கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சொல்லப் போனால்... ஜென் ஸீக்களும் பூமர்களும்!

இன்றைய சமுதாயத்தில் இரு துருவங்களாக மோதிக்கொள்ளும் நேற்றைய - இன்றைய தலைமுறைகளின் அணுகுமுறைகள் பற்றி...

News image

புதிய தலைமுறை... - செய்யறிவு / விஜய்

Updated On :5 ஜூலை 2026, 8:15 am IST

பேருந்துகளில், ரயில்களில், நகர்ப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது நன்றாகவே தெரிகிறது, இளைய தலைமுறையினர் யாரும் ஒரு மணித் துளியைக்கூட வீணாக்குவதில்லை; ரீல்ஸ் பார்க்கிறார்கள், யூடியூப் பார்க்கிறார்கள், அப்படியே ஏதோவொரு சமூக ஊடகத்துடன் ஒன்றிப்போய்விடுகிறார்கள், தங்கள் நிறுத்தம் வரும் வரையிலும். அருகிலேயே வயதானவர்களோ, கர்ப்பிணிப் பெண்களோ நிற்க முடியாமல் நின்றுகொண்டிருந்தால்கூட எழுந்து இடம் தரும் பழக்கமே ஏறத்தாழ அற்றுப்போய்விட்டது – ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட், வயசாவது வெங்காயமாவது!

இவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டோரைப்   பொருட்படுத்துவதில்லை. கொஞ்சம் வயது கூடியவர்கள் சொல்லக் கூடிய ஒவ்வொன்றும் பெரும்பாலும் இகழப்படுகிறது, அலட்சியப்படுத்தப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. இந்தச் சிக்கல் அல்லது கோளாறு, மறுமலர்ச்சி அல்லது நாகரிகம் எப்போது தொடங்கியது, எவ்வாறு தொடங்கியது என்று புரிபடவில்லை. தமிழில் இவர்களுக்குப் பிடிக்காத சொல் – அறிவுரை! ஆனால், இவர்களை மிகச் சிறப்பாகப் பிரி(ள)வுபடுத்தி, ஜென் ஸீக்கள், பூமர்கள் (கொஞ்சம் மரியாதையாக என்றால் பூமர் அங்கிள்கள்) என்று பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள்.  இவர்களுடன் 90 கிட்ஸ், 2கே கிட்ஸ் என்ற வகைகளும்  இருக்கின்றனர் – எல்லாரும் ஜென் ஸீக்குக் கொஞ்சம் பின்னே, பின்னே. வயதுக்கு தக்கவாறு குணவிசித்திரங்களில் கொஞ்சம் வித்தியாசம், அவ்வளவுதான். மற்றபடி இரண்டே தரப்புதான். பூமர்கள் ஒருபக்கம், எல்லா ‘கிட்ஸ்’களும் இணைந்த ஜென் ஸீக்கள் மறுபக்கம், ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் (?).

ஜென் ஸீயோ, பூமரோ, இரு தரப்பினருக்குமே ஏதோ நியாயங்கள் இருக்கத்தான் செய்யும் (சாத்தானுக்கும் ஒரு நியாயம் இருக்கும்போது!). ஏனென்றால் நாணயத்துக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றனதானே! தெளிவான ஒரே விஷயம் எல்லாமே அவரவர் மனநிலை சார்ந்தவை. வெளிப்படையாகத் தெரிகிற ஒன்று, பெரும்பாலும் பூமர்கள் எல்லாரும் – தங்கள் வாழ்வில் - தங்கள் தாய் தந்தையர் வாழ்வில் கஷ்டங்களைப் பார்த்து,  அனுபவித்து, கடந்து வந்திருப்பார்கள். ஆனால், இன்று பணக்கார வீடோ, நடுத்தர வர்க்க வீடோ, ஏழை வீடோ, அவரவரால் இயன்றளவில் குழந்தைகள் கஷ்டப்படாமல்தான் வளர்க்கப்படுகிறார்கள், தாங்கள் பட்ட கஷ்டத்தைக் குழந்தைகளும் படக் கூடாதென. இதுவேதான் ஜென் ஸீக்களின் வரமும் சாபமும். இதனால் வாழ்க்கையின் சவால்களும் சங்கடங்களும் இவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகின்றன (தெரியவரும்போது அனேகமாகக் காலம் கடந்துவிட்டிருக்கும்!).

