ஏற்கெனவே நிறைய பேர் பிறந்திருக்கிறார்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார்கள், எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் வரும் காலத்திலும் நிறைய பேர் பிறப்பார்கள், கவிதைகள் எழுதவும் செய்வார்கள். ஆனால், தமிழ்கூறும் நல்லுலகில் ‘கவிஞர்’ என்ற ஒற்றைச் சொல் குறிப்பது எப்போதும் ஒரே ஒருவரை மட்டுமே – கண்ணதாசன்!
கவிஞர் வாழ்ந்திருந்தால் வரும் 24 ஆம் தேதி நூறாவது ஆண்டைத் தொட்டிருப்பார். ஆம், அன்றுதான் கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாள். ஜூன் 24 (1927) ஆம் தேதி, தமிழ் உலகும் தமிழ்த் திரையுலகும் ஒன்றுதிரண்டு கொண்டாட வேண்டிய, கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு தொடங்குகிறது.
காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற சிற்றூரில் நகரத்தார் குடும்பத்தில் முத்தையா என்ற எட்டாவது குழந்தையாகப் பிறந்து காரைக்குடியில் மற்றொரு குடும்பத்தில் நாராயணனாகத் தத்துக் கொடுக்கப்பட்ட கண்ணதாசன் படித்ததென்னவோ எட்டு மட்டில்தான்.
எழுத்தின் மீது தீராக் காதல் கொண்ட கண்ணதாசன், சென்னை வருகிறார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடுகிறார், கிடைக்கவில்லை. ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து எழுதவும் செய்தார். அவருடைய 18-வது வயதில் கிரகலட்சுமி என்ற இதழில் முதல் கவிதை நிலவொளியிலே வெளிவருகிறது.
அங்கிங்கென வேலை செய்த கண்ணதாசன், ஒருவழியாகத் திரைத் துறையிலேயே சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்குச் சேருகிறார். அங்கேதான் புகழ்பெற்ற கதை – வசனகர்த்தாவான மு. கருணாநிதியின் நட்பு கிடைக்கிறது; கண்ணதாசனின் திராவிட இயக்கத் தொடர்பும் சார்பும் உருப்பெறுகின்றன.
கவிஞர் எழுதிய முதல் பாடல், 1949-ல் ஜுபிடர் பிக்சர்ஸின் கன்னியின் காதலி படத்துக்காக ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்பதுதான். திரைத்துறையில் அன்று தொடங்கியது கவிஞரின் பயணம். அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்தன வெற்றிகள். விஸ்வநாதன் – ராமமூர்த்தியுடன், பின்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து காலத்தால் அழியாத கானங்கள் கிடைத்தன.
வாழ்வின் ஆழமான தருணங்களை, சிக்கலான மனித மனங்களை, மனிதனின் அத்தனை வகையான உணர்வுகளைத் திரைப் பாடல்களில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார் - ஆசை, ஆத்திரம், ஏமாற்றம், கோபம், துயரம், கவலை, ஜனனம், காதல், வாழ்க்கை, வெற்றிகள், தோல்விகள், பிணி, மூப்பு, மரணம் – ஒவ்வொன்றையும் சார்ந்து வகை வகையாக அவர் எழுதியுள்ள பாடல்கள் எண்ணற்றவை – அற்புதமானவை.
கம்ப ராமாயணம் தொடங்கி சங்க இலக்கியங்களிலும் ஆங்கில இலக்கியங்களிலும் சித்தர் பாடல்கள், நாட்டுப்புற பாடல்களிலும்கூட பாண்டித்யம் பெற்றிருந்தார் கண்ணதாசன். எனவே, அவருடைய பாடல்கள் இலக்கியத் தரம் பெற்றிருந்தன.
