அது மட்டுமல்ல, இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அளித்த சிவில் மருத்துவமனை ஃபாரன்சிக் துறை தலைவரான டாக்டர் தீபக் மாத்தூர் தனது பரிசோதனை முடிவில் தெரிவித்திருப்பது என்னவென்றால், பிரகாஷ் சிங்கின் பரிசோதனை முடிவைப் பொருத்தவரை அவருடையது முற்றிலும் தற்கொலை தான். ஆனால், அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின் படி பார்த்தால் அவர்கள் இறப்பதற்கு முன்பு கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறுகிறார். அவர்களது உடலில் உள்ள ஆழமான காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் தாக்கப்பட்ட சில நிமிடங்களில் மரணித்திருப்பது தெரிய வருகிறது. அத்துடன் கொலைச்சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 2 மணிக்குள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
கொலையுண்டவர்களில் மகள் அதிதியின் உடலில் 12 ஆழமான காயங்களும், மகன் ஆதித்யாவின் உடலில் 8 ஆழமான காயங்களும், மனைவி சோனுவின் உடலில் 19 இடங்களில் ஆழமான காயங்களும் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இந்தக் காயங்களில் பெரும்பான்மையானவை அவர்களது தலைப்பகுதியில் இடம்பெற்றிருப்பது இந்தக் கொலையின் நூதனக் குறியீடாகக் கருதப்படுகிறது. பிரகாஷ் சிங் தனது மனைவி மற்றும் வாரிசுகளை தலையில் பல இடங்களில் பலமாகத் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
பிரகாஷ் சிங் குடும்பத்தில் ஞாயிறு இரவு நடந்த கொடூர சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் என்றால் அது அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட 4 வளர்ப்பு நாய்கள் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும். அக்கம்பக்கத்தார் பேச்சைக் கேட்டு வீட்டு வேலைக்காரப் பெண்மணி ஜன்னலின் நுழைந்து கஷ்டப்பட்டு தவழ்ந்து வீட்டினுள் நுழைந்து எட்டிப் பார்த்த போது இந்த 4 வளர்ப்பு நாய்களும் தங்களது எஜமானர்களின் உடலைச் சூழ்ந்து அமர்ந்து விடாமல் குலைத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.