குடும்பப் பொருளாதார நிலை, கல்வித் தரம், நகரம் – கிராமம், வாழ்க்கைச் சூழல் போன்ற வரையறைகள் எல்லாவற்றையெல்லாம் தாண்டி – அப்பாற்பட்டு, இன்றைய ஜென் ஸீக்கள்  ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்பதுதான் பெரு வியப்பு.

பெரும்பாலும் கஷ்டங்கள் எதையும் அனுபவித்ததில்லை. எல்லாவற்றையும் பெற்றோர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்களும் எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதுமில்லை. வேலை கிடைத்த பிறகும் சம்பாதித்தோமா, செலவழித்தோமா அவ்வளவுதான்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்குச் செய்தே தீர வேண்டிய முயற்சிகளிலும் சரி, இயல்பாகச் செய்ய வேண்டிய அன்றாடக் கடமைகளிலும் சரி பெரிதாகக் கவனம் கொள்வதில்லை. கவனம் செலுத்துகிற விஷயங்களிலும் ஆழமாகப் புரிந்துகொள்வது பற்றி அக்கறை கொள்வதில்லை.

நினைக்கிற ஒவ்வொன்றும், விரும்புகிற ஒவ்வொன்றும் உடனே கிடைக்க வேண்டும் என நினைக்கிற இவர்களுக்கு அதற்காக எந்தளவுக்கு உழைக்க வேண்டும், பொறுமை வேண்டும் என்பது பற்றித் தெரிவதில்லை. விரும்புகிற ஒன்று கிடைக்காதபட்சத்தில் அதையே பெருந்தோல்வியாக உணர்கிறார்கள், மனந்தளர்கிறார்கள். தன்னம்பிக்கை இழக்கிறார்கள். தாழ்வுணர்ச்சி கொள்கிறார்கள். தோல்விகளை, நிராகரிப்புகளை இந்த ஜென் ஸீக்களால் அவ்வளவு எளிதில் முகங்கொடுக்க முடிவதில்லை.

மிகக் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்தவர்கள் என்பதால் எவ்வளவு சிக்கலான, சங்கடமான சூழ்நிலையையும் ஏதோவொரு வகையில் சமாளிக்க, எதிர்கொள்ள ‘ஸோ கால்ட்’ பூமர்களால் முடிகிறது. ஆனால், ஜென் ஸீக்களால் சின்னச் சின்னத் தோல்விகளைக்கூட எதிர்கொள்ள முடிவதில்லை. தொட்டிச் செடிகளைப் போல காய்ந்துவிடுகிறார்கள். வீடுகளுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் அயல்நாட்டு வகை நாய்க்குட்டிகளைப் போல எதைக் கண்டாலும் அஞ்சுகிறார்கள், வெருண்டோடுகிறார்கள்.

இவர்களில் பலரும் விழித்திருக்கிற நேரமெல்லாம் செல்போனுடன்தான். அது விளையாட்டில் தொடங்கி என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சுற்றி நடக்கிற எதைப் பற்றியும் கவலையுமில்லை; அக்கறையுமில்லை. சமூக ஊடகங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் இவர்கள், லைக்ஸ்களுக்காகத் தவமிருக்கிறார்கள்.

தங்களுடைய இன்ஸ்டா, டிவிட்டர் பதிவுகளை, ரீல்ஸ்களை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள், எவ்வளவு பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்பதிலெல்லாம்கூட வாழ்க்கையின் வெற்றி தோல்விகளைக் கணக்கிடுகிறார்கள்.

ஜென் ஸீக்களிடம் பரவலாக மன அழுத்தம் என்பது ஒரு நோயைப் போல பரவிக் கொண்டிருக்கிறது. எதற்காக இந்த மன அழுத்தம் என்று விசாரித்துப் பார்த்தால் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று வியந்துபோவார்கள் பூமர்கள். என்பதால் மனநல மருத்துவமனைகளில் இளைய தலைமுறையினர் – ஜென் ஸீக்கள் – அதிகம் தட்டுப்படுகின்றனர்.

