இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் சர்வ வல்லமை கொண்ட நாடுகளாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இருநாடுகளும் வளர்ச்சி கொள்ளத் தொடங்கின. இச்சூழலில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே யார் பெரியண்ணன் என்ற சண்டை நேரடியாக மூளாத போதும் விளையாட்டு, பொருளாதாரம், விண்வெளி ஆய்வுகள் உள்ளிட்ட சாதனைகளில் யார் பெரியவர் என்ற மறைமுகச் சண்டைகள் அவ்வப்போது மூண்டு கொண்டு தான் இருந்தன. இவற்றில் மிக முக்கியமான சண்டையாகக் கருதப்பட்டது, எந்த நாடு முதன்முதலாக விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது எனும் எதிர்பார்ப்பே! இந்தப் போட்டியில் அமெரிக்காவை ரஷ்யா வென்றது. 1961 ஆம் ஆண்டு ரஷ்யா யூரி காகரின் எனும் விண்வெளி விஞ்ஞானியை முதன்முறையாக வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது. இவரே விண்வெளியை வலம் வந்த முதல் மனிதர் என்ற பெருமைக்கு உரியவரானார். ரஷ்யாவின் இந்த சாதனை அமெரிக்காவை தூங்க விடாமல் செய்தது. பொறாமையில் வெந்தது அமெரிக்கா, அதன் விளைவு, அன்றைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அமெரிக்கா நிச்சயமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் என்பதே அந்த அறிவிப்பு.. அறிவிப்பை கென்னடி வெளியிட்டாலும் இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டது அவருக்கும் முன்பு அமெரிக்க அதிபராக இருந்தவரான ஐசனோவரின் ஆட்சிக்காலத்திலிருந்தே! அப்போதே மனிதனை நிலவுக்கு அனுப்பவும், நிலவில் அமெரிக்கா சார்பாக ஒரு அடிப்படை ராணுவத் தளவாடம் அமைக்கவும் ஐசனோவர் கனவு
கண்டார். ஆனால், அந்தக் கனவுகள் நிறைவேற்றப்படுவதற்கான தொழில்நுட்பவசதிகள் அன்றில்லாமல் போன காரணத்தால் திட்டம் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கென்னடி அமெரிக்க அதிபரானதும் முழு வீச்சில் விண்வெளி ஆய்வுப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்த முயற்சிகளில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் அப்போது போட்டி கடினமாகவே இருந்தது. விண்வெளிக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் முயற்சியை இரண்டு நாடுகளுமே வெற்றிகரமாக நிறைவேற்றின. அதைத் தொடர்ந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பவிருப்பதாக கென்னடி அறிவித்ததும் பின் அதை நிஜமாக்கியதும். இந்த விஷயம் வெற்றிகரமாகப் பலிதமான போது இது உலக அதிசயமாகவும் விண்வெளி ஆய்வுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய சாதனையாகவும் பேசப்பட்டது. சர்வதேச அளவில் நிலவில் முதலில் கால் பதித்த வெற்றிகரமான நாடு எனும் பட்டம் அமெரிக்காவுக்கு கிடைத்தது. ஆயினும் அவையெல்லாம் சில காலம் மட்டுமே; மனிதன் நிலவில் கால் பதித்ததற்கு ஆதாரமாக அப்பல்லோ 11 விண்வெளிப்பயணத்தின் போதான புகைப்பட ஆதாரங்களைப் பற்றி தற்போது பெருமளவிலான சர்ச்சைகள் நிலவுகின்றன.