அலகாபாத் ஹைகோர்ட் தீர்ப்பின் விளைவாக ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி விவாதிப்பதற்காக உடனடியாக லோகசபையைக் கூட்ட வேண்டுமென்று ஜனசங்கத் தலைவர் வாஜபேயர் அறிவித்துள்ளார். சபாநாயகர் தில்லானைச் சந்தித்து இதை வற்புறுத்தவும் அவர் உத்தேசித்திருக்கிறார்; சாதாரணமாக லோகசபையின் கூட்டம் ஒன்று இன்னும் சில வாரங்களில் நடக்க வேண்டும். ஆனால், கோர்ட் தீர்ப்பினால் எழுந்துள்ள நிலைமையை முன்னிட்டு இந்தக் கூட்டம் ரத்து செய்யப்படலாம். அல்லது ஒத்திவைக்கப்படலாம் என்ற ஹேஷ்யங்கள் எழுந்திருக்கின்றன; இந்த ஹேஷ்யங்களுக்குக் கொஞ்சமும் ஆதாரமில்லாமலிருக்கலாம். இந்திரா காந்தியின் தலைமையில் தமக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை காங்கிரஸ் பார்லிமெண்டரி கமிட்டி ஊர்ஜிதம் செய்துவிட்டது. பல்வேறு ராஜ்யங்களிலுள்ள புது காங்கிரஸ் முதல் மந்திரிகளும் சட்டசபை மெம்பர்களும்கூட இந்த நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்துவிட்டனர்; லோகசபையிலும் புது காங்கிரஸ் கட்சிக்கு அமோகமான மெஜாரிட்டி இருக்கிறது. ஆகையால், லோகசபைக் கூட்டம் ரத்து செய்யப்படலாம் என்ற வதந்திகள் உண்மையாயிருக்குமென்று நம்ப முடியவில்லை: ஆனால், தென்றல் போல் ஆரம்பிக்கும் காற்று அரசியல் உலகில் புயலாக மாறிவிடுவது மிகவும் சகஜமானதாகும். சந்தேகங்களுக்கிடம் கொடுக்காமல் லோகசபைக் கூட்டம் பற்றி அறிவிப்பு வெளியிடுவது விரும்பத் தக்கதாயிருக்கும். கட்சியின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ள பிரதம மந்திரி, அலகாபாத் தீர்ப்பை எதிர்த்து அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் தாக்கல் செய்யவிருக்கிறார். அலகாபாத் கோர்ட் தீர்ப்பின் அமலுக்கு அளிக்கப்பட்டுள்ள தடை, அப்பீல் தாக்கல் செய்த உடனேயே காலாவதியாகி விடும்; சுப்ரீம்கோர்ட் மேற்கொண்டு என்ன உத்தரவு பிறப்பிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பொறுத்திருந்து பார்ப்பதுதான் சரியான நடைமுறையாயிருக்கும். காங்கிரஸ் கட்சி பிரதமரிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், அப்பீல் பைசல் ஆகும் வரையில் பிரதமர் தொடர்ந்து பதவி வகிக்க முடியுமாவென்பது அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்துத்தான் இருக்கும்.