நிஜமான உலகில் எதிர்கொள்ளவும் வெற்றி பெறவும் எவ்வளவோ விஷயங்கள் காத்துக் கிடக்க, போலியான, அருவமான இணைய உலகில் முகந்தெரியாத ஜஸ்ட் லைக்ஸ்களுக்காகப் பார்த்திருப்பதும் அவற்றுக்காகக் குடும்பக் கடமைகளைக்கூட மறப்பதும் நடந்துவிடுகின்றன. 

சமூக ஊடகங்களின்வழி எவ்வித மட்டுமரியாதையுமின்றி விமர்சனங்கள், ஒரு முகநூல் கணக்கு அல்லது டிவிட்டர் கணக்கு இருந்தால் மட்டுமே போதுமானது, அறிவு இருக்க வேண்டுமென்று எவ்வித கட்டாயமுமில்லை; அவசியமுமில்லை,  யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், விமர்சிக்க முடியும்.

[இந்த நோய் தற்போது ஸோ கால்ட் பூமர்களில் சிலரையும்கூட தொற்றிக் கொண்டுவிட்டது. எவ்வளவு பெரிய தத்துவாசிரியராக இருந்தாலும் பொத்தாம் பொதுவாக, மொண்ணையாக ஒரு கேள்வியைக் கேட்டுவைக்க வேண்டியது. ஆமா, அதானே என்று கொஞ்சம் பேர் வழிமொழிய வேண்டியது].

எல்லாமும் எளிதாகக் கிடைத்துவிடுவதால் எதற்காகவும் காத்திருக்க இவர்கள் தயாராக இல்லை. கடினமாக உழைத்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் அற்று இற்றுப் போய்விடுகிறது. இதனிடையே, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்றொரு கூட்டமும் தயாராகிவிடுகிறது.

இந்தப் புதிய தலைமுறை இயல்பில் ஒரு வாழ்க்கை வாழ்கிறார்கள், மறுபக்கம் தங்களைப் பற்றியொரு பிம்பத்தைத் தாங்களே உருவாக்கி, வழிபட்டுப் பின்பற்றித் தொடர்ந்து அவற்றையே உண்மையென்றும் நம்பத் தொடங்கிவிடுகிறார்கள்.

எதிலும் அக்கறையின்மை, மனதைச் செலுத்துவதில்லை. ஈடுபாடு கொள்வதில்லை. எல்லாமே ரீல்ஸ் மனநிலைதான். பத்து நிமிஷ விடியோக்களைப் பார்ப்பதற்குக்கூட பொறுமையில்லை. அதுவுமே அரை நிமிஷத்தில் ஷார்ட்ஸ்களாகத் தரப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

போல இந்தத் தலைமுறையிடம் அதிகளவில் நுகர்பொருள் பயன்பாடு, தேவையற்ற நுகர்வு என்பது தவிர்க்க முடியாததாகப் பெருகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இவற்றுக்கும் யூடியூப் ரீல்கள், சமூக ஊடகங்கள் காரணமாக இருக்க வேண்டும். இவையும் திட்டமிடப்பட்டவை, ஊதிப் பெருக்கப்படுபவை என்பது தெரிந்தும் இருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம்.

தேவையில்லாதவற்றையும் வாங்கிக் குவிப்பது. அவர்கள் வீட்டில் இவையெல்லாம் இருக்கின்றன, இவர்கள் வீட்டில் இவையெல்லாம் இருக்கின்றன, நம் வீட்டிலும் இவற்றையெல்லாம் வாங்க வேண்டும் – எப்படி என்றாலும் சரி. என்கிற மனநிலையில்தான் நுகர்வை ஊக்குவிக்க ஒவ்வொருவருக்கும் கடன் அட்டைகள் உதவிக்கு வந்து நிற்கின்றன.

