளித்த அடுத்த (2021)  தேர்தலில் அப்படியொரு வாக்குறுதியையே அளிக்காமல் தவிர்த்துவிட்டிருந்தது திமுக.

பல்லாயிரக்கணக்கான கோடிகளில் நடைபெறுகிறது இந்த மது விற்பனை. மக்கள் போதையில் மிதப்பதால் அரசு மட்டுமல்ல, மது உற்பத்தித் தொழில்சார்ந்த பெரும்புள்ளிகளும் செழித்துக்கொண்டிருக்கின்றனர்.

மது என்ற பலவகை பிராண்ட்களின் பெயர்களில் முழுக்க முழுக்க ரசாயனம் மட்டுமே கலக்கப்பட்ட வண்ணத் திரவத்தைக் குடித்து மதியை மயங்கச் செய்து, உடலைக் கெடுத்து, உடல் உறுப்புகளையும் கெடுத்துக்கொள்ள மதியம் 12 மணிக்காகக் காத்துக் கிடக்கிறது மாபெருங் கூட்டம் மாநிலம் முழுவதும் மதுக் கடை வாசல்களில்.

இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கப் போகிறவரின் ஒரேயொரு கையொப்பம் போதும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் போதையின் பிடியிலிருந்து மீட்டுவிடும்!

இன்னும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன, கையொப்பம் இட வேண்டியவை மட்டுமல்ல, கட்டுப்படுத்த வேண்டியவை - காவல் மரணங்கள், வல்லுறவுகள்.

எத்தனை காவல் மரணங்கள்? எந்தெந்த ஆட்சிகளில்? எத்தனை வல்லுறவுகள், எந்தெந்த ஆட்சிகளில்?  என்றெல்லாம் இப்போது ஆராய்ந்தறிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. இரண்டையும் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித செலவும் கிடையாது. பட்ஜெட் தேவையில்லை, பணமும் அவசியமில்லை. அரசியல் தலைவர்களின், அரசு அமைப்பின், காவல் நிர்வாகத்தின் உறுதி, மன உறுதி மட்டுமே போதுமானது.

‘குற்றமிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள், அதுவும் அதிவிரைவில், யாராக இருந்தாலும்’ என்ற அச்சம் இருந்தாலே போதுமானது – அத்தனையையும் தடுத்து நிறுத்திவிட முடியும்; முடிய வேண்டும்!

2016 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் முழு மதுவிலக்கைத் திமுகதான் சொல்லியிருந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். சொன்னபடியே, 500 மதுக்கடைகளை மூடியதுடன், கடை திறப்பு நேரத்தையும் காலை 10 மணியிலிருந்து பகல் 12 மணிக்குத் தள்ளிவைத்தார்.

இந்த 2026-ல் தேர்தல் அறிக்கைகளிலும் பிரசாரக் கூட்டங்களிலும் அரசியல் கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் சொன்னதை மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை; சொல்லாததையும் செய்யலாம். மதுவிலக்கிற்கான முழுப் பயணத்தை மனதில் கொண்டு முதல் அடியை உறுதியாக எடுத்துவைக்க வேண்டும் முதல்வர்களே.

Summary

On the need of liqueur free state to protect the families of the poor...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.