நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டின் – அப்போது தமிழ்நாடு அல்ல, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றின் பகுதிகள் உள்ளிட்ட மெட்ராஸ் மாகாணத்தின் சட்டப்பேரவைக்காக 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தேர்தலில் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பிறகுதான் அமைச்சரவை பதவியேற்றது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைகளுக்கும் 1951 அக்டோபரிலேயே தொடங்கித் தேர்தல் வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்துத் தொகுதிகளுக்கும் பிப். 2 ஆம் தேதி முடிவுகளும் வெளியாகிவிட்டன.
ஆனால், ராஜாஜி தலைமையிலான முதல் காங்கிரஸ் அமைச்சரவை, 67 நாள்களுக்குப் பிறகு, ஏப்ரல் 10 ஆம் தேதி பதவிப் பொறுப்பேற்றது.
மெட்ராஸ் மாகாணத்தில் 375 தொகுதிகள் இருந்தன. இவற்றில் 360 தொகுதிகளில் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தியபோதிலும் 152 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற முடிந்தது.
அதிக இடங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சி 62 தொகுதிகளிலும் சுயேச்சைகள் 62 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். சோசலிஸ்ட் – 13, பிரஜா கட்சி – 35, ஷெட்யூல் வகுப்பு சம்மேளனம் – 2, உழைப்பாளர் கட்சி – 19, கிருஷிக் லோக் கட்சி – 15, காமன் வீல் – 6, முஸ்லிம் லீக் - 5, பார்வர்ட் பிளாக் – 3, ஜஸ்டிஸ் கட்சி – 1. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவை 188 உறுப்பினர்கள். எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
சென்னையில் அமைச்சரவை அமைப்பது பற்றி ஒரு வாரத்தில் முடிவு செய்யலாம் என்றும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத மாகாணங்களில் கூட்டணி ஆட்சி அமைப்பதில்லை என்றும் காங்கிரஸின் உயர்தலைவர்கள் தீர்மானித்தனர்.
இதனிடையே, இடைக்கால ஏற்பாடாகக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அப்போது யோசிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமராஜர், ஆளுநர் ஆட்சி ஏற்படுவதைத் தாம் ஆதரிக்கவில்லை என்றார்.
“ஜனநாயகமே செயல்பட வேண்டும். எந்தக் கட்சியாயிருந்தாலும், கட்சிகளின் கூட்டணியாக இருந்தாலும் கட்சி ஆட்சியே வேண்டும். ஆனால், தற்போதுள்ள நிலைமையையும் புறக்கணித்துவிட முடியாது. நிலையான அமைச்சரவை சாத்தியமில்லை என்றால் மறுதேர்தல் நடத்துவது அவசியமாகும். அந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும் என்று சோதிடம் கூற முடியாது. நிலையான அரசு ஏற்பட அது வழி செய்தாலே போதும்” என்றும் காமராஜர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆளுநர்வழி குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதில் காங்கிரஸின் தயக்கம் வெளிப்பட்டது. அல்லாமல், புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால அமைச்சரவை தொடருவது நல்லதென்றும் இதனால் அரசு நிர்வாகம் பாதிக்கப்படாது என்றும் கருதப்பட்டது. எனவே, முதல்வர் பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையிலான அமைச்சரவை ராஜிநாமா செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
இடையே, பிரிட்டிஷ் மன்னர் ஜார்ஜ் மறைந்ததன் காரணமாக ஒரு நாள் கழித்து, பிப்ரவரி 8 ஆம் தேதி, மாகாணத்தின் முதல்வராக இருந்த ஸ்ரீ குமாரசாமி ராஜாவும் அமைச்சர்களும் ஆளுநரைச் சந்தித்து ராஜிநாமா கடிதங்களை அளித்தனர்.
