முதல் கீமோதெரபி சிகிச்சையின்போதே முடி உதிரத் தொடங்கியதால் அதற்காக வருந்தாமல் தன்னம்பிக்கையோடு நானே தலையை மொட்டை அடித்துக்கொண்டேன். சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக உள்ளதால் தற்போது திரும்பவும் முடி வளர்ந்துவிட்டது. அச்சம்தான் மனிதனுக்கு முதல் எதிரி, எனவே அச்சத்தைப் போக்கி தைரியத்துடன் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து முழுமையாக குணம் பெறலாம்.
லி. சரஸ்வதி (58), நீலகிரி: தலையின் உச்சியில் பரு போன்று இருந்தது. பரு தானே என்று அலட்சியமாக இருந்ததால் பின் சீழ் வடிய ஆரம்பித்தது. இதனால் உதகையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது கோவையில் சென்று காட்ட அறிவுறுத்தினார். அதன்பின் 2016 ஆம் ஆண்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டோம். இங்கு வந்து பரிசோதித்தபோது புற்றுநோய்க் கட்டிபோல உள்ளதாகவும், உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. கட்டி அகற்றப்பட்ட இடத்தில், கால் பகுதியில் இருந்து சதை எடுத்து பதியப்பட்டது. பின் கடந்த 6 ஆண்டுகளாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் நலமாக இருக்கிறேன்.