சென்னை, என்ற இன்றைய மாநகரத்தின் தோற்றம் இப்படி உருவானது தானென்றாலும்... சென்னப்பட்டிணத்தை ஒட்டியிருந்த அப்போதைய பேரூர் அமைப்புகளான மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், திருவான்மியூர், போன்ற இடங்கள் சென்னப்பட்டிணத்தைக் காட்டிலும் மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவையாக இருந்தன. சென்னையிலுள்ள மயிலாப்பூர் பல்லவ அரசின் முக்கியத் துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கிபி 52 முதல் 70 வரை கிறிஸ்தவ மத போதகராக இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதற்கான சரித்திரச் சான்றுகளும் சுட்டப்படுகின்றன. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர்கள் 1522 ஆம் ஆண்டு ‘சாந்தோம்’ என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவியிருந்தனர். பின்பு 1612 ஆம் ஆண்டில் சாந்தோம் பகுதி டச்சுக்காரர்களுக்குக் கைமாறியது. 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோஹன் உள்ளிட்டோரால் ஆங்கிலேயருக்கான குடியிருப்பாக சாந்தோம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட ஓராண்டுக்குப் பின் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்புப் பகுதிகள் அடுத்தடுத்து பெருமளவில் வளர்ச்சி கண்டன. சென்னப்பட்டிணத்தை ஒட்டியிருந்த கிராமப்புறப் பகுதிகளான திருவல்லிக்கேணி, எழும்பூர், சேத்துப்பட்டு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சென்னப்பட்டிணத்துடன் இணைந்தன. 1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர்கள் செயிண்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போர்த்துகீசியர் வசம் வந்தது. தற்போதையை சென்னைக்கு வடக்கே 1612 ஆம் ஆண்டில் புலிக்காடு என்ற பகுதியில் போர்த்துகீசியர்களின் குடியிருப்புகள் உருவாகின. 1688 ஆம் ஆண்டில் சென்னை முதல்நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமை சென்னைக்கு வந்தது.