இந்த உலகில் கணவர்களுக்கும், மனைவிகளுக்குமான உளவியல் பிரச்னைகளும், புனிதமான திருமண பந்தத்தின் மீதான வரம்புகள் மீறப்படுகையில் அந்த இருவருக்குள்ளும் நிகழும் அபாயகரமான மாற்றங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் யுகம் யுகமாகத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றைச் சீராக்கிக் கொள்ள வேண்டும் இந்த சமூகத்தின் முன்... உதாரண தம்பதிகளாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முனைப்பு வெகு சிலருக்குத்தான் இருக்கிறது. இன்னும் சிலரோ, ஏதோ பிறந்தோம், கடமைக்கு திருமணம் செய்தோம், பிள்ளைகளைப் பெற்றோம் இதோ பிடிக்கிறதோ, இல்லையோ ஏனோ, தானோவென்றாவது வாழ்ந்து தீர்த்து விட்டுப் போய் விடலாம் என்று விட்டேற்றியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி புரிதலில்லாத சாத்வீகர்கள் வாழும் இதே உலகில் ரஜோ குணத்துடன் அனுதினமும் சண்டையிட்டுக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு வாழும் தம்பதிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்துக்காகவும், சமரசத்துக்காகவும் குவியும் கூட்டமே அதற்கு அத்தாட்சி.