தஷ்வந்த் சிறைச்சாலையில் தண்டனை அனுபவிப்பதைப் போலத் தெரியவில்லை. மூன்று வேளையும் சிறைச்சாலை உணவைப் போஷாக்காக உண்டு மேலும் திடகாத்திரமாக இருப்பதைப் போலத்தான் தெரிகிறது அந்தக் காணொளியில். ஒரு இளைஞன், தனது வக்கிர புத்திக்காக 7 வயதுச் சிறுமி ஒருத்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அது தோல்வியில் முடிய சிறுமியைக் கொலை செய்து சடலத்தை மறைக்கவும் தான் கொலை வழக்கில் இருந்து தப்பிக்கவும் கிரிமினல் தனமாகச் சிந்தித்து சிறுமியின் உடலை டிராவல் பேகில் வைத்து சில கிலோமீட்டர்கள் பயணித்து புறநகர்ப்பகுதியில் சடலத்தை எரித்து விட்டு வீடு திரும்பியதோடு.... காணாமல் போன சிறுமியைத் தேடிய கூட்டத்தினருடனும் அப்பாவியாக வேடமிட்டு தான் கொன்ற சிறுமியை தேடுவது போல நடிக்கவும் செய்திருக்கிறான். இதற்கான சிசிடிவி கேமிரா பதிவுகள் அக்கொலை வழக்கின் முக்கிய ஆவணங்களாக கருதப்பட்டு அத்தனை ஊடகங்களிலும் வெளியாகின. அவன் செய்தது ஒற்றைக் கொலை அல்ல, இடையில் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு ஜாமீன் பெற்று வீடு திரும்பிய போது, பணத்திற்காக தனது சொந்தத் தாயைக் கொலை செய்ததற்கும் ஆவணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் நேர்காணலில் கேள்வி கேட்கப்படுகையில்... சற்றும் அசராது... செய்த படுபாதகச் செயல்களுக்காக கொஞ்சமும் அசராது... தன்னை அப்பாவி எனக் காட்டிக் கொள்ளும் விதத்தில் தஷ்வந்த் பதில் சொல்வதைக் கேட்கையில் இப்படியான குயுக்தியான மூளை கொண்ட குற்றவாளிகளை சிறைச்சாலைகள் மூன்று வேளையும் உணவிட்டு போஷாக்காக வளர்ப்பதின் காரணம் என்ன? என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.