இது தமிழகத்தில் பிறந்த தமிழறிஞர் ஒருவரால் எழுதப்பட்ட வரலாற்று விளக்கம். ஆனால் இக்கருத்து மாநிலத்துக்கு மாநிலம் அங்கிருக்கும் அறிஞர்களின் வரலாற்று அறிவுக்கு ஏற்ப மாறுபடும் என்றே கருதுகிறேன். வடக்கிலிருப்பவர்களுக்கு தென்னகம் முழுதுமே திராவிட நாடு தான். அப்படிப் பார்த்தால் ஆந்திரம், கர்நாடகம், ஆந்திர எல்லையை ஒட்டிய ஒரிஸ்ஸா பகுதி, தமிழகம், மலையாள நாடு எல்லாமும் சேர்ந்தது தான் திராவிட நாடு என்று சொல்லப்பட்டு வந்தது. நாடு விடுதலை அடைந்து முதன்முதலாக காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது ‘திராவிடம்’ என்ற பதம் காங்கிரஸ் அல்லாது அரசியல் ஆதிக்கம் பெற்று பதவிக்கு வர நினைத்த பிற கட்சியினருக்கு ஒரு துருப்புச் சீட்டாக உபயோகப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்றும் கூட அப்படித்தான் முதலில் ஆரியம், திராவிடம் என்றார்கள். பிறகு இப்போது திராவிடம் என்ற பதமும் உதறப்பட்டு தமிழ்நாடு தமிழனுக்கே, தெலுங்கு தேசம் தெலுங்கர்களுக்கே, கர்நாடகம் கன்னடனுக்கே, கேரளம் மலையாளிக்கே என்றெல்லாம் முழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். வடக்கிலும் இதே நிலை தான் என்றாலும் அவர்களில் யாராலுமே தங்களது மாநிலத்தைப் பற்றியதான பூர்வீக வரைபடம் மிகச்சரியானதாக நினைவுகூரப்படுமா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. தமிழகத்தில் திராவிடர் கழகம் என்ற பெயரில் திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்து ஈ வெ ரா பெரியார் தலைமையில் தனிக்கட்சியே உதயமானது. பெரியாரிடம் இருந்து பிரிந்து சென்ற அண்ணா ஆட்சிக்கு வரும் முன் திராவிட நாடு கோரிக்கையைத் தனித்தமிழ்நாடு கோரிக்கையாக மாற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அண்ணாவின் தேர்தல் பிரச்சாரங்கள் அத்தனையும் வரலாறு படைத்தவை. ஆயினும் தமது தனித்தமிழ் நாட்டு கோரிக்கையை இந்தோ சீனப்போரை முன்னிறுத்தி வாபஸ் பெற்றார் அண்ணா என்கிறது மைதிலி ராஜேந்திரன் எழுதிய ‘கலைஞரின் இந்தி எதிர்ப்பு போராட்டம்’ நூல்.