இம்முறை நிஹாரிகா காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடிச் சென்றார். தனக்கு இத்தனை சொந்தங்கள் இருந்தும் யாரும் கவனிப்பாரில்லை. தனக்கு படிக்க வேண்டும் அதற்கு அப்பா தரப்பில் உதவி தேவை என காவல்துறையில் அவர் கோரிக்கை வைத்தார். காவல்துறை தலையீட்டால் அருகிலிருந்த பள்ளியொன்றில் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு படிக்கலாம் என முடிவானது. அப்பா முதல் சில மாதங்களுக்கு சரியாக கட்டணம் செலுத்தியவர் பிறகு எல்லாம் மறந்தார் போல ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதையாக கைவிட்டு விட்டார். அந்த சமயத்தில் என் ஜி ஓவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, நிஹாரிகாவிடம் வந்து 'உன் பெரியப்பா, அப்பாவிடம் நானே முறையாக கட்டணம் செலுத்த வைக்கிறேன், நீ என் மகளைப் போலிருக்கிறாய் ,இனிமேல் கட்டணம் செலுத்தி ஹாஸ்டலில் இருக்க வேண்டியதில்லை. என் வீட்டில் வந்து என்னுடனே நீ தங்கி விடு.' என பாசம் பொங்க அழைக்கவே. தாயில்லாப் பெண் நிஹாரிகா அதை நம்பி அவருடன் சென்று அவரது வீட்டில் வசிக்கத் தொடங்கி இருக்கிறாள்.