இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி ஆகி விட்டதற்கு இதுவும் ஒரு உதாரணமாகி இருப்பதே உண்மை. ஏற்கனவே டெல்டா பகுதி விவசாயத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்து அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து மீத்தேன் எடுப்பதற்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும் அப்பகுதிகளை தனியார் நிறுவனங்களுக்கு அடிமட்ட விலையில் தாரை வார்த்துக் கொடுக்க நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு மாநில அரசு ஒத்துப்போகிறது. இப்போது வரையிலும் சேதங்களைக் கணக்கிட்டு முடியவில்லை. அந்த அளவுக்கு பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை குலைத்துப் போட்ட கஜா புயல் சீற்றத்தை தேசியப் பேரிடராக அறிவிப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு என்ன கஷ்டம்? அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து எடுத்தா நிவாரணப் பணிகளைச் செய்யப் போகிறார்கள்? மக்களிடமிருந்து பெற்ற வரிப்பணத்தில் இருந்து தானே நிவாரணப் பணிகளைச் செய்யப் போகிறார்கள். பிறகு இத்தகைய பேரழிவை தேசியப் பேரிடராக அறிவிப்பதில் எடப்பாடி, ஓ பி எஸ்ஸுக்கு என்ன கஷ்டம்? ஏன் அவர்கள் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? திண்டுக்கல். கொடைக்கானல் வரை கஜா புயலின் பாதிப்பு இருக்கிறது. இது தேசியப் பேரிடர் இல்லையா? இப்படியான நேரங்களில் மாநில அரசும், மத்திய அரசும் வேடிக்கை பார்க்கும் மனநிலையில் இருப்பதைக் கண்டு தான் இதன் பின்னணியில் கார்ப்பரேட் லாபங்களைக் கணக்கிடும் உள்நோக்கம் இருக்கிறது என்று நாங்கள் எண்ணுகிறோம்.'