தேர்தலில் தோற்றுவிட்ட அமைச்சர்களான பக்தவத்சலம், கோபால ரெட்டி, களா வெங்கட்ட ராவ், சந்திரமௌலி, மாதவ மேனன் ஆகியோரின் ராஜிநாமாக்களை மட்டும் ஏற்றுக்கொண்ட ஆளுநர் பவநகர் மகாராஜா, புதிய அமைச்சரவை பதவியேற்கும் வரையில், முதல்வர் குமாரசாமி ராஜா தலைமையிலேயே இடைக்கால அமைச்சரவை தொடருமாறும் பணித்தார்.
காங்கிரஸ்தான் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப் பெருங்கட்சி என்ற வகையில் முதல் வாய்ப்பு காங்கிரஸுக்கே வழங்கப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து, உயர்நிலையில் காங்கிரஸ் அரசு அமைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் தொடங்கி நடைபெற்றன.
(தமிழ்நாட்டுப் பகுதியில் இருந்த 190 தொகுதிகளில் 94 தொகுதிகளில் காங்கிரஸும் சுயேச்சைகள் உள்பட பிற கட்சிகள் 96 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர் - காங்கிரஸ் – 96, கம்யூனிஸ்ட் – 14, காமன்வீல் -6, சுயேச்சை – 40, உழைப்பாளர் கட்சி- 19, ஜஸ்டிஸ் – 1, ஷெ.வ. சம்மேளனம் – 1, சோசலிஸ்ட் – 3, பிரஜா – 7, பார்வர்ட் பிளாக் – 3).
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்தாலும் வேறு எந்தக் கட்சிக்கும் முழுமையான ஆதரவு கிடைக்கப் பெறவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களுடன் பிற கட்சி உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு அமைச்சரவை அமைப்பதற்கான முயற்சிகளைச் சென்னையில் முகாமிட்டுக் கட்சியின் அகில இந்திய செயலர் அஜய் கோஷும் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ. டாங்கேயும் மேற்கொண்டனர்.
தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் கூடவிருந்த நிலையில், ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கம்யூனிஸ்ட்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக சுமார் 166 பேர் கையெழுத்திட்டிருந்தனர். இதன் அடிப்படையில் தங்களைத்தான் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று குழுவைச் சேர்ந்த டி. பிரகாசம் வலியுறுத்தினார்.
இதனிடையே, சென்னை ராஜ்யத்தின் புதிய ஆளுநராக ஸ்ரீ பிரகாசா நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலரான லால் பகதூர் சாஸ்திரி, வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது சுயேச்சைகள் யாரேனும் காங்கிரஸில் இணைய முன்வந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்தார்.
இதேபோல, பிப்ரவரி இறுதியில் தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சென்னையில் காங்கிரஸுக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில சந்தர்ப்பங்களைப் பொருத்து காங்கிரஸ் அமைச்சரவையை அமைக்கும் என்றார்.
“ஒரே கட்சி அமைச்சரவை அமைப்பதுதான் நல்லது; ஆயினும், சில குறிப்பிட்ட நிலைமையில் காங்கிரஸ் பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு அமைச்சரவைகள் அமைப்பதில் தவறில்லை. மாநிலத்திலுள்ள பெரிய கட்சி தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிப்பது மாநிலத்தின் நலனுக்கு நல்லதல்ல” என்றும் நேரு தெரிவித்தார்.
தவிர, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் (ஆட்சிப் பொறுப்பேற்றால் முதல்வர்) யார்? என்பதும் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கிறது. முதல்வராக இருக்கும் குமாரசாமி ராஜாவே தக்க வழிகாட்டுவார் என நம்பப்பட்டது. அல்லாமல் தேர்தலில் தோற்ற அமைச்சர்களில் எவரையும் தலைவராக்குவதை மேலிடம் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் சிலருடைய பெயர்களும் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே, தில்லி சென்று பிரதமர் ஜவாஹர் லால் நேருவைச் சந்தித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராஜரும் ஆந்திர காங்கிரஸ் தலைவர் சஞ்சீவி ரெட்டியும் ஆலோசனை நடத்தினர்.
