/

கரோனாவால் பாதியாக சரிவடைந்தது இந்திய பின்னலாடை ஏற்றுமதி

கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் பாதியாக சரிவடைந்துள்ளது.

News image
பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

ஆர். தர்மலிங்கம்


கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் பாதியாக சரிவடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் ரூ.9,342 கோடிக்கு மட்டுமே பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சீனா, வியத்நாம், வங்கதேசம், இலங்கை, இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமானது கடந்த 4 மாதங்களில் சரிபாதியாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் கரோனா தொற்று குறையாமல் இருப்பதும், பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் இருப்பதும் ஏற்றுமதி வர்த்தகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.

மத்திய அரசின் டிஜிசிஐ&எஸ் (Directorate General of Commercial Intelligence and Statistics) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி 2020 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் இந்திய அளவில் ரூ.9,342 கோடிக்கு ஏற்றுமதி நடைபெற்றது. இதில், திருப்பூரில் இருந்து மட்டும் ரூ.4,324 கோடிக்குப் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 2019 ஆம் ஆண்டு இதே கால கட்டத்தில் இந்திய அளவில் ரூ.18,465 கோடிக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இதில், திருப்பூரில் இருந்து மட்டும் ரூ.8,590 கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது.  

கரோனாவில் இருந்து தொழில் துறையை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதாரத் திட்டத்தையும் அறிவித்திருந்தார். அதே வேளையில், துணி முகக் கவசங்கள், 2,3 அடுக்கு முகக் கவசங்கள், கையுறைகளுக்கான ஏற்றுமதிக்கான தடையையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. 

கடந்த ஆண்டின் இலக்கைஎட்டுவது கடினம் 
இந்திய அளவில் 2019-20ஆம் ஆண்டில் ரூ.53,145 கோடிக்குப் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்ற நிலையில் கடந்த 4 மாதங்களில் ரூ.9,342 கோடிக்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் திருப்பூரில் ரூ.24,750 கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்ற நிலையில் இந்த நிதி ஆண்டில் முதல் 4 மாதங்களில் ரூ.4,324 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறியதாவது: கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஏற்றுமதி வர்த்தகம் குறைவாகவே இருந்தது. அதே வேளையில் ஜூன் மாதம் 40 சதவீதமும், ஜூலை மாதத்தில் 60 சதவீதமும் வர்த்தகம் அதிகரித்துள்ளது. உலக அளவில் பின்னலாடைகளுக்கான நுகர்வு குறைந்துள்ளது. மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 20 சதவீத கடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடி வரையில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

 மேலும், ரூ.50 கோடி வரையில் கடன் இருக்கும் நிறுவனங்கள் கூடுதலாக ரூ.10 கோடி கடன் பெற்று தொழில்களை சீரமைத்துக் கொள்ளலாம். இதன்மூலமாக மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததில் ஜூலை வரையில் ரூ.1.27 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 

அதே வேளையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் தொழிலாளர்களுக்குத் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பி.எஃப்.தொகையை அரசே செலுத்துவதாக அறிவித்துள்ளது. அதேபோல ஜிஎஸ்டி, டிடிஎஸ் கட்டுவதற்கான தேதியையும் அரசு நீட்டித்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆர்டர்களும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன. ஆகவே, வரக்கூடிய மாதங்களில் பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு 
திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் கரோனா அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதன் காரணமாகவும் பின்னலாடை உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும்; இதுதவிர, வெளிநாடுகளில் பின்னலாடைகளுக்கான நுகர்வு அதிகரித்தால் மட்டுமே திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி அதிகரிக்கும் என்று தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.