காவல் நிலையங்கள்... காவல்நிலையங்களைப் பற்றியும் ஏதோ பூர்வ ஜென்ம பாவத்தால் அங்கே செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டவர்களின் கதியையும் பற்றித் தனியாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. அதைத் தான் நம் தமிழ் சினிமாக்களில் காலங்காலமாக கிழி, கிழியென்று கிழித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். காவலர்களில் விரல் விட்டு எண்ணிவிடத்தக்க அளவில் ஒரு சில மனிதாபிமானிகளைத் தவிர பலருக்கும் இந்த நாட்டில் அராஜகமாக நடந்து கொள்வதற்கான உரிமையை அரசே தங்களுக்கு வழங்கியிருப்பதான பாவனை தான் அதிகம். பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்டால் கதை, கதையாகச் சொல்வார்களே! இதோ நேற்றுக் கூட காவலர் ஒருவர், வாகனச் சோதனையின் போது வண்டியை நிறுத்தாமல் சென்றதற்காக கர்ப்பிணிப் பெண் ஒருவரை எட்டி உதைத்ததில் அவர் இறந்ததாக வந்த செய்தியை என்னவென்பது? இத்தனை அராஜகமாக மனிதாபிமானமற்று நடந்து கொள்ளும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது?! காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் இளம்பெண்களை மானபங்கம் செய்த காவல்துறை அதிகாரிகள் பற்றிய கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அத்தனை ஏன் காவல்துறை உயர் அதிகாரிகளின் அராஜகப் போக்கை சிவகாசி ஜெயலட்சுமி, டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு, உள்ளிட்ட சம்பவங்களில் எல்லாம் நாம் அறியாதிருக்கிறோமா என்ன? கிரா வின் கதையொன்றில் சித்தரிக்கப்பட்டதைப் போல இப்போதெல்லாம் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டால் புகார் அளிக்க காவல்நிலையம் சென்றாரகள் எனில் அங்கே அவர்கள் இரண்டாம் முறை பலாத்காரத்துக்கு உட்படுத்தப் படலாம் என்ற நிலையே எஞ்சியுள்ளது. மக்களிடையே காவல்நிலையங்களைப் பற்றியதான சித்திரம் இப்படித்தான் இருக்கிறது. காவல்துறை அதிகாரிகளை இப்போதும் சிங்கம், புலி, கரடிகளைப் போல மிரட்சியுடன் பார்க்கும் நிலை தான் பொதுமக்களுக்கு! காவல்துறை மக்களின் நண்பன் என்று பெயரளவிற்கு அவர்கள் ஸ்தாபிக்க நினைத்தாலும்... அவர்களில் பெரும்பாலானோரது மோசமான நடவடிக்கைகளால் நடைமுறையில் அது சாத்தியமில்லாத நிலையே நீடிக்கிறது.