வாங்குவதும் எளிதாகிவிட்டது. உணவுகளில் தொடங்கி, தின்பண்டங்கள், ஐஸ்கிரீம் வரையிலும் இரவு பகல் என 24 மணி நேரமும் வாங்கலாம்; எந்நேரம் வேண்டுமானாலும் செல்போனிலுள்ள ‘ஆப்’களின்வழி ஆர்டர் போட்டால் வீட்டிலேயே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார்கள் (இந்த இரவில் ஒருவர் இவ்வளவு தொலைவு அலைய வேண்டுமா? என்ற கேள்விக்குக்கூட, அதெல்லாம் அவர்களுக்குப் பணம் தரப்பட்டுவிடும் என்பதுதான் பதில். ஆக, பணம் தந்துவிட்டால் எல்லாமே சரி, மனிதம் செகண்டரி).

வாங்கச் செய்வதற்கும் என்னென்னவோ திட்டங்களையும் சலுகைகளையும் விலையில் தள்ளுபடிகளையும் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன. தவிர, பொருள்களைச் சந்தைப்படுத்துவதில் இன்ஃபுளூயன்சர்கள் – ஊக்குவிப்பாளர்கள் என்றொரு கூட்டமும் புறப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு பொருளுக்குக் கீழே வந்து – அது குப்பையாகவே இருந்தாலும் - ஆஹா, ஓஹோ எனப் பாராட்டி ஏராளமான கருத்துகள், பரிந்துரைகள். எல்லாம் திட்டமிடப்பட்டவை. ஆனாலும் அவற்றை ஜென் ஸீக்கள் நம்புகிறார்கள். வாங்குகிறார்கள் (ஒவ்வொரு மாடல் வரும்போதும் ஒவ்வொரு புது போன் – நவீன தொழில்நுட்ப மோகம்!).

பொருள்களின் தரத்தை எவ்வளவு லைக்குகள், எவ்வளவு காமென்ட்கள், எவ்வளவு ரி-டிவீட்கள், எவ்வளவு தேடுதல்கள் என்பதெல்லாமும்கூட தீர்மானிக்கின்றன.

ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால், ஏற்கெனவே அதை வாங்கிப் பயன்படுத்தியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, விசாரித்துதான் வாங்குவார்கள் பூமர்கள். ஜென் ஸீக்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை. செல்போன் செய்திகளில் அந்தப் பொருளுக்குக் கீழேயுள்ள காமென்ட்கள் போதுமானவை. அப்படியே பழுதானால் என்ன, பரவாயில்லை, தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்கிக் கொள்ள வேண்டியதுதான், இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்டு.

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வீட்டு விசேஷங்களுக்கும் துணிகள், உடைகள் வாங்குகிற பூமர்கள் காலம் மலையேறிப் போய்விட்டது. வீக் என்ட் பர்ச்சேஸ், ஸாலரி பர்ச்சேஸ் என்றாகிவிட்டது. செருப்புகூட ஒன்றிரண்டு இருக்கும். ஆனால், காலம் மாறிவிட்டது. எத்தனை விதமான ஜோடிகள் வைத்திருக்கிறார்கள் என்பதும் ஆடைகளின் நிறத்துகேற்ற நிறத்தில் காலணிகளை அணிவதும்கூட கௌரவமாகிவிட்டது.

இன்றைய ஜென் ஸீக்களிடம் பூமர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சினை, பணத்தைப் பற்றிய மதிப்பு தெரியாமல் இருக்கிறார்கள், செலவழிக்கிறார்கள் என்பதுதான் (இன்ஃப்ளூயன்ஸர்கள் பெரும்பாலும் 90 கிட்ஸ், செலவழிப்பவர்கள் ஜென் ஸீக்கள்!).

வீட்டிலிருந்து கிடைத்தாலும் சரி, தானே சம்பாதித்துப் பெற்றதாக இருந்தாலும் சரி, இவர்கள் செலவழித்துக் கொண்டே இருக்கிறார்கள். சிக்கலான தருணங்களில் பணத்தின் மதிப்பு பற்றியும் சேமிப்பின் நன்மை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருமே பட்டுத்தான் திருந்த வேண்டும் என்றிருப்பதுதான்  மிகவும் பரிதாபகரமான நிலைமை.