வீடு வரை உறவு வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்பது போன்ற பாடலை யாரால் இனி எழுத முடியும்? ஆண்டவன் கட்டளையில் ஆறு மனமே ஆறு, கர்ணனில் உள்ளத்தில் நல்ல உள்ளம், பாலும் பழமும் படத்தில் போனால் போகட்டும் போடா, நான் பேச நினைப்பதெல்லாம், சுமைதாங்கியில் மயக்கமா, கலக்கமா; மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஆலயமணியில் எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா, பாவ மன்னிப்பில் வந்த நாள் முதல் இந்த நாள் வரை, காலங்களில் அவள் வசந்தம், குலமகள் ராதையில் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, வானம்பாடியில் கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும், பார்த்தால் பசி தீரும்-ல் உள்ளம் என்பது ஆமை, பாகப்பிரிவினையில் ஏன் பிறந்தாய் மகனே, ஆயிரத்தில் ஒருவனில் அதோ அந்தப் பறவை போல, மன்னாதி மன்னனில் அச்சம் என்பது மடமையடா, சிவகெங்கைச் சீமையில் வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது, மாலையிட்ட மங்கையில் எங்கள் திராவிடப் பொன்னாடே, அவள் ஒரு தொடர்கதையின் தெய்வம் தந்த வீடு, புதிய பறவையில் எங்கே நிம்மதி, சூர்யகாந்தியில் அவரே பாடிய பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொன்னது, வீர அபிமன்யூவில் தேன் சொட்டும் பார்த்தேன், ரசித்தேன், பக்கம்வர நினைத்தேன், பலே பாண்டியாவின் அத்திக்காய் காய் காய், கவலை இல்லாத மனிதனில் பிறக்கும்போதும் அழுகின்றாய், அன்னையில் புத்தியுள்ள மனிதரெல்லாம், பட்டினப் பிரவேசத்தின் வான்நிலா நிலா அல்ல, ஏணிப்படிகளில் பூந்தேனில் கலந்து, முள்ளும் மலரும்-ல் செந்தாழம் பூவில், மூன்றாம் பிறையில் கண்ணே கலைமானே... _ இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒவ்வொரு வாசகருக்கும் திரை ரசிகருக்கும் மனதில் ஒரு பட்டியல் இருக்கும். அவருடைய ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வோர் இடமிருக்கும்.
ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், எட்டு தொகுதிகளுக்கும் மேலாகக் கவிதைகள், சேரமான் காதலி உள்பட 20 நவீனங்கள், 20 கட்டுரை நூல்கள், பத்து பாகங்களில் அர்த்தமுள்ள இந்து மதம் (தினமணி கதிரில் தொடங்கித் தொடராக வெளிவந்தது), மதுரைவீரன், மன்னாதிமன்னன், சிவகங்கைச் சீமை, இல்லறஜோதி உள்பட பத்து திரைப்படங்களுக்கும் மேலாகத் திரைக்கதை / வசனம், மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி, இயேசு காவியம் போன்ற காவியங்கள், தன்வரலாறான வனவாசம், மனவாசம் – என கண்ணதாசனின் படைப்புகள் எண்ணிறந்தவை. (5 ஆயிரம் பாடல்களும் 6 ஆயிரம் கவிதைகளும் 232 நூல்களும் எழுதியிருப்பதாக அகில இந்திய வானொலி தெரிவிக்கிறது). தென்றல், கண்ணதாசன் உள்பட நிறைய இதழ்களையும் நடத்தினார் அவர்.
கண்ணதாசன் தயாரித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்பு மிக்கவை. மாலையிட்ட மங்கை – இந்தப் படத்தில்தான் மனோரமா அறிமுகமானார். செந்தமிழ்த் தேன்மொழியாள், எங்கள் திராவிடப் பொன்னாடே போன்ற பாடல்கள் எல்லாம் இந்தப் படத்தில்தான். சிவகெங்கைச் சீமை – மருது பாண்டியர் வரலாற்றுப் படம். மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும். டி.கே. பகவதி, எஸ்.எஸ். ராஜேந்திரன் என மன்னர்கள் உள்பட கதை மாந்தர்கள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருப்பார்கள். ஆனால், இதே மாதத்தில் (1959 மே) வீரபாண்டிய கட்டபொம்மனும் வெளியானதால் வசூல்ரீதியில் வெற்றி பெறவில்லை. கறுப்புப் பணம் – இருப்பவர்களிடமிருந்து கறுப்புப் பணத்தைக் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு உதவும் நவீன ராபின்ஹூட் கதை. கண்ணதாசனே கதாநாயகனாகவும் நடித்திருப்பார். அவர் மிகவும் விரும்பிச் செய்த பாத்திரம் என்பார்கள்.
கவிஞர் கண்ணதாசனின் அரசியல் வாழ்வு தனி. திராவிட அரசியலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவர், 1957 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே அவர் பிறந்த செட்டிநாட்டுப் பகுதியிலுள்ள திருக்கோஷ்டியூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டார். நகைச்சுவையும் சோகமும் ஏமாற்றமும் என பலவித ரசங்களும் கலந்த அரசியல் கதை அது.
