வேலைக்குச் செல்லும் பெற்றோர், வேலைத்தளத்தில் தமது நிறுவனங்களில் தாம் எத்தனை பெரிய அல்லது எத்தனை சிறிய பொறுப்பில் இருந்த போதிலும், பெற்ற குழந்தைகளுக்குத் தங்களது அருகாமை தேவை என்று வந்தால், எந்த வேலையாக இருந்தாலும் அதைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டோ அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து வைத்து விட்டோ தங்களது குழந்தைகளுடன் இருந்து அவர்களது சந்தோசத்தையோ அல்லது துக்கத்தையோ பகிர்ந்து கொண்டு அந்த நேரத்திற்கான முக்கியத்துவத்தை அளிக்கத் தவறக்கூடாது என உறுதியாக முடிவெடுக்க வேண்டும். இது நடைமுறையில் மிக மிகக் கடினமான காரியம் தான். ஆனால், நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுக்கு மேலதிகாரியாக இருப்பவரிடமோ அல்லது உங்களது அலுவலக H R மேலாளரிடமோ உங்களது நிலையை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இருந்தால், நீங்கள் பார்க்கும் வேலைக்கு குந்தகம் விளைவிக்காமல், வேலைக்கும் பங்கம் ஏற்படாமல் உங்களது குடும்பம் மற்றும் பிள்ளைகளுக்கான தருணங்களையும் உங்களால் சரியாகக் கையாள முடியும் எனும் நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் பழுதின்றி உங்கள் நிர்வாகத்துக்கு ஏற்படுத்த முயற்சியுங்கள். இதனால் உங்களுக்கு வேலைத்தளத்தில் கிடைக்கும் சிறு சுதந்திரக் காற்றின் மூலம் வீடு, வேலை எனும் இரட்டைக் குதிரைச் சவாரியை உங்களால் ஒரே நேர்கோட்டில் சீரான வேகத்தில் செலுத்தி வெற்றி காண முடியும்.