தனித்தே ஆட்சி அமைப்பது, பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவது என்றும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் கூடித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்றும் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, மாத இறுதியில் கூட்டத்தைக் கூட்டித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என முதல்வர் குமாரசாமி ராஜாவும் அறிவித்தார்.
புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு, மார்ச் 11-ல் சென்னை வந்த ஸ்ரீ பிரகாசாவை ராஜாஜியும் சந்தித்துப் பேசினார். மறுநாள் நடந்த ஆளுநர் பதவியேற்பு விழாவிலும் ராஜாஜி கலந்துகொண்டார்.
பின்னர் ஒரு வாரத்தில் ராஜாஜியை காமராஜரும் சஞ்சீவரெட்டியும் சென்று சந்தித்துப் பேசினர். உடனடியாக பதிலளிக்க இயலாதென ராஜாஜி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, கொல்கத்தாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குச் செல்லும்வழியில், கட்சித் தலைவர் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ராஜாஜி, டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, ஏ.பி. ஷெட்டி, கோட்டி ரெட்டி, சி. சுப்பிரமணியம், கே. வெங்கடசாமி நாயுடு ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்படுவதாகவும் சஞ்சீவி ரெட்டி தெரிவித்தார்.
கொல்கத்தா கூட்டத்தில் சென்னையில் அரசு அமைப்பது பற்றிய பிரச்சினையை பிரதமர் நேருவிடமே ஒப்படைப்பதென காங்கிரஸ் செயற்குழுவும் நாடாளுமன்றக் குழுவும் முடிவு செய்தன.
சென்னை திரும்பிய சி. சுப்பிரமணியம், ராஜாஜி சம்மதிக்கவில்லை என்றே அவரைச் சந்தித்தவர்கள் தெரிவிக்கின்றனர். ராஜாஜியை வற்புறுத்தி ஒப்புக்கொள்ளச் செய்ய முடியுமானால் அதுவே சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.
சஞ்சீவி ரெட்டியும் கொல்கத்தா புறப்படுமுன் காமராஜருடன் சென்று ராஜாஜியைச் சந்தித்து, முதல்வர் பதவியேற்க அழைப்பு விடுத்ததாகவும் அவர் இணங்கவில்லை என்றும் தெரிவித்தனர். ராஜாஜியைத் தலைவராக்க வேண்டும் எனத் தலைவர்களும் கடலூர், இராமநாதபுரம் போன்ற மாவட்ட கட்சி அமைப்புகளும் வலியுறுத்தினர்.
இதனிடையே, சென்னையில் மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு ராஜாஜியை வேண்டிக்கொள்ளும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, காலையில் ராஜாஜியை காமராஜர், சஞ்சீவி ரெட்டியுடன் முதல்வர் குமாரசாமி ராஜாவும் சந்தித்துப் பேசினர். மீண்டும் அரசியலுக்கு வருவதில்லை என்ற தம்முடைய முந்தைய நிலையை ராஜாஜி இன்னும் கைவிடவில்லை என்றும் மேற்கொண்டு முயன்று பார்க்க வேண்டும் என்றும் பின்னர் ராஜா தெரிவித்தார். காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ராமநாத் கோயங்காவும் ராஜாஜியைச் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நேருவும், கட்சி விரும்பினால், ராஜாஜியும் இணங்கினால் அதன்படியே செய்யலாம் என்றும் தெரிவித்ததுடன், ராஜாஜிக்கும் குமாரசாமி ராஜாவுக்கும் கடிதங்களும் எழுதினார். கடிதங்களுடன் குமாரசாமி ராஜாவும் காமராஜரும் ராஜாஜியைச் சந்தித்துப் பேசினர். டாக்டர் பி. சுப்பராயன், ம.பொ. சிவஞானம், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு போன்றோர் சந்தித்தனர்.
