கெளசல்யா என்ற இந்த சகோதரிக்கு வந்த ஞானத்தை போன்ற ஏக்கம் அந்தக்காலத்திலும் குறவர் சமுதாயப் பெண்களிடம் இருந்திருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான் ‘குறத்தி மகன்’. அதில் குறத்தியாக நடித்த கே.ஆர் விஜயாவை அவரது கணவரும் குறவர் சமுதாயத் தலைவருமான ஜெமினி கணேசன், ஒரு நாளிரவு தங்களது கூட்டத்தை விட்டு பாசிமணி, ஊசிமணி விற்கச் சென்ற மனைவி தாமதமாக வந்தார் என்று காரணம் காட்டி அவரை கூட்டத்திலிருந்தே விலக்கி வைத்து கொடிய தண்டனை அளித்து விடுவார். தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கியும் கணவர் தன்னைப் புரிந்து கொள்ளாததற்கு காரணம் ஜாதி புத்தியே எனக் கூறி வெகுண்ட கே ஆர் விஜயா, தன்னை விலக்கி வைத்த சமூகத்தில் தன் மகன் வளர்ந்தால், அவனும் அவர்களைப் போல கொக்கு, குருவி சுட்டுக் கொண்டு, மூடநம்பிக்கை, ஜாதியின் பெயரிலான புரியாத முரட்டுத்தனமான கட்டுப்பாடுகளுடனான மனப்பான்மையோடு தான் வளர்வான். அப்படி ஆகக் கூடாது. அவன் படிக்க வேண்டும் என்று கணவரிடம் சண்டையிட்டு குழந்தையை அங்கிருந்து பிரித்து அழைத்து வந்து படித்த தம்பதியினரிடம் விட்டு வளர்க்கச் சொல்லி பணிவுடன் கேட்டுக் கொள்வார். இப்படிச் செல்லும் அந்த ‘குறத்தி மகன்’ திரைப்படக் கதை.