நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு வாக்காளர்கள் மகுடம் சூட்டப் போகிறார்கள் என்பதை அறிய தமிழகமே காத்திருக்கிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என 12,838 பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், அதிகார பலம், ஏற்கெனவே நகர்ப்புறத்தில் இருக்கும் அடிப்படை செல்வாக்கு, பண பலம் ஆகிய காரணங்களால் இந்தத் தேர்தலில் ஆளும் திமுக வலுவாகவே போட்டியிட்டது. ஏற்கெனவே 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக வலுவாகவே இருந்தது.
பாரம்பரியமாக தங்களுக்கு செல்வாக்கு இருக்கும் பகுதிகளில் தேர்தல் நடப்பதால், திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப்போல குறைவான இடங்களையே அதாவது 20 சதவீத இடங்களையே கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்தது. திமுகவின் கட்டமைப்பை நகர்ப்புறங்களில் மேலும் விரிவுபடுத்துவதற்காக 80 சதவீத இடங்களில் திமுக போட்டியிட்டது.
இந்தத் தேர்தலைப் பொருத்தவரை, கொங்கு மண்டலத்தைத் தவிர பிற அனைத்து மாநகராட்சிகளிலும் திமுகவுக்கு மிகப்பெரிய போட்டி இல்லை என்பதே உண்மை. கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், சேலம் ஆகிய 3 மாநகராட்சிகள் திமுகவுக்கு சவாலாக உள்ளன.
கோவையைப் பொருத்தவரை, திமுகவுக்கு செல்வாக்கு குறைந்த பகுதியாக அறியப்படுகிறது. இத்தகைய சூழலில் கோவையில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்து திமுக களம் இறங்கியது. இங்கு அதிமுகவும், பாஜகவும் தனித்துக் களம் இறங்கியது திமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கக் கூடும். கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு சுமார் 10 சதவீதம் வாக்கு இருப்பதால் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுவது அதிமுகவின் வெற்றிவாய்ப்பை தடுக்கக் கூடும்.
கோவையைவிட சேலம் மாநகராட்சியே திமுகவுக்கு மிகப்பெரிய சவால். அதிமுக, பாஜக தனித்து போட்டியிடுவது திமுகவுக்குச் சாதகமாக இருந்தாலும், சேலத்தில் அதிமுகவுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருக்கிறது. மேலும், தனது சொந்த மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியை திமுக கைப்பற்றுவது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கெüரவ பிரச்னை என்பதால் இங்கு அதிமுகவும் பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியைப் பொருத்தவரை திமுகவுக்கு செல்வாக்கு குறைந்த பகுதி. குறிப்பாக, குமரி மாவட்டத்தில் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், நாகர்கோவில் அரசியல் என்பது மத ரீதியாக மாறிவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் திமுக அணி வெற்றி பெற்றாலும், நகர்ப்புறமான நாகர்கோவில், கன்னியாகுமரி தொகுதிகளில் தோல்வி அடைந்தது. அதிமுக}பாஜக சேர்ந்திருந்தால் வலுவான சக்தியாக இருந்திருக்கும்.
2011இல் நாகர்கோவில் நகராட்சிக்கு தேர்தல் நடந்தபோது பாஜக தனித்து நின்று அந்த நகராட்சியைக் கைப்பற்றியது. எனவே, இந்த முறை அதிமுக}பாஜக பிரிந்து நின்றாலும் அது திமுகவுக்கு சவாலாகவே இருக்கும். ஆனால், மேயர் பதவிக்கு இப்போது மறைமுகத் தேர்தல் என்பதால் பாஜகவின் ஹிந்து ஒருங்கிணைப்பு பிரசாரம் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறிதான். இதைத் தவிர பிற அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.
அதிமுக: அதிமுகவைப் பொருத்தவரை அனைத்து இடங்களிலும் போட்டியிட்டாலும் வெற்றிவாய்ப்புள்ள பகுதிகளில் மட்டுமே இறுதிவரை வேட்பாளர்கள் களத்தில் இருந்ததைக் காண முடிந்தது. அதிமுக தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்க முடியுமே தவிர மாநகராட்சி, நகராட்சிகளைக் கைப்பற்றுவதற்கான சூழல் குறைவாக இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கணிசமான இடங்களைப் பெறுவதற்கு அதிமுகவுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அதிமுகவுக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளை பாஜக பிரிக்கக்கூடும் என்பது பாதகமாக உள்ளது.