தொடர்ந்து, மார்ச் 31 ஆம் தேதி மாலையில் முதல்வர் குமாரசாமி ராஜா தலைமையில் நடந்த புதிய பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைவராக ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய காமராஜர், ராஜாஜியைத் தலைவராக்க (முதல்வராக்க) ஒரு மாத காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
(அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற வகையில் அரசு அமைக்க காங்கிரஸ் அழைக்கப்பட்டது. தனிப் பெரும் கட்சியான காங்கிரஸ் மறுத்தால் மட்டுமே மற்றவர்களை அழைக்க முடியும்.)
ஏப்ரல் முதல் தேதி ஆளுநர் பிரகாசாவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ராஜாஜி. ராஜிநாமா செய்த குமாரசாமி ராஜா அமைச்சரவையைப் புதிய அரசு அமையும் வரை பொறுப்பில் இருக்க ஆளுநர் பிரகாசா கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பிற கட்சிகளின் ஆதரவுடன் - ராமசாமி படையாச்சியின் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த 19 பேர், மாணிக்கவேலுவின் காமன்வீல் கட்சியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது.
1952 ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி பதவியேற்றார் (தேர்தலில் போட்டியிடாத நிலையில் மேலவை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்). ஆளுநராக இருந்த ஸ்ரீ ஸ்ரீபிரகாசா, புதிய அமைச்சரவைக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
ராஜாஜியின் அமைச்சரவையில் ஏ.பி. ஷெட்டி, சி. சுப்பிரமணியம், கே. வெங்கடசாமி நாயுடு, என். ரங்கா ரெட்டி, டாக்டர் எம்.வி. கிருஷ்ணாராவ், வி.சி. பழனிசாமி கவுண்டர், டாக்டர் யு. கிருஷ்ணாராவ், டாக்டர் ஆர். நாகண்ண கௌடு, என். சங்கரரெட்டி, எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கர், கே.பி. குட்டி கிருஷ்ணன் நாயர், ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி, எஸ்.பி.பி. பட்டாபி ராமராவ், டி. சஞ்சீவையா ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்த அமைச்சரவையில் மதுவிலக்கிற்கு என்று தனி அமைச்சராக வி.சி. பழனிசாமி கவுண்டர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. வேளாண் துறைக்கு நாகண்ண கௌடுவும், கல்வித் துறைக்கு எம்.வி. கிருஷ்ணாராவும், நிதி, உணவுத் துறைக்கு சி. சுப்பிரமணியமும், வருவாய்த் துறைக்கு எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கரும் வீட்டுவாடகைக் கட்டுப்பாட்டுத் துறைக்கு ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதியும் பொறுப்பேற்றனர்.
எனினும், அரசியல் சூழல்கள் காரணமாக சுமார் இரு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்வர் பதவியிலிருந்து ராஜாஜி விலகினார். இதைத் தொடர்ந்து, 1954, ஏப். 13 ஆம் தேதி முதல்வராக காமராஜர் பதவியேற்றார். காமராஜர் அமைச்சரவையில் சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், ஏ.பி. ஷெட்டி, எம்.ஏ. மாணிக்கவேலு, சண்முக ராஜேசுவர சேதுபதி, பி. பரமேஸ்வரன், டி. இராமசாமி படையாச்சி ஆகியோர் இடம் பெற்றனர்.
(1952 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கட்சி தொடங்கி (1949 ஆம் ஆண்டு) மூன்றாண்டுகளே ஆன நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை).
summary
About the Congress Party forming the government in the 1952 Tamil Nadu Legislative Assembly elections...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு - சட்டப்பேரவைத் தேர்தல்கள் - இதுவரை...

பிப். 23 -இல் தமிழக அமைச்சரவை கூட்டம்

கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வர்: மாணிக்கம் தாகூர்

ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது: க. கிருஷ்ணசாமி
வீடியோக்கள்

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26
தினமணி வீடியோ செய்தி...

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


