டீச்சருக்கும், மாஸ்டருக்கும் சந்தான பாக்யம் இல்லை. ஒருவர் முகத்தைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டும், பழித்துக் கொண்டும் அவ்வப்போது சிறுசிறு சண்டையிட்டுக் கொண்டும் பிறகு உருகிப்போய் அழுது சமாதானமாகிக் கொண்டும் அவர்கள் இருவரும் ‘தங்களுக்குத் தாங்களே துணை’ எனும் ரீதியில் அந்த வாழ்வை அனுபவித்துத் தீர்த்துக் கொண்டிருக்கையில் அவர்களது வாழ்க்கையில் ஒரு மின்மினிப் பூச்சி போல காலடி எடுத்து வைக்கிறாள் மாயா. அவள் அறிமுகமாகும் காட்சி அமைதியோ அமைதி என்பதோடு அழகும் கூட. ஓடத்தில் வெற்றிலை எச்சிலைத் துப்பிக் கொண்டே வரும் தந்தை நம்பூதிரித் திருமேனியை அவள் அசூயையாகப் பார்க்கும் போது தெரிகிறது அவளுக்கு தன் தந்தை என்ற மனிதரின் மீதிருக்கும் அச்சமும், வெறுப்பும்.