1.பொருத்தமில்லாத பாடப் பொருள் மற்றும் ஊக்கமற்ற கற்பித்தல் முறை, நம் கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.
2.திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது. மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.