நடுவில் திமுகவில் இருந்த வைகோ, தலைமை மீதான கருத்து வேறுபாட்டின் காரணமாக மதிமுக எனப் பிரிந்தார். வன்னியர் சங்கம் என்று இயங்கிக்கொண்டிருந்த டாக்டர் ராமதாஸ், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி என வளர்ந்தார். ஆரம்ப காலகட்டங்களில் இந்த இரு கட்சிகளுக்கான வரவேற்பு தமிழகத்தில் அதிகமாகவே இருந்தது, ஆனால் இந்த இரு கட்சிகளும் தங்களுக்கான தனித்துவத்தை இழக்கத் துவங்கியது இவர்கள் தேர்தல்கள் தோறும் அமைக்க முற்பட்ட சந்தர்ப்பவாதக் கூட்டணி பேரம் காரணமாகத்தான். இவர்களோடு புதிய அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப்போவதாகக் கருதிக்கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், விஜயகாந்தின் தேமுதிக, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகம், கார்த்திக்கின் அரசியல் கட்சி (அதன் பெயர் மாற்றப்படவிருக்கிறதாம், இப்போதைக்கு பெயர் இல்லை)சீமானின் நாம் தமிழர், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இத்யாதி...இத்யாதி கட்சிகள் எல்லாம் முளைத்துக் கிளை விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கான ஓட்டு வங்கிகளை மனதில் கொண்டு இவர்களை தேர்தல் நேரத்தில் மட்டும் நாய்க்கு பிஸ்கட் போடுவதைப் போல ஓரிரு தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்து அவற்றுக்கான அரசியல் எதிர்காலத்தை கேலிக்கூத்தாக்கி வெறும் லெட்டர் பேட் கட்சிகளாக்கி வைத்திருக்கின்றன மேற்கண்ட திராவிடக் கட்சிகள்.