அதேபோல, அதிமுக}பாஜக பிரிந்தாலும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு விழுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.
பாஜக: பாஜகவை பொருத்தவரை, கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணி முறிந்தாலும், சுமார் 5,000 பதவிகளுக்கு பாஜக போட்டியிட்டது. இதுவே அந்தக் கட்சிக்கு சாதனைதான். 2011 உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 222 கவுன்சிலர் பதவிகளைக் கைப்பற்றியது. அதேபோல நகரப் பகுதியில் 2 சதவீத வாக்குகளைப் பெற்றது. இப்போது 2.6 சதவீத வாக்குகளைக் கொண்ட பாஜக, இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அதேநேரத்தில், நாகர்கோவில், கோவை, ஒசூர் ஆகிய மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் பாஜகவுக்கு உள்ளன.
நாம் தமிழர்: நாம் தமிழர் கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6.85 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது கட்சியாக உருவெடுத்தது. இந்தத் தேர்தலில் 65 சதவீத இடங்களில் அதாவது 8,000 இடங்களுக்கு மட்டுமே போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை சீரான வாக்கு வங்கி இருந்தாலும் எந்த ஒரு பகுதியிலும் வெற்றிக் கோட்டை தொடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
பிற கட்சிகள்: பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, அமமுக ஆகிய நான்கு கட்சிகளும் சென்னையில் முழுமையாகவும், பிற பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் வேட்பாளர்களை நிறுத்தினாலும் பெரிய அளவில் சோபிக்க வாய்ப்பு இல்லை.
வெற்றி வாய்ப்பு எப்படி?: திமுகவைப் பொருத்தவரை மாநகராட்சிகளில் 90 சதவீத இடங்களும், நகர்மன்ற உறுப்பினர் பதவிகளில் 85 சதவீதமும், பேரூராட்சிகளில் 80 சதவீதமும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆளும் கட்சியின் அதிகார பலம், பண பலம், நகர்ப்புற கட்சி கட்டமைப்பு ஆகியன திமுகவுக்கு துணை நிற்பது மிகப் பெரிய பலமாக உள்ளது.
அதிமுகவை பொருத்தவரை, கொங்கு மண்டலத்தில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய 20 இடங்களில் 80 சதவீத இடங்களிலும், திமுகவுடன் நேருக்கு நேர் மோதும் இடங்களில் 10 சதவீத இடங்களையும் அதிமுக கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதே வேளையில், கொங்கு மண்டலம் தவிர பிற மாநகராட்சிகளில் பெரிய அளவில் வெற்றிவாய்ப்பு இருக்காது எனத் தெரிகிறது.
பாஜகவை பொருத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய வெற்றிவாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்த்து, கோவை, ஒசூர் மாநகராட்சிகளில் ஒற்றை இலக்கத்திலும், நாகர்கோவில் மாநகராட்சியில் கணிசமான இடங்களையும் பெற வாய்ப்பு உள்ளது. அதுபோல திருநெல்வேலி, சிவகாசி மாநகராட்சிகளிலும் புதிதாகத் தடம் பதிக்கலாம். தனித்துப் போட்டியிட்ட கட்சிகளில் அதிக வார்டுகள் வென்ற கட்சியாக பாஜக வர வாய்ப்புள்ளது.
நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை கணிசமான இடங்களில் வெற்றி பெற முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், வாக்கு வங்கி அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக வர வாய்ப்பு உள்ளது. பாமகவை பொருத்தவரை தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சில நகராட்சி, பேரூராட்சி மன்றங்களில் உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்ற வாய்புள்ளது.
சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் கணிசமான வாக்குகளை மநீம பெறுவது அதிமுகவின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும். அமமுக, தேமுதிக 10 சதவீத இடங்களில்கூட போட்டியிடாதது அந்தக் கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு.
இந்த முறை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் இல்லாமல், நேரடித் தேர்தலாக இருந்திருந்தால் பாஜக, பாமக, நாம் தமிழர், மநீம ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம் கிடைத்திருக்கும். மறைமுகத் தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சாதகமாக மாறிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மொபெட் மீது காா் மோதல்: ஆசிரியா் தம்பதி உயிரிழப்பு

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

