இந்தியாவுக்கும், காஷ்மீருக்குமிடையே அரசியல் உறவுகள் பற்றி காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை செய்துள்ள தீர்மானங்களை உடனடியாக அமல் நடத்துவதற்கு ராஷ்டிரபதி உத்தரவு பிறப்பித்து விட்டார். சட்டபூர்வமான வார்த்தைகளை நீக்கி விட்டுப் பார்த்தால், சில விஷயங்களைத் தவிர காஷ்மீர், இந்தியாவில் உள்ள இதர ராஜ்ஜியங்களைப் போல், இந்தியாவின் ஒரு அங்கமாகிறது என்று தான் அர்த்தம். காஷ்மீரின் விஷேச நிலைமையை முன்னிட்டுச் சில விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீர் அடியோடு இந்தியாவோடு சேர்ந்து விட்டால், நிரந்தரமான காஷ்மீர் வாசிகளின் நலன்கள் பாதிக்கப்படலாம் என்ற ஒரு பயம் இருந்தது. இந்த பயத்திற்கு நியாயமில்லாமல் இருக்க முடியாது. ஆயினும், கொஞ்சமும் அத்தகைய பயங்களுக்கு இடமளிக்கக் கூடாதென்பதற்காகவே இந்த சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஸ்தாவர சொத்துக்களை வாங்கும் உரிமை, காஷ்மீரில் குடியேறுவது, ராஜ்ய சர்க்கார் உத்யோகங்கள் ஆகிய விஷயங்களில் காஷ்மீரிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு காஷ்மீர் சட்டசபை சட்டமியற்றலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைந்த மற்ற சமஸ்தானங்களுக்கு இல்லாத சலுகைகள் காஷ்மீருக்கு மட்டும் ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்று சிலர் கோணல் கட்சி பேசலாம். காஷ்மீரின் இணைப்பு பற்றிய சம்பவங்களை ஞாபகப்படுத்திக் கொண்டால் இந்த கேள்விகளுக்கு இடமிராது. இந்த விவகாரம் ஐ நா ஸ்தாபனம் வரையில் போய் இன்னம் முடிவடையாமல் இருக்கின்றது. இந்த நிலைமையில் இந்தியா பலவந்தமாக காஷ்மீர் மீது ஒரு அரசியல் ஏற்பாட்டைத் திணிக்கிறது என்ற பழிச்சொல்லுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதே இந்திய சர்க்காரின் விருப்பம். அதனால் தான் காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை செய்துள்ள தீர்மானங்களை மட்டும் அமல் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.