வருமானத்திற்குள்தான் செலவுகளைச் செய்ய வேண்டும். இந்தப் பொருளை  வாங்கத் திட்டமிட்டுப் பணம் சேர்க்கிறேன் என்ற பூமர்கள் காலம் மலையேறி, கிடைக்கிறதெல்லாம் வாங்குவோம். இந்தப் பொருளை வாங்கியிருக்கிறேன், மாதாமாதம் இஎம்ஐ செலுத்திக் கொண்டிருக்கிறேன் என்று பெருமை பேசும்  ஜென் ஸீ (90, 2கே கிட்ஸ்களும் கொண்ட) காலம் வந்திருக்கிறது.

கடனுக்குத் தானே தருகிறார்கள், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பித் தந்தால் போதுமானதுதானே என்ற சமாதானத்தின் மூலம் கடன் அட்டைகளைப் பயன்படுத்தியும் தவணைத் திட்டங்கள் மூலமும் அத்தியாவசியத் தேவைக்கும், ஆசைக்கும் போலியான அந்தஸ்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பொருள்களை வாங்கிக் குவிக்கிற மனோபாவம் இருக்கிறது.

ஒரு பொருளை எதற்காக வாங்குகிறோம்? என்ன விலை கொடுக்கிறோம்? எவ்வளவு நாள் பயன்படுத்தக் கூடியனவாக இருக்க வேண்டும்? அல்லாமல் வாங்கு, வாங்கு, வாங்கிக் கொண்டேயிரு. கையில் காசு தீர்ந்துபோனதும் அல்லது பண வரத்து நின்றுவிட நேரிட்டால் மூளை குழம்பிப் போக வேண்டியதுதான், யோசனை, தூக்கமின்மை, மன அழுத்தம், மருத்துவம், மாத்திரைகள், மறுபடியும் அதீதமான மருத்துவச் செலவு...

நமக்கு என்ன வருவாய்? எவ்வளவு செலவு செய்யலாம்? எவ்வளவைச் சேமித்து வைக்க வேண்டும்? எதிர்காலத்துக்காக என்ன திட்டமிட வேண்டும்? ஊஹூம். கவலையே இல்லை. கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவழித்தாலாவது காசு கரைகிறது என்பது கண்கூடாகத் தெரியும். ஜிபே, பே டிஎம், அக்கவுண்ட் டிரான்ஸ்பர் என்று செல்போன்வழி கண்ணுக்குத் தெரியாமலேயே செலவழித்துக் கணக்கில் பேலன்ஸ் குறைந்துகொண்டிருக்கிறது.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் குடும்ப அமைப்புகள் இருப்பதில்லை. ஆணோ, பெண்ணோ, 18 வயதானதும் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். அவரவர் வாழ்க்கை, அவரவர் முயற்சி, அவரவர் முன்னேற்றம். எனவேதான், அவர்களுக்கு மதர்ஸ் டே, பாதர்ஸ் டே எல்லாம் தேவைப்படுகிறது.

பூமர்கள் காலத்தில் வீடுகளில் தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். கூட்டுக் குடும்பங்களாக இருக்கும், குடும்பங்களின், தனி மனிதர்களின் கஷ்ட நஷ்டங்கள் அனைவருக்கும் தெரியும் (கூட்டுக் குடும்பங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் மாதிரி சின்னத்திரை தொடர்களில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.)

ஆனால், இப்போது இரண்டுகெட்டான் நிலை. கூட்டுக் குடும்பங்களும் கிடையாது. இளைஞர்களோ எதிர்காலத்தை நோக்கித் தனிமனிதர்களாகப் பிரிந்து செல்வதும் கிடையாது. தனித்தனிக் குடும்பங்கள். முக்காலே மூன்று வீசம் தாய், தந்தை, ஒரு பிள்ளை, அபூர்வமாக இரு பிள்ளைகள் (தன்பெண்டு, தன்பிள்ளை சோறு வீடு / சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன் / சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன் / தெருவோர்க்கும் பயனற்ற சிறிய வீணன்! – புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மைக்ரோ பேமிலி வரையறை) எனப் பிரிந்துவர சுற்றிலுமாகச் சுயநலம். சொந்தக் காசில் இவர்கள் வைத்துக்கொண்ட சூனியம்தான், பூமர் பட்டமளிப்புகள். தவிர, உணவு ஊட்டுவதற்காகவும் அழுகையை நிறுத்தவும் குழந்தைகளிடம் செல்போனைக் கொடுத்து ரீல்ஸ்களைப் பார்க்க வைத்தது, விளையாட வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கிவைத்தது, யாருடனும் கலக்க விடாமல் தனிமைப்படுத்தியது என்றெல்லாமும் இருக்கின்றன!  