பின்னர், 1960-களின் தொடக்கத்தில் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் பழ. நெடுமாறன் போன்றோருடன் தி.மு.க.விலிருந்து விலகி தமிழ்த் தேசிய கட்சி கண்டார். தொடர்ந்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் மீதான பற்றுதலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது தமிழ்த் தேசிய கட்சி. காங்கிரஸ் உடைந்தபோது இந்திரா காங்கிரஸில், பிறகு பழ. நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸில் மூத்த துணைத் தலைவராக. ஆனால், தேர்தலில் போட்டியிடவேயில்லை.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் எனப் பட்டியலிட முடியாத அளவுக்குத் திராவிட மற்றும் தேசிய இயக்கத் தலைவர்களுடன் மிக மிக நெருக்கமாக இருந்தவர் - செயல்பட்டவர் கண்ணதாசன். மிகவும் வெள்ளந்தியான, குழந்தை மனம் கொண்டவர். எல்லாரையும் பாராட்டவும் செய்வார், விமர்சனமும் செய்வார். ஆனால், அனைவருமே கண்ணதாசனை நன்கறிந்தவர்கள் என்பதால் யாரும் கோபித்துக் கொண்டதில்லை.
நான் வெற்றி பெற்றால் மன்னன், தோற்றால் நாடோடி என எம்.ஜி.ஆரே அறிவித்துப் பின்னர், பெரும் வெற்றி பெற்ற நாடோடி மன்னன் படத்துக்கு வசனம் கண்ணதாசன்தான். மன்னன் ஆனால் என்னென்ன செய்வேன் எனப் படத்தில் கண்ணதாசன் வசனங்களில் நாடோடி அறிவித்தவற்றை எல்லாமும் பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்வராகிச் செய்துகாட்டினார் எம்ஜிஆர். எம்ஜிஆரின் அரசியல் முன்னேற்றத்தில் கண்ணதாசன் எழுதிய வசனங்களுக்கும் பாடல்களுக்கும் பெரிய இடமிருக்கிறது (என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர்; நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை). மிக நட்புடன் இருந்த எம்ஜிஆரை மிகக் கடுமையாக விமர்சனமும் செய்திருக்கிறார் அவர். ஆனால், 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதன்முதலாகத் தமிழகத்தின் முதல்வரான எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை நியமித்து அழகு பார்த்தார்.
அமெரிக்கா சென்றிருந்த இடத்தில் சிகாகோவில், சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் 1981 அக்டோபர் 17 ஆம் நாளில் கண்ணதாசன் மறைந்தார். 18 வயதில் எழுதத் தொடங்கிய அவர், வெறும் 54 வயதிலேயே இயற்கையுடன் கலந்துவிட்டார். இடைப்பட்ட 36 ஆண்டு காலத்தில் கண்ணதாசன் எழுதியவை எல்லாம் என்றென்றும் சாகாவரம் பெற்றிருக்கின்றன. அவர் எழுதியவற்றைப் பற்றி எழுதிக் கொண்டேயிருக்கலாம்.
இப்போதும் எங்கேனும் வானொலியில், பண்பலையில், தொலைக்காட்சிகளில், செல்போன்களில், வாகனங்களில் கவிஞரின் பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றன.
கண்ணதாசன் நூற்றாண்டு இது. காற்றில் மிதந்துகொண்டிருக்கும் அவர் கவிதை வரிகளைக் கேட்டுக் கேட்டு இன்னும் பல நூறாண்டுகளுக்குத் தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள். மகாகவி பாரதியைப் போல, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போல, தமிழ் மகனாம் கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டையும் தமிழ்நாடு அரசும் தமிழ் அமைப்புகளும் விழாவெடுத்துக் கொண்டாட வேண்டும்.
காலகாலத்துக்கும் கொண்டாடப்பட வேண்டிய மாபெரும் கவிஞர் கண்ணதாசன். அவரே சொன்ன வரிகள்தான் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!
Summary
let us celebrate - In connection with the birth centenary of Poet Kannadasan, which begins on June 24...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... நிலைத்திருக்கும் அந்தக் கற்சிற்பத்தின் குரல்!

தமிழ்க் குடும்பங்களின் புறக்கணிக்க முடியாத கலாசாரம் இளையராஜா!
ஜென் ஸீ தலைமுறையினரிடையே இளையராஜா!
நீதிக்கான மல்யுத்தம்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies





