அரசு உத்தரவின் பேரில் மரம் வெட்டிகள் ரெனி கிராமத்தின் மரங்களை வெட்டத் தொடங்கியதும், அதைக் கண்ட உள்ளூர்ப் பெண்மணியொருவர் விரைந்து சென்று அதை கிராம மகிளா சங்கத் தலைவியான கெளரா தேவியிடம் தெரிவிக்க, கெளரா தேவியின் தலைமையில் ரெனியின் 27 பெண்கள் திரண்டு வந்து மரம்வெட்டிகளை மரங்களை வெட்ட விடாமல் ஒவ்வொருவரும் அங்கிருந்த மரங்களைச் சூழ்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டு கைகோர்த்து நின்றனர். இது மரம்வெட்டிகளை எரிச்சலூட்டியது. கொடுத்த காசுக்கு வேலை செய்ய விடாமல் என்ன இது? இந்தக் கிராமப் பெண்கள் இப்படித் தொல்லை செய்கிறார்களே என்று கருதி அந்த மரம் வெட்டிகள் தங்களை வேலை செய்ய விடாமல் தடுத்த பெண்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள், கோடாரிகளாலும், உடனிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மூலமாகத் துப்பாக்கிகளைக் காட்டி சுட்டு விடுவதாகவும் மிரட்டினர். ஆனாலும், அந்தப் பெண்கள் அஞ்சியதாகத் தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்கள் தங்களது கோர்த்த கரங்களை விடவில்லை. மரங்களைத் தங்களது குழந்தைகளாகக் கருதி அவற்றைச் சுற்றி கட்டிப் பிடித்துக் கொண்டு அரவணைத்து நின்றார்கள். அவர்கள் மரம் வெட்டிகளிடம் சொன்னது; நீங்கள் எங்களை மீறி மரங்களை வெட்ட விரும்பினால், எங்களைக் கொன்ற பிறகு தான் மரங்களைத் தொட முடியும் என்பதே! மரங்களை விட்டு விலகாவிடில் கொன்று விடப்போவதாகவும் கூட மிரட்டப்பட்டார்கள் தான். ஆயினும் அப்பெண்கள் அஞ்சவில்லை. தீரத்துடன் போராட்டத்திற்கு தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்றனர். இந்தப் பெண்களின் தீரத்தைக் கண்டு அருகிலிருந்த லதா மற்றும், ஹேமாவதி கிராமங்களைச் சார்ந்த பெண்களும் கூட இவர்களுடன் இணைந்து போராட படை திரண்டு முன்வந்தனர். நான்கு நாட்கள் விடாத போராட்டத்தின் பிறகு ஒருவழியாக மரம் வெட்டிகள் பின்வாங்கிச் சென்றனர்.