ஒட்டுமொத்தமாக ஜென் ஸீக்களும் 90, 2கே கிட்ஸ்களும் இப்படித்தான் என்று கூறிவிட முடியாது; விதிவிலக்குகளும் இருக்கின்றன. ஒருபக்கம் நிறைய படிக்கிறார்கள், வேலைகளுக்குச் செல்கிறார்கள், ஸ்டார்ட் அப்ஸ் தொடங்குகிறார்கள், மேலே மேலே உயருகிறார்கள். சாதிக்கிறார்கள்.

ஜென் ஸீக்களிடம் மிகப் பெருங் கோபம் இருக்கிறது. அறிவும்கூட இருக்கிறது. ஆனால், அவற்றை எந்த வகையில் ஒழுங்கமைக்க வேண்டும்? பயன்படுத்த வேண்டும்? எவ்வாறு பயன்படுத்தக் கூடாது? என்பதில் தெளிவு இருப்பதாகத் தோன்றுவதில்லை. இவர்களிலும் படித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு மாதிரி, வேலை கிடைத்தவர்கள் ஒரு மாதிரி, வேலை கிடைக்காதவர்கள் ஒரு மாதிரி, வேலைக்கு மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருப்பவர்கள் ஒரு மாதிரி!

இதுவரையிலான பாணிகளில் சிந்திக்கவே கூடாதென இந்த ஜென் ஸீ தலைமுறை நினைக்கலாம்; என்றால், தொலைநோக்கில் புதிதாகச் சிந்திக்கவும் திட்டமிடவும் வேண்டும் அல்லவா? பொதுவான புதிய விஷயங்கள் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல அவற்றைப் பயன்படுத்த வேண்டும்தானே. அல்லாமல் யாருக்கு என்ன பயன்?

சமூக ஊடகங்களின் வழி உலகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, நேருக்கு நேராக, அனுபவங்களின்வழி உலகைப் பார்க்கவும் கற்றுக் கொள்ளவும் வாழவும் வேண்டும். ஆனால், காதுகொடுக்கவே தயாராக இல்லாவிட்டால் யார்தான், என்னதான் செய்ய முடியும்?

நேற்றிருந்ததைப் போல இன்றில்லை இவ்வுலகம் என்பது உண்மைதான். ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பார்த்துப்  பொறுப்பற்றவர்களெனக் கூறுவதும் வழக்கமானதே என்றாலும் மனிதர்களும் மனித வாழ்வும் எப்போதும் ஒன்றேதான்.

எதிர்காலத்தில் அறம், நெறி, விழுமியங்கள் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாத, பொருளாதாரம் சார்ந்த பொறுப்புணர்வு அற்றதொரு சமுதாயம் உருவாகிவிடுமோ என்ற அச்சம் இயல்பாகிறது, ஒவ்வொரு பேருந்துப் பயணத்தின்போதும்.

தற்போதைய வேகத்தில் சென்றால் – இனித் தலைமுறைக் காலம் எல்லாம் தேவைப்படாது – அதிவிரைவிலேயே இன்றைய ஜென் ஸீக்களும் திடீரென ஒரு நாள் பூமராகிவிடுவார்கள். ஆக, யார் ஜென் ஸீ? யார் பூமர்? எல்லாம் பழுத்த ஓலைகளைப் பார்த்துச் சிரிக்கும் குறுத்தோலைகளின் கதைதான்!

Summary

On the approaches of the older and younger generations, which clash like two poles in today's society...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.