முதலில் மூத்த மருமகளான தீப்தி மிஸ்ரா, 'நான் பிறந்து வளர்ந்தது அனைத்தும் குஜராத்தில் தான். எனது கணவர் சரவணன், இருவரும் காதல் மணம் புரிந்து கொண்டோம். என்னுடைய மாமனார், மாமியார் இருவரும் மற்றொரு அன்னை, தந்தை போன்றவர்கள். மொழி தெரியாத மாநிலத்தில் திருமணமாகி வந்த நிலையில், எனக்கு ஆதரவளித்தது மாமியார் மல்லிகா தான். நல்ல தாய் அமைவதும், மாமியார் அமைவதும் இறைவன் வழங்கும் வரம். தமிழகத்தில் எனக்கொரு நல்ல அம்மா கிடைத்திருப்பது இயற்கை தந்த பரிசு. மாமியார் என்பவர் ஒரு குடும்பத்தின் தூண் மட்டுமல்ல, ஆணிவேரும் கூட. பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக இருந்து எங்களை வழிநடத்துகிறார். அவரும் மருத்துவர், நானும் மருத்துவர் என்பதால், ஒரு ஆசிரியை, மாணவியைப் போன்ற உறவும் எங்களிடையே உண்டு. மல்லிகை மணம் எவ்வாறு மாறாதோ, அதேபோல் எனது மாமியார் மல்லிகாவின் குணம் என்றும் மாறாது. மாமியார் என்று சொல்வதைவிட அம்மா என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்' என்றார் தன்னுடைய மழலை குஜராத்திய தமிழில் தீப்தி மிஸ்ரா.